ஆர்.கே.நகரில் பணப்பட்டுவாடாவை தடுக்க தேர்தல் அதிகாரிகள் ஆலோசனை!

ஆர்.கே.நகரில் நடைபெற இருக்கும் தேர்தலில் பணப்பட்டுவாடாவை தடுக்க இன்று தேர்தல் அதிகாரிகள் ஆலோசனை நடத்தினர். 

Last Updated : Dec 4, 2017, 04:20 PM IST
ஆர்.கே.நகரில் பணப்பட்டுவாடாவை தடுக்க தேர்தல் அதிகாரிகள் ஆலோசனை! title=

ஆர்.கே.நகர் தொகுதியில் தேர்தலை முன்னிட்டு தேர்தல் ஆணையம் தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. அரசியலில் கட்சிகளுக்கு பல்வேறு கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளது.

இந்த நிலையில் தேர்தல் பணிகள் குறித்து மாநகராட்சி ரிப்பன் மாளிகையில் ஆலோசனை கூட்டம் இன்று நடைபெற்றது. சென்னை மாவட்ட தேர்தல் அதிகாரி கார்த்திகேயன் தலைமையில் நடந்த இந்த கூட்டத்தில் மாவட்ட கலெக்டர் சிவகுமார் 4 பார்வையாளர்கள், தேர்தல் அதிகாரிகள், தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ள அதிகாரிகள், வங்கி அதிகாரிகள் மற்றும் கல்வி அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

தேர்தலை அமைதியான முறையில் சுமூகமாக நடத்தி முடிக்க அனைத்து ஏற்பாடுகளையும் செய்ய வேண்டும். பணப்பட்டுவாடாவை தடுக்க எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டன. வங்கிகளில் பெரும்தொகை மொத்தமாக எடுப்பவர்கள் பற்றிய விவரங்களையும், அதற்கான காரணத்தையும் வங்கி அதிகாரிகள் அறிந்திருக்க வேண்டும் என்றும் அறிவித்தனர்.

இதையடுத்து, கண்காணிப்பு கேமரா மூலம் அரசியல் பிரமுகர்களின் நடவடிக்கையை கண்காணிக்க வேண்டும் என்றும் ஆலோசிக்கப்பட்டது. ஆர்.கே.நகர் தொகுதியில் கணக்கெடுப்பின்படி 23 ஆயிரம் இருசக்கர வாகனங்கள் உள்ளன. இதுதவிர கார், ஆட்டோ, சுற்றுலா பயன்பாட்டு வாகனங்களும் இருக்கின்றன.

இவற்றுக்கு ஓரிரு நாட்களில் ‘ஸ்டிக்கர்’ வழங்கவும், அதனை வாகன உரிமையாளர்கள் எப்படி பயன்படுத்த வேண்டும் என்பது பற்றிய அறிவுரைகள் வழங்குவது பற்றியும் ஆலோசிக்கப்பட்டது.ஆர்.கே.நகர் தொகுதியில் உள்ள வாகனங்களுக்கு மட்டும் ‘ஸ்டிக்கர்’ ஒட்டப்படுவதால் மற்ற மாவட்ட வாகனங்கள் எவை என்பதை தெளிவாக கண்காணிக்க முடியும். இதன் மூலமும் பணப்பட்டுவாடாவை தடுக்க முடியும் என்று தேர்தல் ஆணையம் ஆலோசித்துள்ளது.

Trending News