டெல்லியில் விவசாயிகள் தொடர் உண்ணாவிரத போராட்டம்

Last Updated : Mar 16, 2017, 10:48 AM IST
டெல்லியில் விவசாயிகள் தொடர் உண்ணாவிரத போராட்டம்  title=

டெல்லியில் உண்ணாவிரத போராட்டம் இருந்து வரும் தமிழக விவசாயிகளில் 2 பேர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொள்ள முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கவேண்டும், விவசாய கடன்களை தள்ளுபடி செய்யவேண்டும், விளை பொருட்களுக்கு நியாயமான விலை வழங்கவேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கம் சார்பில் டெல்லியில் தொடர் உண்ணாவிரத போராட்டம் நேற்று முன்தினம் தொடங்கியது. அந்த சங்கத்தின் மாநில தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் ஏராளமான விவசாயிகள் போராட்டத்தில் பங்கேற்று வருகின்றனர்.

இந்த நிலையில் நேற்று காலை அந்த போராட்டக்குழுவில் இருந்த மேட்டுப்பாளையம் மூவானுரைச் சேர்ந்த அகிலன் (வயது 25), பிள்ளையார் பாளையத்தைச் சேர்ந்த ரமேஷ் (19) ஆகிய 2 பேரும் அங்குள்ள ஒரு வேப்பமரத்தில் ஏறினார்கள். திடீரென அவர்கள் தங்களது வேட்டியை பயன்படுத்தி மரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்யும் முயற்சியில் ஈடுபட்டனர்.

இதை பார்த்த மற்ற விவசாயிகள் கூச்சல் போட்டனர். அதைத் தொடர்ந்து அங்கு விரைந்த போலீசாரும், தீயணைப்பு வீரர்களும் சேர்ந்து அந்த 2 விவசாயிகளையும் கீழே இறங்க வைத்தனர்.

அப்போது விவசாயிகள் 2 பேரும் மூச்சு விட சற்று சிரமப்பட்டனர். உடனே அருகில் உள்ள ஆஸ்பத்திரிக்கு அவர்கள் அழைத்துச் செல்லப்பட்டு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் அவர்கள் மீண்டும் போராட்ட இடத்துக்கு வந்தனர். தொடர்ந்து, அங்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது.

Trending News