வன்கொடுமை சட்டம்: நாகரிக சமுதாயத்தை உருவாக்குக -ராமதாஸ் அறிக்கை

வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் உச்சநீதிமன்றம் ஆணையிட்ட சில மாற்றங்களை வரவேற்கும் பாமக நிறுவனர் ராமதாஸ். அதைப்பற்றி அவர் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

Shiva Murugesan சிவா முருகேசன் | Updated: May 17, 2018, 03:50 PM IST
வன்கொடுமை சட்டம்: நாகரிக சமுதாயத்தை உருவாக்குக -ராமதாஸ் அறிக்கை
Zee News Tamil

வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் உச்சநீதிமன்றம் ஆணையிட்ட சில மாற்றங்களை வரவேற்கும் பாமக நிறுவனர் ராமதாஸ். அதைப்பற்றி அவர் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது:-

வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின்படி, எந்தத் தவறும் செய்யாத அப்பாவி ஒருவரை எந்தவிதமான விசாரணையும் இன்றி கைது செய்து சிறையில் அடைக்க முடியும் என்றால் நாம் நாகரிகமான சமுதாயத்தில் வாழவில்லை என்று தான் பொருளாகும் என்று உச்சநீதிமன்றம் கூறியிருக்கிறது. அப்பாவிகள் மீது தவறாக பயன்படுத்தப்படும் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் சில மாற்றங்களை செய்து உச்சநீதிமன்றம் ஆணையிட்ட நிலையில் அத்தீர்ப்பை மறு ஆய்வு செய்யக்கோரி மத்திய அரசு தாக்கல் செய்த சீராய்வு மனு மீதான விசாரணையின் போது உச்சநீதிமன்ற நீதிபதி ஏ.கே. கோயல் இவ்வாறு தெரிவித்தார்.

வன்கொடுமை தடுப்புச் சட்டம் தவறாக பயன்படுத்தப்படுவதை தடுக்கும் வகையில் உச்சநீதிமன்றம் தெரிவித்த சில திருத்தங்களை செய்யாமல், அச்சட்டத்தை அதன் பழைய நிலையிலேயே தொடர அனுமதிக்கும் வகையில் அவசர சட்டம் பிறப்பிக்கவும், இந்த சட்டத்தை அரசியலமைப்புச் சட்டத்தின் ஒன்பதாவது அட்டவணையில் சேர்க்கவும் மத்திய அரசு முயன்று வரும் நிலையில், அதற்கு எதிரான உச்சநீதிமன்றத்தின் சாட்டையடியாகவே இதை பார்க்க வேண்டியிருக்கிறது. 

‘‘ஒரு தரப்பு அளிக்கும் புகாரின் அடிப்படையில் எந்த ஒரு விசாரணையும் இல்லாமல் கைது செய்யப்படலாம் என்ற கத்தி ஒருவரின் தலை மீது எந்த நேரமும் தொங்கிக் கொண்டிருக்குமானால் நாம் நாகரிகமான சமுதாயத்தில் வாழவில்லை என்று தான் அர்த்தம். சமுதாயத்தில் உள்ள அனைவருக்கும் சுதந்திரமும், நியாயமான நடைமுறையும் வழங்கப்படுவதை உறுதி செய்ய வேண்டியது அரசியலமைப்பு சட்டத்தின்படி செயல்படும் நீதிமன்றத்தின் கடமை ஆகும்’’ என உச்சநீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பில் எவரும் குறைகாண முடியாது.

1989&ஆம் ஆண்டு முதல் இப்போது வரை 30 ஆண்டுகளுக்கும் மேலாக நடைமுறையில் இருக்கும் வன்கொடுமை தடுப்புச் சட்டம் மிகவும் மோசமானது என்பதை உச்சநீதிமன்றமே ஒப்புக்கொண்டிருக்கிறது. இந்த சட்டத்தின்படி ஒருவர் மீது புகார் தரப்பட்டால், அப்புகாரில் உண்மை இல்லை என்று விசாரணை அதிகாரிக்கு தெரிந்தால் கூட, சம்பந்தப்பட்டவர்களை அவர் கைது செய்யாமல் இருக்க முடியாது; அவ்வாறு கைது செய்யாமல் இருந்தால் சம்பந்தப்பட்ட காவல்துறை அதிகாரி மீதே நடவடிக்கை எடுக்க முடியும். 

ஒரு சட்டத்தின் பிரிவுகள் இந்த அளவுக்கு தவறாக பயன்படுத்தப்படுவதை எப்படி அனுமதிக்க முடியும்? தடா சட்டத்தின் பிரிவுகளும், பொடா சட்டத்தின் பிரிவுகளும் ஒருவரை கைது செய்து எந்த விசாரணையும் இல்லாமல், பிணையும் வழங்காமல் 180 நாட்கள் வரை சிறையில் அடைக்க வகை செய்கின்றன. அதனால் தான் அந்த சட்டங்களை கொடூரமான சட்டங்கள் என்று அனைத்துத் தரப்பினரும் விமர்சித்தனர். ஆனால், தடா, பொடா சட்டத்திலாவது கைது செய்யப்படுவதற்கு முகாந்திரம் தேவை; ஆனால், வன்கொடுமை சட்டத்தில் ஒருவரை கைது செய்ய எந்த முகாந்திரமும் தேவையில்லை. தாழ்த்தப்பட்ட சமுதாயத்தை ஒருவர் புகார் செய்தாலே போதுமானது எனும் அளவுக்கு கொடூரமான விதிகள் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் இருக்கும் போது அதை எதிர்ப்பதற்கு மனித உரிமை ஆர்வலர்கள் தயங்குவது ஏன்?

தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த ஒருவர் தாம் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு விட்டதாக வன்கொடுமை சட்டத்தில் புகார் செய்தால், புகார் பதிவான உடனேயே அவர்களுக்கு லட்சக்கணக்கில் நிதி உதவி வழங்கப்படும். அத்தகைய நிதி உதவியை பெறுவதற்காகவே அப்பாவிகள் மீது பொய்யான புகார்கள் அளிக்கப்படுவதும், அதனடிப்படையில் அப்பாவிகள் கைது செய்யப்படுவதும் வாடிக்கையாகி வருகிறது. பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மக்களில் குறைந்தபட்சம் பத்தில் ஒருவர் வன்கொடுமை சட்டத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர். 

அதிலும் குறிப்பாக நேர்மையான முறையில் கடமையை செய்யும் அதிகாரிகள் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் சிக்க வைக்கப்படுகின்றனர். சுதந்திரமான ஆணையத்தைக் கொண்டு விசாரணை நடத்தினால் இந்த உண்மைகள் வெளிவரும். இத்தகைய பாதிப்புகள் இனியும் தொடரக்கூடாது என்பதற்காகத் தான் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் சில நியாயமான திருத்தங்களைச் செய்ய வேண்டும் என்று பல ஆண்டுகளாக பாட்டாளி மக்கள் கட்சி வலியுறுத்தி வருகிறது. இதையே தான் உச்சநீதிமன்றமும் அதன் தீர்ப்பில் தெளிவாக கூறியிருக்கிறது.

எந்த ஒரு சட்டமும் தவறாக பயன்படுத்தப்படக் கூடாது; அவ்வாறு பயன்படுத்தப்பட்டால் அதை தடுக்கும் கடமை உச்சநீதிமன்றத்திற்கு உண்டு. அந்தக் கடமையைத் தான் உச்சநீதிமன்றம் நிறைவேற்றியிருக்கிறது. அதற்கு மத்திய அரசு துணை நின்றிருக்க வேண்டும். மாறாக உச்சநீதிமன்றத்தின் தீர்ப்புக்கு தடை ஏற்படுத்தக் கூடாது. பாட்டாளி மக்கள் கட்சியைப் பொறுத்தவரை வன்கொடுமை தடுப்புச் சட்டத்தை ஒரு காலத்திலும் எதிர்த்ததில்லை. மாறாக, தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியின மக்களின் பாதுகாப்புக்கு அத்தகைய சட்டம் தேவை என்பது தான் பாட்டாளி மக்கள் கட்சியின் நிலைப்பாடு ஆகும். 

அதேநேரத்தில் எந்தவொரு சட்டமும் தவறாக பயன்படுத்தப்படக்கூடாது என்ற அடிப்படையில் தான் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் தவறான பயன்பாட்டை கடுமையாக எதிர்த்து வருகிறது. அதிலும் குறிப்பாக கடந்த காலங்களில் உச்சநீதிமன்றம் தெரிவித்த கருத்துகள், நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையில் இடம் பெற்றுள்ள புள்ளிவிவரங்கள் ஆகியவற்றின் அடிப்படையில் தான் இத்தகைய நிலைப்பாட்டை பாட்டாளி மக்கள் கட்சி மேற்கொண்டுள்ளது.

ஆனால், இதை புரிந்து கொள்ளாத சில அரைகுறைகளும், அவர்களை ஆதரிக்கும் சில சக்திகளும் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தையே பாட்டாளி மக்கள் கட்சி எதிர்ப்பதாக அவதூறு பரப்புகின்றன. அந்த அரைகுறைகளுக்கும், அவற்றை ஆதரிப்பவர்களுக்கும் தமிழ்நாட்டு மக்கள் சரியான நேரத்தில், சரியான பாடம் புகட்டப்போவது உறுதி.

வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் தவறான பயன்பாட்டால், தேசிய அளவில் தலித் அல்லாத 77.5% மக்களும், மாநில அளவில் தலித் அல்லாத 81% மக்களும் பழிவாங்கப்படுகின்றனர். இந்த உண்மை மத்திய ஆட்சியாளர்களுக்கு நன்றாக தெரிந்திருந்தும், சில சக்திகள் நடத்திய போராட்டத்திற்கு பணிந்து சட்டத்தை திருத்த முயல்வதும், அதை அரசியலமைப்பு சட்டத்தின் 9_வது அட்டவணையில் சேர்க்கத் துடிப்பதும் திருத்த முடியாத தவறுகளாக மாறி விடும். எனவே, வன்கொடுமை சட்டத்தில் அளிக்கப்படும் புகார் மனுக்கள் மீது விசாரணை நடத்திய பிறகு தான் யாரையும் கைது செய்ய வேண்டும். இந்த வழக்கில் முன்பிணை வழங்க வகை செய்ய வேண்டும் என்ற உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை மத்திய அரசு செயல்படுத்த வேண்டும். 

அதன் மூலம் தமிழகத்தின் 81% மக்கள் உட்பட நாடு முழுவதும் உள்ள 77.50% மக்கள் நாகரிகமான சமுதாயத்தில் வாழ்வதை உறுதி செய்ய வேண்டும். எனவே, வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் திருத்தம் செய்வது, ஒன்பதாவது அட்டவணையில் இந்த சட்டத்தை சேர்ப்பது போன்ற தவறான முடிவுகளை மத்திய அரசு உடனடியாக கைவிட வேண்டும்.

இவ்வாறு ராமதாஸ் கூறியுள்ளார்.

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by clicking this link

Close