கறித்துண்டு போன்று விற்கப் பார்த்தார்கள்: நடிகை அமலா பால்!

மாமிச கறித்துண்டு போல மலேசியாவில் என்னை வியாபாரம் செய்ய திட்டமிட்டிருந்தனர் என்று நடிகை அமலா பால் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

Last Updated : Feb 11, 2018, 02:24 PM IST
கறித்துண்டு போன்று விற்கப் பார்த்தார்கள்: நடிகை அமலா பால்! title=

மலேசியாவில் நடந்த கலைநிகழ்ச்சிக்காக கடந்த சில நாட்களுக்கு முன் நடன ஒத்திகையில் நடிகை அமலா பால் ஈடுபட்டிருந்தார். அப்போது அவரைத் தொடர்பு கொண்ட அழகேசன் என்ற தொழிலதிபர் பாலியல் தொல்லை கொடுத்தாராம். 

அதோடு மலேசியாவில் உள்ள தொழிலதிபர் வீட்டில் நடக்கும் விழாவில் கலந்துகொள்ள வேண்டும் என்றும் தொந்தரவு செய்தாராம். இதுபற்றி அமலா பால் தி.நகர் போலீசில் புகார் கொடுத்தார். போலீசார் அழகேசனை கைது செய்தனர்.

பாலியல் தொல்லை கொடுத்தவர் மீது தைரியமாக போலீசில் புகார் கொடுத்த அமலா பாலை பாராட்டி இருந்தார் நடிகர் சங்கப் பொதுச்செயலாளரும் தயாரிப்பாளர் சங்கத் தலைவருமான விஷால். அதற்கு அமலா பால் தற்போது நன்றி தெரிவித்துள்ளார்.

இதுபற்றி ட்விட்டரில், என் பின்னால் நின்றதற்கும் எனக்கு ஆதரவு அளித்ததற்கும் நன்றி. பாலியல் தொல்லைக் கொடுப்பவர்களுக்கு எதிராக ஒன்று சேர்வது ஒவ்வொரு பெண்ணுக்குமான கடமை. அந்த நபர் என்னை மாமிசத் துண்டு போன்று வியாபாரம் செய்யப் பார்த்தார். அவரின் துணிச்சல் எனக்கு எரிச்சலை தந்தது என்று அமலா பதிவிட்டுள்ளார்.

பிரபல ஹாலிவுட் பட தயாரிப்பாளர் ஹார்வி வெயின்ஸ்டீன் பல நடிகைகளுக்கு பாலியல் தொல்லைக் கொடுத்தார். இதை ஏஞ்சலினா ஜோலி உள்ளிட்ட நடிகைகள் வெளிப்படையாகக் கூறத் தொடங்கியதை அடுத்து, அதற்காக சமூக வலைத்தளத்தில், நானும் பாதிக்கப்பட்டேன் என்ற அர்த்தத்தில் மீ டூ (#MeToo) என்ற ஹேஷ்டேக் தொடங்கப்பட்டது. 

பிரபல ஹாலிவுட் நடிகை அலிசா மிலானோ இந்த ஹேஷ்டேக்கை தொடங்கி வைத்தார். இதையடுத்து ஏராளமானோர், அதில் தங்கள் பாதிப்புகளை கூறிவருகின்றனர். இந்த ஹேஷ்டேக்கை, நடிகை அமலா பாலும் பயன்படுத்தியுள்ளார்.

Trending News