)
7th vs 8th Pay Commission: மத்திய அரசு இந்த ஆண்டு ஜனவரி மாதம் 8வது ஊதியக்குழுவிற்கான அறிவிப்பை வெளியிட்டது. இது மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு மிகப்பெரிய செய்தியாக வந்தது. தற்போது அமலில் உள்ள 7வது ஊதியக்குழுவின் பரிந்துரைகள் டிசம்பர் 2025 இல் நிறைவடையவுள்ளன. ஜனவரி 2026 முதல் 8வது ஊதியக்குழு அமலுக்கு வர வேண்டும்.
எனினும், இன்னும் ஆணையத்தின் தலைவர் மற்றும் உறுப்பினர்களுக்கான நியமனமே நடக்கவில்லை. குறிப்பு விதிமுறைகளும் இன்னும் இறுதிசெய்யப்படவில்லை. ஆகையால், 8வது ஊதியக்குழு 2026 ஆம் ஆண்டின் பாதியில் அல்லது 2027 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் அமலுக்கு வரும் என நிபுணர்கள் கருதுகிறார்கள்.
1947 முதல், அரசாங்கம் ஏழு ஊதியக்குழுக்களை அமைத்துள்ளது. அரசு ஊழியர்களுக்கான சம்பள கட்டமைப்புகள், சலுகைகள் மற்றும் கொடுப்பனவுகளை தீர்மானிப்பதில் சம்பள ஆணையம் முக்கிய பங்கு வகிக்கிறது. பெரும்பாலான அரசுக்கு சொந்தமான நிறுவனங்கள் ஆணையத்தின் பரிந்துரைகளைப் பின்பற்றுகின்றன.
7வது மற்றும் 8வது சம்பள ஆணையங்களுக்கு இடையிலான சில முக்கிய வேறுபாடுகள் பற்றி இங்கே காணலாம்.
7வது ஊதியக்குழு 2014 இல் உருவாக்கப்பட்டது. அதன் பரிந்துரைகள் ஜனவரி 1, 2016 முதல் செயல்படுத்தப்பட்டன. இது பல மாற்றங்களை அறிமுகப்படுத்தியது. அவற்றின் முக்கிய அம்சங்கள் இதோ:
குறைந்தபட்ச ஊதியம்: மத்திய அரசு ஊழியர்களின் குறைந்தபட்ச அடிப்படை ஊதியம் மாதத்திற்கு ₹7,000 லிருந்து ₹18,000 ஆக உயர்த்தப்பட்டது.
ஃபிட்மெண்ட் ஃபாக்டர்: ஃபிட்மெண்ட் ஃபாக்டர் என்பது அடிப்படை ஊதியத்தை தீர்மானிக்க உதவும் ஒரு காரணியாகும். பழைய அடிப்படை ஊதியத்துடன் ஃபிட்மெண்ட் ஃபாக்டர் பெருக்கப்பட்டு புதிய அடிப்படை ஊதியம் நிர்ணயிக்கப்படுகின்றது. 7வது ஊதியக் குழுவில், ஃபிட்மெண்ட் ஃபாக்டர் 2.57 ஆக நிர்ணயிக்கப்பட்டது. அதாவது புதிய சம்பளத்தைக் கணக்கிட அடிப்படை ஊதியம் 2.57 ஆல் பெருக்கப்பட்டது.
அலனவ்சுகள்: 7வது ஊதியக் குழு, அகவிலைப்படி (DA), வீட்டு வாடகை கொடுப்பனவு (HRA) மற்றும் போக்குவரத்து கொடுப்பனவு (TA) போன்ற முக்கிய அலவன்சுகளில் திருத்தங்களை அறிமுகப்படுத்தியது. அப்போதிருந்த பொருளாதார நிலைமைகள் மற்றும் பணவீக்கப் போக்குகளைக் கருத்தில் கொண்டு இந்த அலவன்சுகள் தீர்மானிக்கப்பட்டன.
ஓய்வூதியம்: குறைந்தபட்ச ஓய்வூதியம் மாதத்திற்கு ₹3,500 இலிருந்து ₹9,000 ஆக அதிகரித்தது.
ஊதிய அமைப்பு: ஊதியக் கட்டமைப்பில் வெளிப்படைத்தன்மையை அதிகரிக்க 7வது ஊதியக் குழு எளிமைப்படுத்தப்பட்ட 19-நிலை ஊதிய மேட்ரிக்ஸை அறிமுகப்படுத்தியது. இது அனைத்து மத்திய அரசு ஊழியர்களுக்கும் சம்பளத்தைக் காட்டும் ஒரு ஒற்றை சார்ட் போன்றது.
8வது ஊதியக் குழு: எதிர்பார்ப்புகள் என்ன?
பல வித எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ள 8வது ஊதியக் குழு இன்னும் சில மாதங்கள்ல் அமலுக்கு வரும். இதில் உள்ள முக்கிய எதிர்பார்ப்புகள் பின்வருமாறு:
சம்பள உயர்வு: 8வது ஊதியக் குழுவின் கீழ், குறைந்தபட்ச அடிப்படை ஊதியத்தில் ஒரு பெரிய உயர்வு இருக்கக்கூடும். குறைந்தபட்ச அடிப்படை ஊதியம் மாதத்திற்கு ₹34,500 - ₹41,000 ஐ எட்டும் என எதிர்பார்க்கபடுகிறது.
ஃபிட்மென்ட் ஃபாக்டர்: ஃபிட்மென்ட் ஃபாக்டர் 2.86 ஆக உயரக்கூடும், இது பல்வேறு நிலை ஊழியர்களுக்கு மிகப்பெரிய ஊதிய உயர்வை உறுதி செய்யும்.
அலவன்சுகள்: அகவிலைப்படி, வீட்டு வாடகை கொடுப்பனவு, பயணப்படி போன்றவை தற்போதைய பணவீக்க விகிதம் மற்றும் நாட்டின் பொருளாதார நிலைமைகளைப் பிரதிபலிக்கும் வகையில் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஓய்வூதியம்: 8வது ஊதியக் குழு ஓய்வூதிய அளவையும் அதிகரிக்கக்கூடும். சரியான நேரத்தில் ஓய்வுதியம் வழங்கப்படுவதையும், புதிய ஊதியக் கட்டமைப்புகளுக்கு ஏற்ப மாற்றங்களையும் உறுதி செய்ய மத்திய அரசு அத்தியாவசிய நடவடிக்கைகளை எடுக்கும்.
செயல்திறன் சார்ந்த ஊக்கத்தொகைகள்: அதிக செயல்திறன் கொண்ட ஊழியர்களுக்கு வெகுமதி அளிக்க உற்பத்தித்திறன் சார்ந்த ஊக்கத்தொகைகள் அல்லது கூடுதல் ஊதியத்தை அறிமுகப்படுத்துவது குறித்த விவாதங்கள் நடந்து வருகின்றன.
மொத்தத்தில் 7வது ஊதியக்குழுவுடன் ஒப்பிடுகையில், ஊதியம், ஒய்வூதியம், அலவன்சுகள், புதிய வசதிகள் என அனைத்திலும் 8வது ஊதியக்குழுவில் குறிப்பிடத்தக்க மாற்றங்கள் இருக்கும் என்றும் இதனால் மத்திய அரசு ஊழியர்களுக்கும் ஓய்வூதியதாரர்களுக்கும் மேம்பட்ட நன்மைகள் கிடைக்கும் என்றும் பொருளாதார நிபுணர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ