மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கான அகவிலைப்படி (DA) மற்றும் அகவிலை நிவாரண (DR) தொகையை 2% அதிகரிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட இந்த முடிவின் மூலம் 1 கோடிக்கும் மேற்பட்ட ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு பயனடைவார்கள். ஜனவரி 1, 2025 முதல் இந்த உயர்வு அமலுக்கு வரும் என்பது குறிப்பிடத்தக்கது.
தாமதமாக வெளியான அறிவிப்பு
மத்திய அரசு, இந்த முறை அகவிலைப்படி உயர்வு குறித்த அறிவிப்பை சற்று தாமதமாக அறிவித்துள்ளது. வழக்கமாக, ஹோலி அல்லது தீபாவளிக்கு முன் அரசாங்கம் இந்த அறிவிப்பை அரசு வெளியிடும். ஆனால் இந்த முறை ஜனவரி - ஜூன் மாதத்திற்கான அகவிலைப்படி உயர்வு மார்ச் மாத இறுதியில் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த முறை கடந்த 7 ஆண்டுகளில் மத்திய அரசு ஊழியர்களுக்கு மிகக் குறைந்த அகவிலைப்படி உயர்வு என்பதும் குறிப்பிடத்தக்கது. வழக்கமாக, அரசாங்கம் 3% அல்லது 4% அதிகரித்து வந்த நிலையில் இந்த முறை அது 2% மட்டுமே அதிகரித்துள்ளது.
ஊழியர்களுக்கு அகவிலைப்படி அரியர்ஸ் கிடைப்பது எப்போது?
ஏப்ரல் மாத சம்பளம் மற்றும் ஓய்வூதியத்தில் அறிவிக்கப்பட்டபடி அகவிலைப்படி உயர்வு கிடைப்பதோடு மட்டுமல்லாமல், 2025 ஜனவரி முதல் மார்ச் காலத்திற்கான நிலுவைத் தொகையும் வழங்கப்படும். அதாவது, ஊழியர்களுக்கு மூன்று மாத நிலுவை பணமும் கிடைக்கும்.
சம்பளம் உயர்வு விபரம்
முன்னதாக, 2024 ஜூலை - டிசம்பர் காலத்திற்கு DA அகவிலைப்படி 50% என்ற அளவில் இருந்து 53% ஆக உயர்த்தப்பட்ட நிலையில், இப்போது அது 55% என்ற அளவில் உயரும். 7வது சம்பளக் குழுவின் கீழ், மத்திய அரசு ஊழியரின் குறைந்தபட்ச அடிப்படை சம்பளம் ரூ.18,000 ஆகும். 2% DA உயர்வு மாதத்திற்கு ரூ.360 என்ற அளவில் இருக்கும். அதாவது மூன்று மாதங்களுக்கான (2025 ஜனவரி முதல் மார்ச் வரை) நிலுவைத் தொகை ரூ.1,080 என்ற அளவில் இருக்கும்.
ஓய்வூதிய உயர்வு விபரம்
மத்திய அரசின் ஓய்வூதியதாரர்களை பொறுத்தவரையில் குறைந்தபட்ச அடிப்படை ஓய்வூதியமான ரூ.9,000 பெறும் ஓய்வூதியதாரர்களுக்கு, நிலுவைத் தொகை ரூ.540 என்ற அளவில் இருக்கும். 2025 ஏப்ரல் மாதத்திற்கான ஓய்வூதியத்துடன் வழங்கப்படும்.
7வது சம்பள கமிஷனின் கீழ் கடைசி DA உயர்வு
8வது சம்பளக் குழுவின் அறிவிப்புக்குப் பிறகு இந்த DA உயர்வு முதல் முறையாகும். 8வது சம்பள கமிஷன் அமைக்கப்படுவதாக அரசாங்கம் ஜனவரி 16, 2025 அன்று அறிவித்தது, அதன் பரிந்துரைகள் 2026 ஜனவரி 1ம் தேதி, முதல் நடைமுறைக்கு வரும். வழக்கமாக சம்பள கமிஷனின் பரிந்துரைகளைத் தயாரிக்க ஒரு வருடம் ஆகும். எனவே இந்த ஆண்டு தீபாவளிக்கு முன்னதாக அறிவிக்கப்படும் 2025 ஜூலை - டிசம்பர் மாதத்திற்கான அகவிலைப்படி உயர்வு, 7வது சம்பள கமிஷனின் கீழ் கடைசி உயர்வாக இருக்கும்.
அக்டோபர்- நவம்பர் மாதத்தில் அறிவிப்பு வெளியாகலாம்
2025 ஜூலை - டிசம்பர் மாத காலத்திற்கான அகவிலைப்படி உயர்வை அரசாங்கம் 2025 அக்டோபர் - நவம்பர் மாதத்தில் அறிவிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போதைக்கு, ஏப்ரல் மாதத்திற்கான அதிகரித்த அகவிலைப்படி மற்றும் மூன்று மாத நிலுவைத் தொகை அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு பெரும் நிவாரணம் அளிக்கும்.
8வது சம்பள கமிஷன் குறித்த எதிர்பார்ப்பு
8வது சம்பள குழுவின் உறுப்பினர்களின் பெயர்களை விரைவில் மத்திய அரசு அறிவிக்கக் கூடும். இந்தக் குழு 15 முதல் 18 மாதங்களில் தனது அறிக்கையை சமர்ப்பிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. குழுவின் பரிந்துரைகளின் அடிப்படையில், மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வு பெற்றவர்களுக்கு சம்பளம் மற்றும் ஓய்வூதிய உயர்வை அரசாங்கம் முடிவு செய்யும் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க | 8வது ஊதியக்குழு: ஊதிய உயர்வு, சமமான ஓய்வூதியம்.... நிதி அமைச்சர் அளித்த மாஸ் அப்டேட்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ









