அணு ஆயுதத்தை கைவிட முடியாது: அமெரிக்காவை எச்சரித்த வட கொரியா!

அணு ஆயுதங்களைக் கைவிடுமாறு அமெரிக்கா தொடர்ந்து வலியுறுத்தினால், டொனால்ட் ட்ரம்ப் மற்றும் கிம் ஜாங்-உடனான சந்திப்பு மாற்றம் செய்யப்படலாம் என்று  வட கொரியா எச்சரிக்கை விடுத்துள்ளது!

Updated: May 16, 2018, 12:58 PM IST
அணு ஆயுதத்தை கைவிட முடியாது: அமெரிக்காவை எச்சரித்த வட கொரியா!

மிகவும் எதிர்பார்க்கப்படும் டிரம்ப் மற்றும் கிம் இடையிலான சந்திப்பு ஜூன் 12-ம் தேதி நடக்க உள்ளது. தனது அணு ஆயுத திட்டங்களை கைவிட தயாராய உள்ளதாக வட கொரியா கூறிய பிறகு, இந்த பேச்சுவார்த்தைக்கு உடன்பாடு ஏற்பட்டது.

அமெரிக்கா ஒருதலைபட்சமாக எங்களது அணு ஆயுதங்களைக் கைவிடுமாறு கோரிக்கை வைத்தால், அமெரிக்கா- வட கொரியா பேச்சுவார்த்தைக்கு நாங்கள் ஒப்புக்கொண்டபோதிலும், இந்த முடிவு மறுபரிசீலனை செய்யப்படலாம் என வட கொரிய துணை வெளியுறவு அமைச்சர் கிம் கீ-க்வான் கூறியதாக வட கொரிய அரசு ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.

முன்னதாக, சர்வதேச நாடுகளின் எதிர்ப்பையும் மீறி வடகொரியா ஏவுகணை சோதனைகளையும், அணு குண்டு சோதனைகளையும் தொடர்ந்து நடத்தி வந்ததால் கொரிய தீபகற்பத்தில் பெரும் பதற்றம் நிலவி வந்தது. பல உலக நாடுகள் வட கொரியா மீது பொருளாதார தடை விதித்தது. ஆனால் எதற்கும் செவி சாய்க்காமல் வடகொரியா கிம் ஜோங் உன் தொடர்ந்து அணு ஆய்த சோதனைகளை மேற்க்கொண்டார். 

ஒரு கட்டத்தில் நாங்கள் நினைத்தால் அமெரிக்காவை அழித்துவிடுவோம் என்று வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் பகிரங்கமாக மிரட்டல் விடுத்தார். வடகொரிய அதிபரின் மிரட்டலை அடுத்து, அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப், வடகொரியாவை அழித்து விடுவோம் என மிரட்டல் விடுத்தார். இதனால் கொரிய தீபகற்பத்தில் போர் பதற்றம் ஏற்பட்டது. 

இந்நிலையில், தென் கொரியாவில் புதிய அதிபர் பதவியேற்றவுடன், வட கொரியாவுடன் பேச்சுவாரத்தை நடத்த தயார் என அறிவித்தார். சமீபத்தில் தென்கொரியாவில் நடந்த குளிர்கால ஒலிம்பிக் போட்டியில் வடகொரியா பங்கேற்றதைத் தொடர்ந்து அந்த நாடுகள் இடையே ஒரு இணக்கமான சூழல் உருவாகியது. கடந்த மாதம் (ஏப்ரல்) 27 ஆம் இரு நாட்டி தலைவர்களும் சந்தித்து பேசிக்கொண்டனர். இதனை வரலாற்று சிறப்புமிக்க சந்திப்பு என உலக நாடுகள் பாராட்டினர். 

இதையடுத்து, அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப்புடன் பேச்சு நடத்த தயார் என்று வடகொரிய அதிபர் கிம் கடந்த 4-ம் தேதி அறிவித்தார். இதையடுத்து, வரும் ஜூன் 12 ஆம் தேதி வடகொரியா அதிபர் கிம் ஜோங் உன் - அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் ஜூன் 12-ம் தேதி சிங்கப்பூரில் சந்தித்து பேச உள்ளனர். 

இதையடுத்து, வட கொரியா அணு குண்டு பரிசோதனை நடத்தும் மையத்தையும், ரகசிய சுரங்கங்களையும் 23ம் தேதி முதல் 25-ம் தேதிக்குள் அகற்றி விட அரசு முடிவெடுத்திருந்தது. வட கொரியாவின் இந்த முடிவுக்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் நன்றி தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.