அபாய அளவில் காற்று மாசு! டெல்லியில் கனரக வாகனங்களுக்கு 3 நாட்களுக்கு தடை

டெல்லியில் நேற்றிரவு முதல் மூன்று நாட்களுக்கு கனரக வாகனங்கள் நுழைவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

Updated: Nov 9, 2018, 08:24 AM IST
அபாய அளவில் காற்று மாசு! டெல்லியில் கனரக வாகனங்களுக்கு 3 நாட்களுக்கு தடை

டெல்லியில் நேற்றிரவு முதல் மூன்று நாட்களுக்கு கனரக வாகனங்கள் நுழைவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

டெல்லியில் காற்று மாசின் அளவு அபாய அளவிலேயே தொடர்வதால், பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் கடும் சிரமம் அடைந்துள்ளனர். டெல்லி உள்ளிட்ட வடமாநிலங்களில் அதிகரித்து வரும் காற்று மாசு, அங்கு வசிப்பவர்களுக்கு பெரும் அச்சுறுத்தலாக இருக்கிறது. 

டெல்லியில் காற்று மாசுபாடு மிகவும் மோசமான நிலைக்கு சென்றுள்ள நிலையில், பனிமூட்டமும் காணப்படுவதால், பொதுமக்கள் மூச்சுவிடுவதில் கூட கடும் சிரமம் அடைந்துள்ளனர். பனிகலந்த மாசு, சாலைகளை ஆக்கிரமித்துள்ளதால், வாகன ஓட்டிகள் முகப்பு விளக்கை ஒளிரவிட்டபடி செல்கின்றனர்.

இந்நிலையில் டெல்லியில் காற்று மாசு அபாய அளவை எட்டியுள்ள நிலையில் நேற்றிரவு 11 மணி முதல் சரக்கு லாரிகள், டேங்கர் லாரிகள் போன்ற கனரக வாகனங்கள் செல்ல விடாமல் தடுத்து நிறுத்தப்பட்டு வேறு பகுதிகளுக்குத் திருப்பி விடப்படுகின்றன. டெல்லியின் எல்லைப் பகுதிகளில் சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டு போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். காற்று மாசு குறைந்தபாடில்லை என்பதனால் தற்போது கனரக வாகனங்களுக்கு 3 நாட்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.