)
Aadhaar : இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI), நாடு முழுவதும் உள்ள பள்ளிக் குழந்தைகளுக்கு ஆதார் அட்டையில் கட்டாய பயோமெட்ரிக் தகவல்களை (MBU) புதுப்பிக்குமாறு வலியுறுத்தியுள்ளது. குறிப்பாக 5 முதல் 15 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கான இந்த அப்டேட்டை உடனடியாக மேற்கொள்ளுமாறு, மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் தலைமைச் செயலாளர்களுக்கு UIDAI தலைமைச் செயல் அதிகாரி திரு. புவனேஷ் குமார் கடிதம் எழுதியுள்ளார்.
UDISE+ தளம் மூலம் அப்டேட்:
மத்திய கல்வித் துறையுடன் இணைந்து UIDAI, ஒருங்கிணைந்த மாவட்ட தகவல் அமைப்பான UDISE+ (Unified District Information System for Education Plus) தளத்தில், குழந்தைகளுக்கான நிலுவையில் உள்ள ஆதார் பயோமெட்ரிக் அப்டேட் தகவல்களைப் பார்க்க வழி செய்துள்ளது. இதன் மூலம், பள்ளிகள் தங்கள் மாணவர்களில் யார் யார் பயோமெட்ரிக் அப்டேட் செய்ய வேண்டும் என்பதை எளிதாக அறிந்துகொள்ள முடியும். இது, சுமார் 17 கோடி குழந்தைகளுக்குப் பயோமெட்ரிக் தகவல்களைப் புதுப்பிக்க உதவும்.
ஏன் இந்த அப்டேட் முக்கியம்?
ஆதார் அட்டையில் பயோமெட்ரிக் தகவல்களை சரியான நேரத்தில் புதுப்பிப்பது மிகவும் அவசியம். குறிப்பாக குழந்தைகளுக்கு 5 வயது மற்றும் 15 வயதில் இந்த அப்டேட் கட்டாயம். சரியான நேரத்தில் அப்டேட் செய்யாவிட்டால், பின்னாளில் அரசு நலத்திட்ட உதவிகள், நுழைவுத் தேர்வுகள் (NEET, JEE, CUET), மற்றும் பல்கலைக்கழகப் படிப்புகளில் பதிவு செய்யும்போது சிரமங்கள் ஏற்படலாம். கடைசி நேரத்தில் அவசரமாகச் சென்று அப்டேட் செய்யும்போது ஏற்படும் பதற்றத்தைத் தவிர்க்க, இப்போதே இந்த அப்டேட்டை முடிக்க வேண்டும் என்று UIDAI கேட்டுக்கொண்டுள்ளது.
பள்ளிகளில் சிறப்பு முகாம்கள்:
பள்ளிகள் தங்கள் வளாகங்களிலேயே பயோமெட்ரிக் அப்டேட் முகாம்களை நடத்த வேண்டும் என்று திரு. புவனேஷ் குமார் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். பள்ளி நிர்வாகம் இந்த முகாம்களை நடத்துவதன் மூலம், ஒரே இடத்தில் பல மாணவர்களின் பயோமெட்ரிக் அப்டேட்டை எளிதாக முடிக்க முடியும் என்று அவர் தெரிவித்துள்ளார். UIDAI மற்றும் கல்வித் துறையின் இந்த கூட்டு முயற்சி, குழந்தைகளின் ஆதார் பயோமெட்ரிக் தகவல்களைப் புதுப்பிப்பதை எளிமையாக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழ்நாட்டில் ஏற்கனவே தொடக்கம்
ஆதார் ஆணையம் நாடு முழுவதும் உள்ள குழந்தைகளுக்கு ஆதார் பயோமெட்ரிக் அப்டேட்டை மேற்கொள்ளுமாறு இப்போது அறிவுறுத்தியிருக்கிறது. ஆனால், தமிழ்நாடு அரசு, 1 முதல் 12-ஆம் வகுப்பு வரை படிக்கும் சுமார் 15 லட்சம் மாணவர்களின் நலனுக்காக, அவர்களின் ஆதார் அட்டையில் பயோமெட்ரிக் விவரங்களைப் புதுப்பிக்கும் திட்டத்தை ஏற்கனவே தொடங்கிவிட்டது. ஆதார் புதுப்பித்தல் பணியை எளிமையாக்கும் வகையில், இந்திய அஞ்சல் துறை இந்தப் பணியைச் செய்ய முன்வந்துள்ளது.
அஞ்சலகப் பணியாளர்கள் பள்ளிகளிலேயே சிறப்பு முகாம்களை அமைத்து, மாணவர்களுக்கான பயோமெட்ரிக் புதுப்பித்தல் பணிகளை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதன் மூலம், மாணவர்கள் நீண்ட வரிசையில் காத்திருக்கவோ அல்லது வெளியூர்களுக்குச் செல்லவோ தேவையில்லை. அஞ்சல் குறியீட்டு எண் அடிப்படையில் பள்ளிகள் வகைப்படுத்தப்பட்டு, இந்தப் பணிகள் திறம்பட நடைபெற்று வருகிறது. இந்த ஆதார் புதுப்பித்தல் பணி, ஆகஸ்ட் மாதம் தொடங்கி டிசம்பர் மாதத்திற்குள் இரண்டு கட்டங்களாக முடிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ