முத்தலாக் விவகாரம்: ராஜ்ய சபா நாளை வரை ஒத்திவைப்பு!

டெல்லி மேல்-சபையில் முத்தலாக் மசோதா இன்று தாக்கல் செய்யப்படும் நிலையில், மசோதாவில் திருத்தத்தை வற்புறுத்த வேண்டாம் என்று காங்கிரசுக்கு மத்திய அரசு வேண்டுகோள் விடுத்தது.

Updated: Jan 3, 2018, 04:28 PM IST
முத்தலாக் விவகாரம்: ராஜ்ய சபா நாளை வரை ஒத்திவைப்பு!
ZeeNewsTamil

முஸ்லிம்களிடையே நடைமுறையில் உள்ள உடனடி ‘முத்தலாக்’ முறைக்கு முற்றுப்புள்ளி வைப்பதற்காக, பாராளுமன்ற மக்களவையில் ‘முஸ்லிம் பெண்கள் திருமண உரிமை பாதுகாப்பு மசோதா கொண்டுவரப்பட்டது. அந்த மசோதா நிறைவேற்றப்பட்டது.

மசோதா மீது காங்கிரஸ் கட்சி சில திருத்தங்களை கொண்டு வந்தது. ஆனால், அவற்றின் மீது ஓட்டெடுப்பு நடத்த வற்புறுத்தவில்லை.

மசோதாவை அப்படியே நிறைவேற்ற முயற்சிக்காமல், மாநிலங்களவை தேர்வு குழுவின் பரிசீலனைக்கு அனுப்பி வைக்க வேண்டும் என்று இடதுசாரி கட்சிகள், தேசியவாத காங்கிரஸ் ஆகியவை மட்டுமின்றி, பா.ஜனதாவின் கூட்டணி கட்சியான சிவசேனாவும் வற்புறுத்தி வருகிறது.

ஆனால், மக்களவையில் ஏற்கனவே விவாதிக்கப்பட்டு விட்டதால், எந்த குழுவுக்கும் அனுப்பத் தேவையில்லை என்று மத்திய அரசு கூறி வருகிறது.

இந்நிலையில், இன்று பிற்பகல் 3.15 மணியளவில் பாராளுமன்ற மாநிலங்களவையில் சட்டத்துறை மந்திரி ரவி சங்கர் பிரசாத் முத்தலாக் ஒழிப்பு மசோதா தாக்கல் செய்தார்.  இந்த மசோதாவில் தாங்கள் வலியுறுத்திய திருத்தங்கள் இடம்பெறாததற்கு எதிர்ப்பு தெரிவித்து எதிர்க்கட்சி எம்.பி.க்கள் கடும் அமளியில் ஈடுபட்டனர்.

இந்த அமளிக்கு இடையே பேசிய சட்டத்துறை மந்திரி ரவி சங்கர் பிரசாத், ‘பாராளுமன்ற மக்களவையால் முத்தலாக் ஒழிப்பு மசோதா நிறைவேற்றப்பட்ட பிறகும் உத்தரப்பிரதேசம் மாநிலம், மொராதாபாத்தில் ஒரு பெண்ணுக்கு அவரது கணவர் முத்தலாக் கொடுத்துள்ளார்’ என குறிப்பிட்டார்.

இதுதொடர்பாக, தொடர்ந்து மாநிலங்களவை தேர்வு குழுவின் பரிசீலனைக்கு அனுப்பிவைக்க காங்கிரஸ் எம்.பி. ஆனந்த் சர்மா வலியுறுத்தினார்.

 

 

 

 

 

 

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by clicking this link

Close