சசிகலாவை இன்று முதல்வர் சந்திக்கவில்லை, காரணம் என்ன?

தமிழகத்தின் புதிய முதல்வராக பதவியேற்றுக் கொண்டுள்ள எடப்பாடி பழனிச்சாமி, இன்று பெங்களூரு செல்ல உள்ளதாக தகவல் வெளியானது. திடீர் என இந்த பயணம் ரத்து செய்தார்.

Updated: Feb 17, 2017, 11:37 AM IST
சசிகலாவை இன்று முதல்வர் சந்திக்கவில்லை, காரணம் என்ன?
Zee Media Bureau

சென்னை: தமிழகத்தின் புதிய முதல்வராக பதவியேற்றுக் கொண்டுள்ள எடப்பாடி பழனிச்சாமி, இன்று பெங்களூரு செல்ல உள்ளதாக தகவல் வெளியானது. திடீர் என இந்த பயணம் ரத்து செய்தார்.

ஜெயலலிதாவின் மறைவுக்கு பிறகு அதிமுக-வில் பிளவு ஏற்பட்டுள்ளது. அக்கட்சியின் பொதுச் செயலாளராக நியமிக்கப் பட்ட சசிகலாவின் ஆதரவாளர்கள் ஒரு அணியாகவும், முன்னாள் முதல் அமைச்சர் ஓ. பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர்கள் இன்னொரு அணியாகவும் செயல்பட்டு வருகிறார்கள்.

இந்நிலையில் சசிகலா ஆதரவாளரான எடப்பாடி பழனிச்சாமிக்கு நேற்று காலையில் ஆட்சி அமைக்க கவர்னர் அழைப்பு விடுத்தார். இதன்படி முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் 31 பேர் கொண்ட தமிழக அமைச்சரவை நேற்று கவர்னர் தலைமையில் பொறுப்பேற்றனர். 

பதவி பிரமாணம் முடிந்தவுடன் நேராக பழனிச்சாமி உள்ளிட்ட தமிழக அமைச்சர்கள்  முன்னால் முதல்வர் ஜெயலலிதா சமாதியில் மலர் வளையம் வைத்து  மரியாதை செலுத்தினார்கள். 

இந்நிலையில் இன்று பெங்களூர் சிறையில் இருகும் சசிகலாவை சந்தித்து எடப்பாடி பழனிசாமி வாழ்த்து பெற செல்வார் என தகவல் வெளியானது. அனால் இந்த பயணம் திடீர் என இந்த கைவிடபட்டது.

இது குறித்து ஏ.என்.ஐ செய்தி நிறுவனத்துக்கு பேட்டி அளித்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பெங்களூர் இன்று செல்லவில்லை என தெரிவித்து உள்ளார்.  

சசிகலா இப்போதைக்கு எடப்பாடி பழனிச்சாமி இங்கு வர வேண்டாம், மெஜாரிட்டியை நிரூபித்த பின்பு வரலாம் என்று சொல்லி அனுப்பிவிட்டார். இதனால் சசிகலாவை சந்திக்கும் திட்டம் ரத்து செய்யப்பட்டது. முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி கூவத்தூர் சென்று அங்குள்ள எம்.எல்.ஏக்களுடன் ஆலோசனை நடத்துகிறார்.