பனாமா பேப்பர்ஸ் விவகாரம்: நவாஸ் ஷெரீப் மீதான குற்றச்சாட்டு பதிவு தள்ளிவைப்பு

Updated: Oct 13, 2017, 04:08 PM IST
பனாமா பேப்பர்ஸ் விவகாரம்: நவாஸ் ஷெரீப் மீதான குற்றச்சாட்டு பதிவு தள்ளிவைப்பு

பனாமா நாட்டில் போலி நிறுவனங்கள் தொடங்கி உலகளவில் பிரபலங்கள் பலர் கோடிக்கணக்கில் பணத்தைக் குவித்துள்ளனர். இதுகுறித்து பனாமா பேப்பர்ஸ் என்ற பெயரில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாயின. அதில் ரஷ்ய அதிபர் புதின், பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப், இந்தியாவில் பாலிவுட் நடிகர் அமிதாப்பச்சன், நடிகை ஐஸ்வர்யா ராய் உட்பட பலருடைய பெயர்கள் இடம்பெற்று இருந்தது.

இதனையடுத்து, நவாஸ் ஷெரிப்புக்கு எதிராக அந்நாட்டு உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிமன்றம் தனி ஆணையம் அமைத்து விசாரணை நடத்தப்படும் என்று உத்தரவிட்டது.

அதன்படி நவாஸ் ஷெரீப் மற்றும் அவரது குடும்பத்தினர் மீதான 3 ஊழல் வழக்குகளை தனி ஆணையம் கோர்ட்டு விசாரித்தது. கடந்த மாதம் 26-ம் தேதி முதல்கட்ட விசாரணைக்காக நவாஸ் ஷெரீப் கோர்ட்டில் ஆஜரானார். 

நவாஸ் ஷெரீப் மீதான குற்றச்சாட்டு பதிவு இன்று மீண்டும் வழக்கு விசாரணைக்கு வந்தது. ஆனால் லண்டனில் சிகிச்சை பெறும் தனது மனைவியை காண நவாஸ் ஷெரீப் சென்றுள்ளதால், அவர் இன்றைய வழக்கு விசாரணையில் ஆஜராகவில்லை. ஆனால் அவரது மகள் மர்யம் ஷெரீப் மற்றும் மருமகன் சப்தார் நீதிமன்றத்திற்கு வந்திருந்தனர்.

வழக்கு சம்மந்தமாக நீதிமன்றம் கூடியதும், வக்கீல்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால், அங்கு பெரும் அமளி ஏற்பட்டது. இதனால் கோபமடைந்த நீதிபதி, இந்த வழக்கு வரும் 19-ம் தேதி நடைபெறும் என்று கூறி தள்ளி வைத்தார்.