தொடர் போராட்ட களத்தில் சிவகாசி பட்டாசு தொழிளாலர்கள்!

சுற்றுச்சூழல் பாதுகாப்பு விதியிலிருந்து விலக்கு கோரி 9வது நாளாக பட்டாசு ஆலைகளின் வேலைநிறுத்தம் தொடர்கிறது.

Updated: Jan 3, 2018, 12:51 PM IST
தொடர் போராட்ட களத்தில் சிவகாசி பட்டாசு தொழிளாலர்கள்!

தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் சிவகாசி பட்டாசு உற்பத்தியாளர்களுக்கு ஆதரவாக சிவகாசியில் அனைத்து கட்சி சார்பில் கடையடைப்பு போராட்டம் தொடங்கியுள்ளது.

பட்டாசு வெடிப்பதால் சுற்றுப்புறச் சூழல் மாசு ஏற்படுவதாக கூறி பட்டாசு வெடிக்க இந்தியா முழுவதும் தடை விதிக்க கோரி உச்ச நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கு வரும் 5 ஆம் தேதி விசாரணைக்கு வர உள்ள நிலையில் பட்டாசுக்கு தடை விதிக்கப்படும் என்ற அச்சத்தில் வெளி மாநில பட்டாசு விற்பனையாளர்கள் ஆர்டர்களை நிறுத்திவிட்டனர். இதனால், பட்டாசு தொழில் தானாகவே முடங்கி உள்ளது.

இந்நிலையில் கடந்த 26 ஆம் தேதி முதல் பட்டாசு ஆலைகளை மூடி காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தில் பட்டாசு உற்பத்தியாளர்கள் ஈடுபட்டுள்ளனர். அவர்களின் வேலைநிறுத்தம் 9வது நாளாக இன்றும் தொடர்கிறது. இந்நிலையில் பட்டாசு உற்பத்தியாளர்களுக்கு ஆதரவாக சிவகாசியில் அனைத்து கட்சி சார்பில் கடையடைப்பு போராட்டம் தொடங்கியுள்ளது. 10-க்கும் அதிகமான வணிகர் சங்கங்களும் இந்த போராட்டத்தில் பங்கேற்றுள்ளன.

மேலும் காய்கறி மார்க்கெட் வியாபாரிகள், வணிகர்கள், அச்சக உரிமையாளர்கள், லாரி, ஆட்டோ ஓட்டுநர்களும் இன்று வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனிடையே பட்டாசு தொழிலை விட்டால் தங்களுக்கு வேறு ஏதும் வாழ்வாதாரம் இல்லை எனக்கூறி பட்டாசு தொழிலாளர்களும் சிவகாசியில் பேரணியில் ஈடுபட்டுள்ளனர்.

சிவகாசி காமராஜர் சிலையிலிருந்து பட்டாசு தொழிலாளர்கள் இந்த பேரணியை தொடங்கியுள்ளனர். சுமார் 2,000 தொழிலாளர்கள் இந்த பேரணியில் ஈடுபட்டுள்ளனர். சுமார் 3 கி.மீ தூரம் வரை பேரணியாக சென்று கோட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிடவும் பட்டாசு தொழிலாளர்கள் முடிவு செய்துள்ளனர்.