7th Pay Commission DA Hike: கடந்த ஆண்டைப் போலவே, இந்த முறையும் ஹோலி பண்டிகைக்கு முன்னர் அகவிலைப்படி அதிகரிப்பு பற்றிய அறிவிப்பு வரும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அபப்டி நடக்கவில்லை.

7th Pay Commission: மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி அதிகரிப்பு (DA) மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கான அகவிலை நிவாரணம் (DR) ஆகியவற்றுக்கான காத்திருப்பு நீண்டு கொண்டே செல்கிறது. அகவிலைப்படி மற்றும் அகவிலை நிவாரணம் ஆண்டுக்கு இரண்டு முறை, ஜனவரி மற்றும் ஜூலை மாதங்களில் திருத்தப்படுகின்றது. இதற்கான அறிவிப்பு மார்ச் மற்றும் செப்டம்பர்-அக்டோபர் மாதங்களில் செய்யப்படுகிறது. எனினும், இந்த முறை அதன் அறிவிப்பு மிகவும் தாமதமாகிறது.
Dearness Allowance: அகவிலைப்படி அதிகரிப்பு
முன்னதாக கடந்த ஆண்டைப் போலவே, இந்த முறையும் ஹோலி பண்டிகைக்கு முன்னர் அகவிலைப்படி அதிகரிப்பு பற்றிய அறிவிப்பு வரும் என எதிர்பார்க்கப்பட்டது. பின்னர் மார்ச் 19 அன்று நடைபெறும் மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் இதற்கு ஒப்புதல் அளிக்கப்படலாம் என்ற செய்தி வந்தது. ஆனால் இது குறித்து இதுவரை எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. இப்போது அரசாங்கம் அடுத்த வாரம் அதற்கான இறுதி ஒப்புதலை வழங்கக்கூடும் என வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
DA Hike: டிஏ உயர்வு அறிவிப்பு எப்போது வரும்?
அகவிலைப்படியை அதிகரிக்கும் முடிவு ஏற்கனவே தாமதமாகிவிட்டதால், அடுத்த வாரம் நடைபெறும் அமைச்சரவைக் கூட்டத்தில் அரசாங்கம் அதற்கு ஒப்புதல் அளிக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகின்றது. அதிகரித்த அகவிலைப்படி ஜனவரி 2025 முதல் பொருந்தும். இதன் காரணமாக ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் ஜனவரி, பிப்ரவரி மற்றும் மார்ச் மாத டிஏ அரியர் தொகையை (DA Arrears) ஏப்ரல் மாத சம்பளத்துடன் சேர்த்துப் பெறுவார்கள்.
Central Government Employees: அகவிலைப்படி உயர்வால் மத்திய அரசு ஊழியர்களுக்கு கிடைக்கும் நன்மைகள் என்ன?
மத்திய அரசு ஊழியர்களுக்கு தற்போதைய பணவீக்க விகிதம் மற்றும் அவர்களின் அடிப்படை ஊதியத்தின் அடிப்படையில் அகவிலைப்படி வழங்கப்படுகிறது. அதே போல் இவற்றின் அடிப்படையில் ஓய்வூதியதாரர்களுக்கு (Pensioners) அகவிலை நிவாரணம் கிடைக்கிறது. ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் மீதான பணவீக்கச் சுமையைக் குறைப்பதே மத்திய அரசின் நோக்கமாகும். பணவீக்க விகிதத்தின் அடிப்படையில் அரசாங்கம் வருடத்திற்கு இரண்டு முறை இதை மாற்றுகிறது. புதிய அகவிலைப்படி விகிதங்கள் ஜனவரி முதல் ஜூன் வரையிலான அரையாண்டுக்கும், பின்னர் ஜூலை முதல் டிசம்பர் வரையிலான அரையாண்டுக்கும் பொருந்தும். அரசாங்கத்தால் அறிவிக்கப்பட்ட அகவிலைப்படியின் பலன் அரசு ஊழியர்களுக்கும் பொதுத்துறை நிறுவனங்களில் (PSU) அதாவது அரசு நிறுவனங்களில் பணிபுரிபவர்களுக்கும் மட்டுமே கிடைக்கும். தனியார் துறை ஊழியர்களுக்கு இந்தப் பலன் கிடைக்காது.
அரசாங்கம் வழக்கமாக ஜனவரி-ஜூன் அகவிலைப்படி உயர்வை ஹோலி பண்டிகைக்கு முன்பும், ஜூலை-டிசம்பர் கட்டண உயர்வை தீபாவளிக்கு முன்பும் அறிவிக்கும். ஆனால் இந்த முறை ஜனவரி முதல் ஜூன் 2025 வரையிலான அதிகரிப்பு சரியான நேரத்தில் நடக்கவில்லை. தற்போதைய பணவீக்க அளவைக் கருத்தில் கொண்டு, இந்த முறை அகவிலைப்படி 2% அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாகவும், இதன் காரணமாக அகவிலைப்படி விகிதம் 53% இலிருந்து 55% ஆக அதிகரிக்கக்கூடும் என்றும் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்த உயர்வு ஜூலை-டிசம்பர் 2024க்கான அகில இந்திய நுகர்வோர் விலைக் குறியீட்டின் (CPI) தரவுகளின் அடிப்படையில் செய்யப்படும்.
Salary Hike: அகவிலைப்படி அதிகரித்தால் ஊதிய உயர்வு எவ்வளவு இருக்கும்?
அடிப்படை சம்பளம் ரூ.18,000 உள்ள ஊழியருக்கு, 2% அதிகரிப்பிற்குப் பிறகு, ஒவ்வொரு மாதமும் ரூ.360 கூடுதலாகக் கிடைக்கும். இந்த வழியில், ஒரு வருடத்தில் ரூ.4,320 கூடுதல் வருமானம் கிடைக்கும்.
Pension Hike: ஓய்வூதிய உயர்வு எவ்வளவு இருக்கும்?
ஒரு ஓய்வூதியதாரரின் அடிப்படை ஓய்வூதியம் ரூ.9,000 ஆக இருந்தால், 2% அதிகரிப்புடன், அவருக்கு ஒவ்வொரு மாதமும் ரூ.180 கூடுதலாகக் கிடைக்கும். அதாவது அவருக்கு ஒரு வருடத்தில் ரூ.2,160 கூடுதல் பலன் கிடைக்கும்.
சில ஊடக அறிக்கைகள் அகவிலைப்படி உயர்வு 2% -க்கும் அதிகமாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பையும் வெளிப்படுத்தியுள்ளன. இந்திய ரிசர்வ் வங்கி (RBI) நடப்பு நிதியாண்டிற்கான பணவீக்க விகித மதிப்பீட்டை 4.5% லிருந்து 4.8% ஆக உயர்த்தியுள்ளது. இதுபோன்ற சூழ்நிலையில், பணவீக்கத்தின் தாக்கம் 4% வரை உயரக்கூடும் என்பதால், அரசாங்கம் அகவிலைப்படியை மேலும் அதிகரிக்கக்கூடும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
Central Government: அனைவரின் கவனமும் மத்திய அரசின் மீது உள்ளது
அரசாங்கத்தால் அறிவிக்கப்படும் அகவிலைப்படி உயர்வு, மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு நிம்மதியைத் தரும். ஏனெனில் இது அவர்களின் சம்பளத்தையும் ஓய்வூதியத்தையும் அதிகரிக்கும். இருப்பினும், இந்த முறை அதிகரிப்பு முந்தைய ஆண்டுகளை விட குறைவாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது ஊழியர்களுக்கு சிறு ஏமாற்றத்தை அளிக்கக்கூடும்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ