சங்கர் ஜிவால் சென்னையின் புதிய காவல்துறை ஆணையர்: உயர் போலீஸ் அதிகாரிகள் இடமாற்றம்

நேற்று பதவியேற்ற தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினின் புதிய அமைச்சரவையில், இன்று முக்கிய நிர்வாக பதவிகளுக்கான நியமனங்கள் நடந்து வருகின்றன. சென்னை போலீஸ் கமிஷனர் மகேஷ்குமார் அகர்வால் மாற்றப்பட்டுள்ளார். சென்னையின் புதிய காவல் துறை ஆணையராக சங்கர் ஜிவால் நியமிக்கப்பட்டுள்ளார். 

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : May 8, 2021, 12:59 PM IST
  • சென்னை காவல்துறை ஆணையர் மகேஷ்குமார் அகர்வால் மாற்றப்பட்டுள்ளார்.
  • சங்கர் ஜிவால் சென்னையின் புதிய காவல்துறை ஆணையராக பொறுப்பேற்றுள்ளார்.
  • புதிய அரசாங்கத்தின் கீழ் காவல்துறையில் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.
சங்கர் ஜிவால் சென்னையின் புதிய காவல்துறை ஆணையர்: உயர் போலீஸ் அதிகாரிகள் இடமாற்றம் title=

சென்னை: திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் நேற்று தமிழகத்தின் புதிய முதல்வராக பதவியேற்றார். அவருடன் பல்வேறு துறைகளுக்கான அமைச்சர்களும் பதவியேற்றனர். நேற்று மதியத்துக்கு மேல், செயலாளர்களுக்கான சில நியமனங்களும் நடந்தன.

இந்த நிலையில், இன்றும் முக்கிய பதவிகளுக்கான நியமனங்கள் நடந்து வருகின்றன. சென்னை போலீஸ் கமிஷனர் மகேஷ்குமார் அகர்வால் தற்போது மாற்றப்பட்டுள்ளார். சென்னையின் (Chennai) புதிய காவல் துறை ஆணையராக சங்கர் ஜிவால் நியமிக்கப்பட்டுள்ளார். அவர் உளவுத்துறையின் கூடுதல் டிஜிபி-யாகவும் நியமிக்கப்பட்டுள்ளார்.

முன்னர் சென்னை போலீஸ் கமிஷனராக இருந்த மகேஷ்குமார் அகர்வால் கடந்த ஆண்டு ஜூலை மாதம் 20-ம் தேதி நியமிக்கப்பட்டார். அவர் 11 மாத காலமாக ஆணையராக இருந்தார். இந்நிலையில் நேற்றிரவு அவர் மாற்றப்பட்டு சென்னை காவல் துறை ஆணையராக சங்கர் ஜிவால் நியமிக்கப்பட்டார். 

உளவுத்துறைக்கு ஏடிஜிபி-யாகவும் சங்கர் ஜிவால் நியமிக்கப்பட்டுள்ளார். இது குறித்து தமிழக உள்துறைச் செயலர் எஸ்.கே.பிரபாகர் ஒரு உத்தரவை பிறப்பித்தார். இந்த உத்தரவின் விவரங்கள் பின்வருமாறு: 

- கோவை போலீஸ் கமிஷனராக பதவி வகிக்கும் டேவிட்சன் தேவாசிர்வாதம் மாற்றப்பட்டு உளவுத்துறை கூடுதல் டிஜிபியாக நியமிக்கப்பட்டுள்ளார்.

- ஆயுதப்படை கூடுதல் டிஜிபியாக பதவி வகிக்கும் சங்கர் ஜிவால் மாற்றப்பட்டு மகேஷ்குமார் அகர்வாலுக்கு பதில் சென்னை காவல்துறை ஆணையராக நியமிக்கப்படுகிறார்.

- காவலர் நலன் பிரிவு கூடுதல் டிஜிபியாக பதவி வகிக்கும் தாமரைக்கண்ணன் மாற்றப்பட்டு தமிழக சட்டம் ஒழுங்கு கூடுதல் டிஜிபியாக ஜெயந்த் முரளிக்கு பதில் நியமிக்கப்படுகிறார்.

இவ்வாறு அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

ALSO READ: தமிழக அரசின் புதிய தலைமைச் செயலாளராக வெ.இறையன்பு IAS நியமனம்!

தற்போது சென்னை காவல்துறை ஆணையராக இருந்த மகேஷ்குமார் அகர்வால், கூடுதல் டிஜிபியாக இருந்த ஜெயந்த் முரளி இருவருக்கும் புதிய பொறுப்புகள் எதுவும் அளிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

முன்னதாக, நேற்று, தமிழக முதலமைச்சராக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் (MK Stalin) பதவி ஏற்றார். அவரை தொடர்ந்து துரைமுருகன் உள்ளிட்ட திமுக எம்.எல்.ஏக்கள் 33 பேர் அமைச்சர்களாக பதவியேற்றனர். பதவியேற்பு விழா கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் நடைபெற்றது. ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் அனைவருக்கும் பதவிப் பிரமாணமும் ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார். 

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினின் செயலாளர்களாக 4 ஐஏஎஸ் அதிகாரிகள் நியமனம் செய்யப்பட்டனர். உதயச்சந்திரன், உமாநாத், சண்முகம், அனு ஜார்ஜ் ஆகிய 4 ஐஏஎஸ் அதிகாரிகள் செயலாளர்களாக  நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

தமிழக அரசின் தலைமைச் செயலாளராக ஐஏஎஸ் அதிகாரி வெ.இறையன்பு (Irai Anbu) நியமனம் செய்யப்பட்டார். தமிழக தலைமைச் செயலாளராக இருந்த ராஜிவ் ரஞ்சன் தமிழ்நாடு செய்தித்தாள் கழகத்துக்கு மாற்றபட்டுள்ளார். காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர், சுற்றுலாத் துறை செயலாளர் உள்ளிட்ட பல பொறுப்புகளில் இருந்தவர் ஐஏஎஸ் அதிகாரி வெ.இறையன்பு என்பது குறிப்பிடத்தக்கது.

ALSO READ: முதல்வரின் செயலர்களாக 4 ஐஏஎஸ் அதிகாரிகள் நியமனம்!

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Trending News