நீர் மேலாண்மை குறித்து அரசு சிந்திக்க வேண்டும் - டிடிவி தினகரன்!

நீர் மேலாண்மை குறித்து தமிழக அரசு எவ்வித சிந்தனையும் இல்லாமல் தொடர்ந்து செயல்படுமேயானால் அது பேராபத்தில் முடியும் என அமமுக துணை பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

Last Updated : Oct 20, 2018, 06:47 PM IST
நீர் மேலாண்மை குறித்து அரசு சிந்திக்க வேண்டும் - டிடிவி தினகரன்! title=

நீர் மேலாண்மை குறித்து தமிழக அரசு எவ்வித சிந்தனையும் இல்லாமல் தொடர்ந்து செயல்படுமேயானால் அது பேராபத்தில் முடியும் என அமமுக துணை பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாவது...

“நீர் மேலாண்மை தொடர்பான தமிழக அரசின் செயல்பாடுகள் மிகவும் வருத்தமளிப்பதாகவும், நீர் மேலாண்மையை இந்த அரசு மிகத் தீவிரமாக கடைப்பிடிக்க வேண்டும் என்றும் சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை கருத்து தெரிவித்துள்ளது. இதன் மூலம் தமிழக அரசு நீர் மேலாண்மையை துளி அளவுகூட கவனத்தில் கொள்ளவில்லை என்பதை தான் எடுத்துரைக்கிறது.

வைகையாற்று படுகையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றக்கோரி தொடரப்பட்ட வழக்கை விசாரித்துவரும் உயர் நீதிமன்ற மதுரை கிளை, பென்னி க்விக் எப்படிபட்ட ஒரு பரந்த எண்ணத்தோடு முல்லைப்பெரியாறு அணையை கட்டினார் என்பதையும், அவரது சந்ததியினர் தற்போது வந்து பார்த்தால், எவ்வளவு மோசமாக அதை நாம் பராமரித்து வருகிறோம் என்பதை அறிந்து வேதனைப்படுவார்கள் என்றும், இயற்கை வழங்கும் அருட்கொடையான மழை நீரை முறையாக சேமிக்க வகை செய்யாமல் இந்த அரசு இருப்பதாகவும், நீதிமன்றம் தெரிவித்துள்ளதாக, செய்திகள் வெளியாகியுள்ளன.

பொதுவாகவே நீர் நிலைகளின் ஆக்கிரமிப்புகளை அகற்றுவதிலும், தூர்வாரும் பணியிலும் முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் அரசு பல்வேறு புகார்களுக்கு உள்ளாகிவருவதை யாரும் மறுப்பதற்கு இல்லை.

நீர் மேலாண்மை என்பது தொலைநோக்கு பார்வை கொண்ட ஆளுமைமிக்க ஒரு தலைமையின் தன்மையாகவே பார்க்கப்படுகிறது. இது நிகழ்கால மற்றும் எதிர்கால மக்களின் வாழ்வு தொடர்பானது. ஒரு சமூகம் வாழ்வதா? இல்லையா? என்ற மிகப்பெரிய கேள்விக்கான விடை நீர் மேலாண்மையில் தான் உள்ளது.

அப்படிப்பட்ட அதிமுக்கியத்துவம் வாய்ந்த நீர் மேலாண்மை செயல்பாட்டில், தனி முத்திரை பதித்து உலக அளவில் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தவர் ஜெயலலிதா. இல்லம்தோறும் அவர் உருவாக்கிய மழைநீர் சேகரிப்பு திட்டம் அதனை எடுத்துரைத்தது. அதன்மூலம் நிலத்தடி நீர்மட்டம் வெகுவாக உயர்ந்தது. தற்போதோ நிலத்தடி நீர்மட்டம் எந்த அளவில் உள்ளது? சென்னை போன்ற பெரு நகரங்களில், அபாயகரமான அளவுக்கு நிலத்தடி நீர்மட்டம் குறைந்துவிட்டது.

2020 ஆம் ஆண்டில் சென்னையில் நிலத்தடி நீர் வற்றி உப்பு நீர் ஆகிவிடும் என்று நிதி ஆயோக் ஏற்கெனவே எச்சரித்துள்ளதும், அதனுடைய வெளிப்பாடாக, தனியார் தண்ணீர் லாரி விநியோகிப்பவர்களும், குடிநீர் கேன் விநியோகஸ்தர்களும் அறிவித்த வேலை நிறுத்தம் எந்த அளவுக்கு சென்னையை முடக்கக்கூடிய அளவிற்கு உருமாறியது என்பதை அறிகின்றபோது, நீர் மேலாண்மையை இந்த அரசு ஆயிரமடங்கு வேகத்தோடு செயல்பட வேண்டிய சூழ்நிலை தற்போது உருவாகி உள்ளதாகவே எண்ணத்தோன்றுகிறது.

கர்நாடகாவில் பெய்த கனமழையின் காரணமாக, காவிரியில் திறந்தவிடப்பட்ட உபரிநீரினால், நான்குமுறை மேட்டூர் அணை தன் முழு கொள்ளவை எட்டியபோதும், டெல்டா மாவட்டங்கள் வழியாக காவிரி உபரி நீர் வெள்ளமென பாய்ந்தபோதும், கடைமடைக்கு தண்ணீர் செல்லாமலும், ஆயிரக்கணக்கான ஏரிக்குளங்கள் வறண்டு கிடந்ததும், தமிழக அரசின் மோசமான நிர்வாகத்தை தான் எடுத்துக்காட்டியது.

பல்வேறு உலக நாடுகளில் தண்ணீருக்கும், நீர் மேலாண்மைக்கும் பெரும் முக்கியத்துவம் கொடுத்து, அவற்றை செயல்படுத்திவரும் நிலையில், தமிழக அரசு நீர் மேலாண்மை குறித்து எந்த சிந்தனையும் இல்லாமல் இருப்பது பெரும் ஆபத்தில் முடியும் என எச்சரிக்கிறேன். நீர் மேலாண்மையிலும், நீர்வழித்தட ஆக்கிரமிப்புகளையும் அகற்றுவதில், இந்த அரசு முழு அரசு இயந்திரத்தையும் பயன்படுத்த வேண்டும்" என குறிப்பிட்டுள்ளார்!

Trending News