இன்றைய கூகுள் டூடுலில் இருப்பவர் யார் தெரியுமா?

பிரபல உயிரியல் அறிவியலாளர் ஹர் கோவிந்த் குரானாவின் பிறந்தநாளை டூடுலில் வைத்து கொண்டாடும் கூகுள். 

Updated: Jan 9, 2018, 10:22 AM IST
இன்றைய கூகுள் டூடுலில் இருப்பவர் யார் தெரியுமா?
ZeeNewsTamil

அமெரிக்க வாழ் இந்திய மூலக்கூற்று உயிரியல் அறிவியலாளர் ஹர் கோவிந்த் குரானா. இவர் 1922-ம் ஆண்டு ஜனவரி 9-ம் தேதி அப்போதைய இந்தியாவின் பஞ்சாப் மாநிலம், முல்தான் மாவட்டத்திற்குட்பட்ட ராய்ப்பூரில் பிறந்தார். 

சுமார் 100 குடும்பங்கள் கொண்ட அவரது கிராமத்தில் குரானாவின் குடும்பம் மட்டுமே எழுத்தறிவு பெற்று விளங்கியது. குரானாவின் தொடக்கக் கல்வி கிராமப் பள்ளியில் மரத்தடியின் கீழ்தான் துவங்கியது. இளவயது முதலே அவர் படிப்பில் சிறந்து விளங்கினார்.

தனது கல்லூரி படிப்பை லாகூரில் அமைந்திருந்த பஞ்சாப் பல்கலைக்கழகத்தில் மேற்படிப்பைத் தொடர்ந்தார். பி.எஸ்சி பட்டப்படிப்பில் முதல் வகுப்பில் தேறினார். அதைத்தொடர்ந்து 1945ஆம் ஆண்டு வேதியியலில் முதுகலைப் பட்டப்படிப்பை முடித்தார்.

அதன்பின் 1945-ம் ஆண்டில்  இங்கிலாந்தில் உள்ள லிவர்பூல் பல்கலைக்கழகத்தில் சேர்ந்து ஆய்வு மேற்கொண்டு முனைவர் பட்டம் பெற்றார். 1948-49 களில் சுவிட்சர்லாந்தில் உள்ள பெடரல் தொழில்நுட்ப நிறுவனத்தில் ஆய்வினைத் தொடர்ந்து மேற்கொண்டார். 1949 இறுதியில் இந்தியா இந்தியா திரும்பினார்.

அதன்பின் மீண்டும் இக்கிலாந்து திரும்பிய அவர், 1950-52 ஆண்டிகளில் புரதங்கள், நியூக்ளிக் அமிலங்கள் பற்றிய ஆய்வுகளில் ஈடுபட்டார். 1952-ல் கனடா சென்ற குரானா, அங்கு எஸ்தர் எலிசபெத் சிப்லர் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

1960-ல் விஸ்கான்சின் பல்கலைக் கழகத்தில் அமைந்துள்ள நொதிகள் பற்றிய ஆய்வு நிறுவனத்தில் இணைந்து ஆய்வுகளை தொடர்ந்து மேற்கொண்டார். அப்பொழுது அமெரிக்காவில் இவருக்குக் குடியுரிமை அளிக்கப்பட்டது. 1962 முதல் 1970 வரை பேராசிரியராகவும், உயிர் வேதியல் பேராசிரியராகவும் அந்நிறுவனத்தின் துணை இயக்குநராகவும் பணியாற்றினார்.

1959-ல் மனித உடலின் சில செயல்முறைகளுக்கு இன்றியமையாததான இணைநொதி-ஏ (coenzyme-A) என்ற வேதிப்பொருளை உற்பத்தி செய்தார். 1960-ம் ஆண்டில் அமெரிக்காவின் விஸ்கான்சின் பல்கலைக்கழகத்தின் செயற்கை உயிர் உற்பத்தித் துறையில் பணியாற்றத் தொடங்கினார். 

அங்கு மார்சல் நோரென்பர்க்-உடன் இணைந்து அவர் மேற்கொண்ட ஆய்வின் பயனாக மரபுவழிப்பட்ட நோய்கள் சிலவற்றைக் குணமாக்க இயலும் என்று கண்டுபிடிக்கப்பட்டது. இக்கண்டுபிடிப்புக்காக 1968-ல் உடற்கூறியல் மற்றும் மருத்துவத்திற்கான நோபல் பரிசு குரானா, நோரென்பர்க், ஹாலி ஆகிய மூவருக்கும் வழங்கப்பட்டது. 

பின்னர் 1970-ல் மாசசூசெட்ஸ் தொழில்நுட்ப கழகத்தில் உயிரியல் மற்றும் வேதியியல் பேராசிரியர் பதவி, குரானாவுக்கு அளிக்கப்பட்டது. அங்கு மரபுக் குறியம் (genetic code) பற்றி அவர் ஆற்றிய பணி உலகப் புகழ் பெற்றது.

எஸ்கிரிஷியா கோலி (Escherichia coli) என்னும் நுண்ணுயிரிகள் மனித மற்றும் விலங்கினங்களின் குடற் பகுதியில் இருப்பது. கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழக அறிவியல் அறிஞர்கள் ஏற்கனவே அதன் கட்டமைப்பைப் பற்றி ஆய்வு செய்துள்ளனர். குரானாவும் அவருடைய குழுவினரும் இந்நுண்ணுயிரியின் மரபணு உருவாக்கத்தில் ஈடுபட்டனர். படிப்படியாக முயன்று இந்நுண்ணுயிரியின் சுமார் 207 மரபணுக்களை அவர்கள் செயற்கையாக உருவாக்கினர். 

பின்னர் 1976-ல் இச்செயற்கை மரபணுவை எஸ்கிரிஷியா கோலி நுண்ணுயிரி, இயற்கை மரபணு போன்றே பணியாற்றியது. இச்சாதனையை உலகமே வியந்து பாராட்டியது. தமது ஆய்வை வெற்றிகரமாக நிறைவேற்ற குரானாவின் குழுவிலிருந்த 25 பேருக்கும் சுமார் ஒன்பது ஆண்டுகள் தேவைப்பட்டன. நோபல் பரிசு தவிர குரானா மேலும் பல விருதுகளை வென்றுள்ளார்.

> 1968 - ஹாவாயில் ஹோனலூலுவில் அமைந்துள்ள வாட்டுமுல் அமைப்பின் 'சிறப்பு மிக்கச் சேவைக்கான விருது'.

> 1969 - பத்ம பூசண் விருது.

> 1971-ல் பென்சில்வேனியாவில் பிலடெல்பியாவில் அமைந்துள்ள அமெரிக்கக் கழகத்தின் 'செயல்வெற்றிச் சாதனைக்கான விருது'. 

> 1972-ல் கொல்கத்தா போஸ் நிறுவனத்தின் 'ஜே.சி. போஸ்' பதக்கம்.
> 1973-74 ஆண்டுக்கான அமெரிக்க வேதியல் பிரிவின் சிகாகோ பிரிவு வில்லர்ட் கிப்ஸ் பதக்கம்.

இதுதவிர, 'கெய்ர்ட்னர் அமைப்பு அனைத்துலக விருது', 'லூயிசா குரோஸ் ஹார்விட்சு பரிசு' ,'ஆல்பர்ட் லாஸ்கரின் அடிப்படை மருத்துவ ஆய்வுக்கான விருது' முதலிய விருதுகளை கொரானா பெற்றுள்ளார். 2011-ம் ஆண்டு நவம்பர் 9-ம் தேதி மரணமடைந்த கொரானாவை போற்றும் வகையில் அவரது பிறந்தநாளான இன்று அவரது புகைப்படம் கொண்ட ‘டூடுல்’ மூலம் ‘கூகுள்’ கொண்டாடி மகிழ்கிறது.

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by clicking this link

Close