வீரமரணமடைந்த தமிழக வீரர்கள் குடும்பத்துக்கு முதல்வர் நிதி

Last Updated : Apr 25, 2017, 01:20 PM IST
வீரமரணமடைந்த தமிழக வீரர்கள் குடும்பத்துக்கு முதல்வர் நிதி title=

சத்தீஸ்கரில் நக்சல்கள் தாக்குதலில் உயிரிழந்த 4 தமிழக வீரர்கள் குடும்பத்துக்கு ரூ.20 லட்சம் நிதியுதவி அளிக்கப்படும் என தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துள்ளார். மேலும் உயிரிழந்த சிஆர்பிஎப் வீரர்கள் 4 பேர் குடும்பத்துக்கு அவர் இரங்கல் தெரிவித்துள்ளார். 

சத்தீஷ்காரில் நக்சல் தீவிரவாதிகள் அதிக்கம் நிறைந்த சுக்மாவில் பாதுகாப்பு படையினர் மற்றும் தீவிரவாதிகள் இடையே சண்டை வெடித்தது. 

சத்தீஷ்கர் மாநிலம் சுக்மாவில் மாவோயிஸ்ட்டுகள் நடத்திய திடீர் தாக்குதலில் 26 பாதுகாப்பு படை வீரர்கள் பலியாகியுள்ளனர். இதில் தமிழகத்தைச் சேர்ந்த வீரர்கள் 4 பேர் வீரமரணம் அடைந்துள்ளனர்.

சத்தீஸ்கர் மாநிலம் சுக்மா மாவட்டத்தின் தெற்கு பகுதி மாவோயிஸ்டுகள் அதிக்கம் நிறைந்த பகுதியாகும். இந்த பகுதியில் நக்சல் ஒழிப்பு நடவடிக்கைகளுக்கு, மத்திய ரிசர்வ் போலீஸ் படையின் 74-வது பட்டாலியன் படைப்பிரிவை சேர்ந்த வீரர்கள் குவிக்கப்பட்டனர்.

இதையறிந்து கொண்ட மாவோயிஸ்டு இயக்கத்தினர் ரகசியமாக அவ்விடத்தை முற்றுகையிட்டு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த சிஆர்பிஎப் வீரர்கள் மீது கண்மூடித்தனமாக துப்பாக்கியால் சுட்டனர். இந்த தாக்குதலில் சிக்கி பாதுகாப்பு படை வீரர்கள் 25 பேர் வீரமரணம் அடைந்தனர்.

மேலும் இச்சம்பவத்தில் பலர் படுகாயம் அடைந்தனர். இந்த கொடூர தாக்குதலுக்கு பிறகு நக்சலைட்டுகள் வனப்பகுதிக்குள் தப்பி ஓடிவிட்டனர். 300க்கும் மேற்பட்ட மாவோயிஸ்டுகள் சேர்ந்து தாக்குதல் நடத்தியதாக முதலில் தகவல் வெளியானது. 

தாக்குதல் நடத்திய மாவோயிஸ்டுகள் ராக்கெட் லாஞ்சர்கள், கையெறி குண்டுகள், ஏகே 47, நாட்டு வெடிகுண்டுகள் ஆகியவை கொண்டு தாக்குதலில் ஈடுபட்டதாக மத்திய ரிசர்வ் படை போலீசார் தெரிவித்துள்ளனர். 

சேலம் கெங்கவல்லியை சேர்ந்த திருமுருகன், தஞ்சை நல்லூரை சேர்ந்த பத்மநாபன், திருவாரூர் நீடாமங்கலத்தை சேர்ந்த செந்தில்குமார், மதுரை பெரியபூலாம்பட்டியை சேர்ந்த அழகுபாண்டி ஆகிய வீரர்கள் மரணமடைந்துள்ளனர்.

இந்நிலையில் சத்தீஸ்கரில் நக்சல்கள் தாக்குதலில் உயிரிழந்த 4 தமிழக வீரர்கள் குடும்பத்துக்கு ரூ.20 லட்சம் நிதியுதவி அளிக்கப்படும் என தமிழக முதல்வர் அறிவித்துள்ளார். 

Trending News