)
8th Pay Commission DA Merger: சமீபத்தில் உருவாக்கப்பட்ட 8வது ஊதியக்குழ தனது பணியை தொடங்கியுள்ளது. பலரது எதிர்பார்ப்பு டிஏ இணைப்பின் மீதுள்ளது. அகவிலைப்படி அடிப்படை ஊதியத்துடன் இணைக்கப்படுமா? இதனால் மத்திய அரசு ஊழியர்களுக்கும், ஓய்வூதியதாரர்களுக்கும் என்ன நன்மைகள் கிடைக்கும்? மொத்த சம்பளம் எவ்வளவு அதிகரிக்கும்? இந்த கேள்விகளுக்கான விடைகளை இந்த பதிவில் தெரிந்துகொள்ளலாம்.
சில நாட்களுக்கு முன்னர் மத்திய அரசு 8வது ஊதியக்குழுவிற்கான பரிந்துரை விதிமுறைகளுக்கு ஒப்புதல் அளித்தது. அதைத் தொடர்ந்து ToR குறித்து பெரும் சர்ச்சை எழுந்துள்ளது. புதிய சம்பள கமிஷனின் வரம்பிலிருந்து சுமார் 69 லட்சம் ஓய்வூதியதாரர்கள் விடுபட்டுள்ளதாக மத்திய அரசுடன் தொடர்புடைய பல்வேறு ஊழியர் குழுக்கள் மற்றும் தொழிற்சங்கங்கள் கூறி வருகின்றன.
மேலும், பரிந்துரைகள் எப்போது செயல்படுத்தப்படும் என்பதை ToR குறிப்பிடவில்லை. அகவிலைபடி அடிப்படை சம்பளத்துடன் இணைக்கப்படுமா என்ற கேள்விக்கும் இன்னும் பதில் இல்லை. இது ஊழியர்களை மிகவும் வருத்தப்படுத்தியுள்ளது. புதிய சம்பள கமிஷனை அமைப்பதிலும் அதன் திட்டங்களை வரைவதிலும் அரசாங்கத்தின் ஒருதலைப்பட்ச அணுகுமுறை தெரிவதாக பல தொழிற்சங்கங்கள் கூறுகின்றன. ஊழியர்களுக்கும் ஓய்வூதியதாரர்களுக்கும் பல கேள்விகள் உள்ளன. அவற்றுக்கு விடை கிடைக்காவிடில் போராட்டங்களை நடத்தவுள்ளதாகவும் ஊழியர் சங்கங்கள் அச்சுறுத்துகின்றன. இதுவரை, இந்த பிரச்சனை குறித்து அரசாங்கம் எந்த பதிலையும் அளிக்கவில்லை.
டிசம்பர் 1 ஆம் தேதி தொடங்கும் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரை அனைவரும் இப்போது எதிர்நோக்கியுள்ளனர். 8வது ஊதியக்குழு குறித்த கேள்விகளுக்கு அரசாங்கத்தின் நிலைப்பாடு பற்றி நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் சில பதில்களை அளிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த அமர்வுகளைப் போலவே, இந்த முறையும் 8வது ஊதியக்குழு குறித்து பல கேள்விகள் இருக்கும். ஆனால் இந்த முறை, ToR இல் உள்ள முரண்பாடுகள் பற்றி நேரடி கேள்விகள் கேட்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ToR தவிர, ஓய்வூதியம், அகவிலைப்படி மற்றும் பிற ஓய்வூதிய சலுகைகள் உட்பட மத்திய ஊழியர்களுக்கான பல நீண்டகால பிரச்சினைகள் இந்த அமர்வின் போது பரபரப்பான கேள்விகளுக்கும் பதில்களுக்கும் வழிவகுக்கும்.
எம்.பி. ஆனந்த் படோரியா இரண்டு முக்கியமான விஷயங்கள் குறித்து அரசாங்கத்திடம் எழுத்துப்பூர்வ பதில்களைக் கோரியுள்ளார்:
1. 8வது சம்பளக் குழு அமலாக்க தேதி
2. அகவிலைப்படியை (DA) அடிப்படை ஊதியத்துடன் இணைப்பதற்கான முடிவு
இதே போன்ற நூற்றுக்கணக்கான கேள்விகள் ஏற்கனவே மக்களவை மற்றும் மாநிலங்களவை வலைத்தளங்களில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன.
வழக்கமாக, புதிய ஊதியக்குழுக்கள் அமைக்கப்படும்போது, அகவிலைப்படி அடிப்படை ஊதியத்துடனும் அகவிலை நிவாரணம் அடிப்படை ஓய்வூதியத்துடன் முறையே இணைக்கப்படுகின்றன. அதன் பிறகு அகவிலைப்படி பூஜ்ஜியம் ஆக்கப்பட்டு, அகவிலைப்படி கணக்கீடு மீண்டும் தொடங்குகிறது. இந்த செயல்முறை 7வது ஊதியக் குழுவிலும் நடந்தது. அதேபோல், 8வது ஊதியக்குழுவிலும் தற்போதுள்ள அகவிலைப்படி அடிப்படை ஊதியத்துடன் இணைக்கப்பட்டு அதன் பிறகு திருத்தப்பட்ட சம்பளம்/ஓய்வூதியம் கணக்கிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனினும், இது குறித்து இன்னும் அரசு தெளிவாக எதையும் கூறவில்லை. இது நடந்தால் ஊழியர்களின் ஊதியமும் ஓய்வூதியதாரர்களின் ஓய்வூதியமும் மிகப்பெரிய ஏற்றத்தைக் காணும்.
கடந்த மூன்று தசாப்தங்களாக, சில்லறை பணவீக்கத்துடன் அகவிலைப்படி ஒத்துப்போகவில்லை என்று ஊழியர் அமைப்புகள் கூறுகின்றன. அகவிலைப்படி ஏற்கனவே 50% ஐத் தாண்டிவிட்டது. தற்போது டிஏ 58% -இல் உள்ளது. 8வது ஊதியக்குழு தோராயமாக 18 மாதங்களுக்கு பிறகு அமலுக்கு வந்தால், 6 மாதங்களுக்கு ஒரு முறை 3% சராசரி டிஏ உயர்வு என்ற பட்சத்தில், 18 மாதங்களுக்குப் பிறகு அகவிலைப்படி 67% ஆக இருக்கு. அந்த நிலையில், இந்த இரு மாற்றங்களில் ஒன்று ஏற்பட வாய்ப்புள்ளது:
- 67% அகவிலைப்படி தொகை மொத்தமாக அடிப்படை ஊதியத்துடன் சேர்க்கப்பட்டு, அகவிலைப்படி கணக்கீடு 0% முதல் தொடங்கலாம்.
அல்லது
- 50% அகவிலைப்படி மட்டும் அடிப்படை ஊதியத்துடன் இணைக்கப்பட்டு, புதிய அகவிலைப்படி கணக்கீடு 17% முதல் தொடங்கலாம்.
எனினும் இவை மதிப்பீடுகளே. இது குறித்த முழுமையான தகவல் 8வது ஊதியக்குழுவின் பரிந்துரைகள் வெளிவந்தவுடன்தான் தெரியவரும்.
தற்போதைய ஊதிய முறை ஜனவரி 1, 2016 அன்று தொடங்கிய 7வது சம்பளக் குழுவை அடிப்படையாகக் கொண்டது. வரலாற்று ரீதியாக, பத்து ஆண்டுகளுக்கு ஒரு முறை ஒரு புதிய சம்பளக் குழு அமைக்கப்படுகிறது. இந்த முறையைப் பின்பற்றி, 2026 ஆம் ஆண்டில் புதிய சம்பளக் குழு செயல்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. ToR பிரச்சினையில் அரசாங்கம் தனது நிலைப்பாட்டை தெளிவுபடுத்துவதற்காக மத்திய அரசு ஊழியர்களும் ஓய்வூதியதாரர்களும் காத்திருக்கிறார்கள்.
(பொறுப்பு துறப்பு: இந்த பதிவு தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. சமீபத்திய மற்றும் துல்லியமான தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அரசாங்க தளங்களை அணுக பரிந்துரைக்கப்படுகிறது.)
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ