பிளஸ் 2 தேர்வில் வெற்றி பெற்றுள்ள மாணவர்களுக்கு தலைவர்கள் வாழ்த்து!---

இன்று வெளியான பிளஸ் 2 தேர்வில் வெற்றி பெற்றுள்ள மாணவ, மாணவிகளுக்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் தங்கள் வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளனர்!

Updated: May 16, 2018, 06:26 PM IST
பிளஸ் 2 தேர்வில் வெற்றி பெற்றுள்ள மாணவர்களுக்கு தலைவர்கள் வாழ்த்து!---

தமிழகத்தில் பிளஸ்–2 தேர்வு மார்ச் 1–ந் தேதி தொடங்கி ஏப்ரல் 6–ந் தேதி முடிவடைந்தது.  தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இருந்து 6 ஆயிரத்து 903 பள்ளிகளில் இருந்து 8 லட்சத்து 66 ஆயிரத்து 934 மாணவ–மாணவிகள் தேர்வு எழுதினார்கள். இதில் தனி தேர்வர்களுடன் சேர்த்து 9 லட்சத்து 7 ஆயிரத்து 620 பேர் தேர்வு எழுதினார்கள்.

இதன் தேர்வு முடிவுகள் இன்று வெளியாகியுள்ளன. இதில் 91.1சதவீதம் பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர். இந்த தேர்ச்சி விகிதம் கடந்த ஆண்டை விட 1 சதவீதம் குறைவாகும். பிளஸ் 2 பொதுத்தேர்வில் மாணவிகள் 94.1 சதவீதம் பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர். 87.7 சதவீதம் மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

தமிழகத்தில் மொத்தம் 6,754 மேல்நிலை பள்ளிகள் உள்ள நிலையில், அதில் பிளஸ் 2 பொதுத்தேர்வில் மொத்தம் 1,907 பள்ளிகள் 100% தேர்ச்சியை பெற்றுள்ளன. அதிலும் குறிப்பாக 238 அரசுப்பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் 100 சதவிகிதம் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

தமிழகத்தில் இயங்கும் அரசுப் பள்ளிகளில் போதுமான அளவு கல்வித்தரம் இல்லை, அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் திறமையற்றவர்களாக இருப்பார்கள் என்ற கருத்து பரவலாக தமிழக மக்களிடையே பரவி வருகிறது. அந்த கருத்தை முறியடிக்கும் வகையில் இந்த ஆண்டு பல நூறு அரசு பள்ளி மாணவர்கள் பிள்ஸ் 2 தேர்வில்  100 சதவிகிதம் தேர்ச்சியை பெற்று சாதனை படைத்துள்ளனர்.

இதையடுத்து, பிளஸ் 2 தேர்வில் தோல்வியடைந்த மற்றும் தேர்வுக்கு வராத மாணவர்கள், ஜூன் 25ல் மீண்டும் தேர்வெழுதலாம் என அமைச்சர் செங்கோட்டையன் தகவல் தெரிவித்திருந்தார். மேலும்  தனியார் பள்ளிகளில் சிறந்த மாணவர்களின் புகைப்படங்களை விளம்பரங்களாக வெளியிடக் கூடாது மீறும் தனியார் பள்ளிகள் மீது சட்டப்படி நடவடிக்கை எனவும் கூறியுள்ளார்.
 
இந்நிலையில், ப்ளஸ் டூ தேர்வில் வெற்றி பெற்றுள்ள மாணவ, மாணவிகளுக்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் தங்கள் வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளனர்.

இது குறித்து எம்.கே.ஸ்டாலின் தன்னுடைய ட்விட்டர் பதிவில்...!

ப்ளஸ் டூ தேர்வில் வெற்றி பெற்றுள்ள மாணவ, மாணவிகள் அனைவருக்கும் என்னுடைய இதயங்கனிந்த நல்வாழ்த்துகள். தோல்வி அடைந்தவர்கள், தோல்வியும் வெற்றிக்கான படிக்கட்டுதான் என்பதை உணர்ந்து, அடுத்த வாய்ப்பினை கடினமான உழைப்பின் மூலம் வென்றிட வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.