ராஜபக்சேவிற்கு ஆதரவு இல்லை; தமிழ் முற்போக்குக் கூட்டணி அறிவிப்பு!

இலங்கையில்., தமிழ் முற்போக்குக் கூட்டணியின் 6 எம்பிக்கள், ராஜபக்சே அரசிற்கு ஆதரவு அளிக்க போவதில்லை என தெரிவித்துள்ளனர்!

Updated: Nov 7, 2018, 07:24 PM IST
ராஜபக்சேவிற்கு ஆதரவு இல்லை; தமிழ் முற்போக்குக் கூட்டணி அறிவிப்பு!

இலங்கையில்., தமிழ் முற்போக்குக் கூட்டணியின் 6 எம்பிக்கள், ராஜபக்சே அரசிற்கு ஆதரவு அளிக்க போவதில்லை என தெரிவித்துள்ளனர்!

இலங்கையில் நிலவும் அரசியல் நெருக்கடிக்குத் தீர்வு காண வரும் 14-ஆம் தேதி நாடாளுமன்றம் கூட்டப்படுகிறது. நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையை யார் நிரூபிக்கப் போகிறார்கள் என்ற கேள்வி எழுந்துள்ள நிலையில், அரசியல் உயர்மட்டச் சந்திப்புக்கள் கொழும்பில் தொடர்ந்து நடைப்பெற்று வருகின்றன.

இந்நிலையில் இன்று காலை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் அழைப்பின் பேரில் மனோ கணேசன் தலைமையிலான தமிழ் முற்போக்குக் கூட்டணியில் உள்ள 6 எம்.பிக்கள் ஜனாதிபதியைச் சந்தித்துப் பேசியுள்ளனர்.

இந்தச் சந்திப்பின் பின்னர், தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து பதிவிட்டுள்ள தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவர் மனோ கணேசன், ''நாகரீகமான ஒரு அரசியல் இயக்கம் என்ற அடிப்படையில், தமிழ் முற்போக்கு கூட்டணியின் ஆறு (6) எம்பிக்களும் ஒரு குழுவாக எனது தலைமையிலே, ஜனாதிபதி மைத்திரியை அவரது உத்தியோகபூர்வ வாசஸ்தலத்திலே சந்தித்து, அவரது அரசாங்கத்தில் இணைய முடியாது என நேரடியாகக் கூறி விட்டோம்.'' என்று பதிவிட்டுள்ளார்.

சமீபத்தில், இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை பதவி நீக்கம் செய்து அதிபர் சிறிசேன அதிரடி அறிவிப்பை வெளியிட்டார். மேலும், முன்னாள் அதிபர் ராஜபக்சவை புதிய பிரதமராக அறிவித்து, பதவியேற்கச் செய்தார். அதிபர் சிறிசேனவின் அறிவிப்பை ஏற்காத ரணில், பிரதமராக தான் நீடிப்பதாக அதிபருக்கு கடிதம் எழுதினார். ராஜபக்சேவை பிரதமர் பதவியில் நியமிக்க அதிபர் சிறிசேனாவுக்கு அதிகாரம் இல்லை என்றும் அவர் தெரிவித்தார். 

இதனைத்தொடர்ந்து தமக்கு பெரும்பான்மை இருப்பதாகவும், நாடாளுமன்றத்தைக் கூட்ட வேண்டும் என்றும் ரணில் கோரிக்கை விடுத்தார். இந்தநிலையில் வரும் 14- ஆம் நாள் அந்நாட்டு நாடாளுமன்றம் கூட உள்ளது.

இலங்கை நாடாளுமன்றத்தில் நம்பிக்கையில்லா தீர்மானத்தில் வெற்றிபெற 113 வாக்குகள் தேவை. தற்போது தமிழ் முற்போக்குக் கூட்டணியின் 6 எம்பிக்கள், ராஜபக்சே அரசிற்கு ஆதரவு அளிக்கவில்லை என தெரிவித்துள்ளனர்!