மேகதாது அணை விவகாரத்தில் மத்திய அரசின் முடிவு ஆபத்தானவை -ராமதாஸ்

மேகதாது அணை விவகாரத்தில் கர்நாடகத்தின் தூதராக மாறி தமிழகத்துடனும் பேச்சு நடத்தப் போவதாக மத்திய அரசு அறிவித்திருப்பது கண்டிக்கத்தக்கது என பாமக நிறுவனர் ராமதாஸ் அறிக்கை வெளியிட்டு உள்ளார். 

Zee News Tamil (Web Team) Zee செய்திகள்(இணைய பிரிவு) | Updated: Aug 10, 2018, 08:54 PM IST
மேகதாது அணை விவகாரத்தில் மத்திய அரசின் முடிவு ஆபத்தானவை -ராமதாஸ்
Pic Courtesy : Twitter

மேகதாது அணை விவகாரத்தில் கர்நாடகத்தின் தூதராக மாறி தமிழகத்துடனும் பேச்சு நடத்தப் போவதாக மத்திய அரசு அறிவித்திருப்பது கண்டிக்கத்தக்கது என பாமக நிறுவனர் ராமதாஸ் அறிக்கை வெளியிட்டு உள்ளார். 

அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது:-

காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது பகுதியில் புதிய அணை கட்டுவது தொடர்பாக தமிழகத்துடனும், கர்நாடகத்துடனும் மத்திய அரசு பேச்சு நடத்தும் என்று மத்திய நீர்வளத்துறை அமைச்சர் நிதின் கட்கரி உறுதியளித்திருப்பதாக கர்நாடக அரசு தெரிவித்திருக்கிறது. காவிரி பிரச்சினையில் இரு தரப்புக்கும் பொதுவானவராக இருக்க வேண்டிய மத்திய அமைச்சர் நிதின் கட்கரி, கர்நாடகத்தின் தூதராக மாறி தமிழகத்துடனும் பேச்சு நடத்தப் போவதாக அறிவித்திருப்பது கண்டிக்கத்தக்கது; இதை ஏற்க முடியாது.

மத்திய நீர்வளத்துறை அமைச்சர் நிதின்கட்கரியை கர்நாடக நீர்ப்பாசனத்துறை அமைச்சர் சிவக்குமார் நேற்று தில்லியில் சந்தித்து பேசியிருக்கிறார். அப்போது மேகதாதுவின் அணை கட்ட அனுமதிக்க வேண்டும் என்ற கர்நாடக அமைச்சரின் கோரிக்கையைக் கேட்ட நிதின்கட்கரி, இதுதொடர்பாக இரு மாநில பிரதிநிதிகளையும் அழைத்துப் பேசப்போவதாக உறுதியளித்திருக்கிறார். இதைத் தொடர்ந்து மேகதாது அணை தொடர்பாக தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியை சந்தித்து பேசப்போவதாக கர்நாடக முதலமைச்சர் குமாரசாமி கூறியிருக்கிறார். இவை இரண்டுமே மிகவும் ஆபத்தானவையாகும்.

மத்திய நீர்வளத்துறை அமைச்சர்களாக இருப்பவர்கள் மேகதாது அணை விவகாரம் தொடர்பாக இரு மாநில அமைச்சர்களையும் அழைத்துப் பேசுவது நியாயமானதாக இருக்காது. ஏனெனில், மேகதாது அணை விவகாரத்தில் மத்திய நீர்வள அமைச்சகம் நீதிபதி நிலையில் உள்ளது. மேகதாதுவில் அணை கட்ட வேண்டும் என்று நினைத்தால், அதற்கான அனுமதி கோரும் மனுவை மத்திய நீர்வளத்துறை அமைச்சகத்தில் கர்நாடகம் தாக்கல் செய்ய வேண்டும். அந்த மனுவுடன், மேகதாது அணை கட்டுவதற்கான தமிழகத்தின் ஒப்புதல் கடிதம் உள்ளிட்ட அனைத்து ஆவணங்களும் இருந்தால், அதை ஏற்று அணை கட்ட மத்திய நீர்வளத்துறை அமைச்சகம் அனுமதி அளிக்கலாம். இல்லாவிட்டால் மனுவை திருப்பி அனுப்புவதைத் தவிர வேறு எதையும் மத்திய அரசு செய்ய முடியாது. மேகதாது அணை கட்டுவதற்கு கர்நாடகத்திற்கு அனுமதி கொடுங்கள் என்று தமிழகத்திடம் கூறவோ அல்லது இதுதொடர்பாக இரு தரப்பையும் அழைத்துப் பேசவோ மத்திய நீர்வள அமைச்சகத்துக்கு எந்த அதிகாரமும் கிடையாது.

மேகதாது அணை கட்ட கர்நாடகத்துக்கு அனுமதி அளிக்கக்கூடாது என்று நாடாளுமன்றத்தில் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் தொடர்ந்து வலியுறுத்தினார். இதுதொடர்பாக அப்போதைய மத்திய நீர்வளத்துறை அமைச்சர் உமாபாரதிக்கு தொடர்ச்சியாக கடிதங்களையும் எழுதினார். அவற்றுக்கு பதிலளித்து 2015 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 9 ஆம் நாள் அன்று உமாபாரதி எழுதிய கடிதத்தில் இதை தெளிவாக விளக்கியிருந்தார்.

‘‘மாநிலங்களிடையே பாயும் நதியான காவிரியில் கர்நாடகம் எந்தத் திட்டத்தைச் செயல்படுத்துவதாக இருந்தாலும் அதுகுறித்து தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மாநிலத்தின் கருத்தையும் கேட்க வேண்டும் என்று காவிரி நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பில் குறிப்பிடப்பட்டிருப்பதால், அதன்படி அந்த மாநிலங்களின் கருத்துக்களைக் கேட்டு, அதையும் விரிவான திட்ட அறிக்கையுடன் இணைத்து அனுப்ப வேண்டும். சிவசமுத்திரம் நீர்மின்திட்டத்திற்கான விரிவான திட்ட அறிக்கையை கர்நாடகம் அனுப்பிய போது அதனுடன் தமிழகத்தின் அனுமதி இல்லாததால் அதை மத்திய அரசு திருப்பி அனுப்பி விட்டது. அதேபோல், மேகதாது அணைக்கான திட்ட அறிக்கையை கர்நாடக அரசு எப்போது தாக்கல் செய்தாலும், தமிழக அரசின் ஒப்புதல் பெறப்படாத பட்சத்தில் அதற்கு தமது அரசு அனுமதி அளிக்காது’’ என்று உமாபாரதி கூறியிருந்தார். உமாபாரதியின் இந்த விளக்கம் அமைச்சர் கட்கரிக்கும் பொருந்தும்.

ஒரு வழக்கை விசாரிக்கும் நீதிபதியாக இருப்பவர் நீதியின் பக்கம் தான் நிற்க வேண்டும். ஒரு தரப்பு கேட்டுக் கொண்டதற்காக இரண்டாம் தரப்பை அழைத்து நீதிபதி பேச்சு நடத்த முடியாது. அதேபோல் தான் மேகதாது அணை விவகாரத்தில் நியாயத்தின் பக்கம் நிற்க வேண்டிய நிதின்கட்கரி, கர்நாடகத்தின் பக்கம் நின்று மேகதாது விவகாரத்தில் பஞ்சாயத்து பேச தமிழகத்தை அழைக்கக்கூடாது. அது அநீதி. கடந்த காலங்களில் தமிழகம் வறட்சியில் தவித்த போது, காவிரியில் தண்ணீர் திறந்து விட வேண்டும் என்ற உச்சநீதிமன்றத் தீர்ப்பை செயல்படுத்தும்படி கர்நாடகத்தை அறிவுறுத்தாத, காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்ற உச்சநீதிமன்றத் தீர்ப்பை செயல்படுத்த முன்வராத நிதின் கட்கரிக்கு மேகதாது அணை விவகாரம் தொடர்பாக தமிழகத்தை பேச்சுக்கு அழைக்க எந்த உரிமையும் இல்லை.

அதுமட்டுமின்றி,கர்நாடகத்தில் காவிரி மற்றும் துணை நதிகளின் குறுக்கே இப்போதுள்ள அணைகளின் கொள்ளளவு 104.59 டிஎம்சி ஆகும். 67.14 டிஎம்சி கொள்ளளவுள்ள மேகதாது அணையும் கட்டப்பட்டால் கர்நாடக அணைகளின் கொள்ளளவு 171.73 டிஎம்சியாக அதிகரிக்கும். அதுமட்டுமின்றி, இடைப்பட்ட காவிரிப் பரப்பு, நீர்நிலைகள் ஆகியவற்றையும் கணக்கில் கொண்டால் 200 டிஎம்சி தண்ணீரை கர்நாடகத்தால் தேக்கி வைக்க முடியும். இந்த அளவுக்கு கொள்ளளவு இருந்தால் காவிரியில் தமிழகத்திற்கு ஒரு சொட்டு நீரைக் கூட கர்நாடகம் தராது. மேகதாது அணை கட்டப்படுவது அனைத்து வழிகளிலும் தமிழகத்திற்கு ஆபத்தானது என்பதால் அதுகுறித்து பேச்சு நடத்துவதற்கான அழைப்பு, ஒருவேளை முழு அதிகாரம் பெற்ற காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்பட்டு அதனிடமிருந்து வந்தால் தவிர, வேறு யாரிடமிருந்து வந்தாலும் அதை தமிழக அரசு ஏற்கக்கூடாது என வலியுறுத்துகிறேன்.

இவ்வாறு ராமதாஸ் கூறியுள்ளார்.

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by clicking this link

Close