உதவி மருத்துவர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கினார் தமிழக முதல்வர்

Updated: Sep 13, 2017, 06:39 PM IST
உதவி மருத்துவர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கினார் தமிழக முதல்வர்
Pic Courtesy : www.tn.gov.in

தமிழக முதலமைச்சர் திரு.எடப்பாடி கே. பழனிசாமி அவர்கள் இன்று (13.9.2017) முதலமைச்சரின் முகாம் அலுவலகத்தில், மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியத்தால் தெரிவு செய்யப்பட்டுள்ள 1013 உதவி மருத்துவர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கிடும் அடையாளமாக, 10 நபர்களுக்கு உதவி மருத்துவர் பணியிடங்களுக்கான பணி நியமன ஆணைகளை வழங்கினார்கள். 

அதைக்குறித்து தமிழக அரசு இதழில் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது:-

அரசு மருத்துவமனைகளில் ஏற்படும் காலிப் பணியிடங்கள் மற்றும் புதியதாக தோற்றுவிக்கப்படும் பணியிடங்களை உடனுக்குடன் நிரப்பி, அரசு மருத்துவ நிலையங்களுக்கு வரும் ஏழை எளிய மக்களுக்கு தங்கு தடையின்றி மருத்துவ சேவை வழங்கப்பட வேண்டும் என்ற உயரிய நோக்கத்திற்காக, இந்தியாவிலேயே முதன்முறையாக தமிழ்நாட்டில் மக்கள் நல்வாழ்வுத் துறைக்கென தனியாக மருத்துப் பணியாளர் தேர்வு வாரியம் ஜனவரி 2012-இல் மாண்புமிகு புரட்சித் தலைவி அம்மா அவர்களால் துவக்கப்பட்டது. இவ்வாரியம், இதுவரை 9,777 மருத்துவர்கள் மற்றும் சிறப்பு மருத்துவர்கள், 9,190 செவிலியர்கள் உட்பட 22,042 பணியாளர்களை தேர்வு செய்துள்ளது. 

மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியம் தற்போது 1013 உதவி மருத்துவர்களை புதியதாக தேர்வு செய்துள்ளது. இவர்களுக்கான பணி நியமன ஆணைகளை வழங்கிடும் அடையாளமாக, மாண்புமிகு தமிழக முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிசாமி அவர்கள் இன்று 10 நபர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினார்

பிறகு அவர் பேசியதாவது:-

அனைவருக்கும் பணிவான வணக்கத்தை தெரிவித்தார். பிறகு அம்மாவினுடைய அரசு, இன்றைக்கு சுகாதாரத் துறையிலே சிறந்த சேவையை செய்து கொண்டிருக்கின்றது. இந்தியாவிலேயே, மருத்துவத்துறையில் தமிழகம்தான் முதன்மை வகிக்கின்ற அளவிற்கு சிறப்பான மருத்துவர்களால் சேவையாற்றப்பட்டு
வருகின்றது. 

புதிதாக ஆணை பெற்றிருக்கின்ற மருத்துவர்கள் கிராமப்புறத்திலே சேவை செய்து, கிராமப்புறத்தில் வாழ்கின்ற ஏழை, எளியோருக்கு சிறப்பான முறையிலே சிகிச்சை அளித்து மக்கள் போற்றுகின்ற அளவிற்கு உங்கள் பணி அமைய வேண்டும் என்று வாழ்த்தி வாய்ப்புக்கு நன்றி கூறி விடைபெறுகின்றேன்” என்று வாழ்த்தினார்கள். 

இந்த நிகழ்ச்சியில், தமிழக அமைச்சர்கள், மருத்துவப் பணியாளர் தேர்வு வாரிய தலைவர் மற்றும் மருத்துவம் மற்றும் ஊரக நலப் பணிகள் இயக்குநர் உட்பட பலர் கலந்துகொண்டனர்.