இந்தியா உட்பட 80 நாடுகளுக்கு விசா தேவையில்லை: கத்தார் அறிவிப்பு

Updated: Aug 10, 2017, 10:36 AM IST
இந்தியா உட்பட 80 நாடுகளுக்கு விசா தேவையில்லை: கத்தார் அறிவிப்பு

கடந்த ஜூன் 5-ம் தேதி முதல் சவுதி அரேபியா ஐக்கிய அரபு அமீரகம், பக்ரைன், எகிப்து ஆகிய 4 நாடுகள் கத்தார் நாட்டுடன் ஆன தூதரக உறவை முறித்துக்கொண்டன.

தீவிரவாதிகளுக்கு மறைமுகமாக பண உதவி செய்வதாகவும், எதிரிநாடான ஈரானுடன் உறவு வைத்திருப்பதாகவும் கூறி கத்தாருக்கு இந்த தடை விதிக்கப்பட்டது. மேலும் கத்தாரில் இருந்து மேற்கண்ட நாடுகளின் தூதர்களும் அந்தந்த நாடுகளுக்கு திரும்பினர். 

இந்நிலையில், அண்டை நாடுகளின் தனிமைப்படுத்தும் நடவடிக்கைகளால் நெருக்கடிக்கு ஆளான கத்தார், இந்தியா உள்ளிட்ட 80 நாட்டவர்கள் விசா இன்றி கத்தாருக்கு வரலாம் என தெரிவித்துள்ளது. 

12-க்கும் மேற்பட்ட ஐரோப்பிய நாடுகள், இந்தியா, லெபனான், நியூசிலாந்து, தென் ஆப்பிரிக்கா, அமெரிக்கா ஆகிய நாடுகளைச்சேர்ந்தவர்கள் இனி கத்தாருக்கு செல்ல வேண்டும் எனில் உரிய பாஸ்போர்ட் மட்டும் வைத்திருந்தால் போதுமானது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

சுற்றுலா மற்றும் விமான போக்குவரத்தை ஊக்குவிக்கும் வகையில் கத்தார் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளதாக கத்தார் சுற்றுலா துறை அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும் இந்த அறிவிப்பால் வளைகுடா நாடுகளில் கத்தார் மிகவும் திறந்த வெளி நாடாக திகழும் என்றார். 

இந்த அறிவிப்பு உடனடியாக அமலுக்கு வந்துள்ளது. அரபு நாடுகளில் லெபனான் மட்டும் தான் இந்த 80 நாடுகள் பட்டியலில் இடம் பெற்றுள்ளது.80 நாடுகளில் 33 நாட்டு பயணிகள் 180 நாட்களும் 47 நாட்டைச்சேர்ந்தவர்கள் 30 நாள் வரையிலும் தங்கியிருக்கலாம் என்று கத்தார் அறிவித்துள்ளது.