)
Ration Card : நியாய விலைக் கடைகள் மூலம் அத்தியாவசியப் பொருட்கள், தொலைதூர மற்றும் கிராமப்புற மக்களுக்குத் தடையின்றி கிடைப்பதை உறுதி செய்வதற்காக, மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. மத்திய அரசு கொண்டு வந்துள்ள புதிய முக அடையாள அங்கீகாரம் குறித்த அப்டேட்டை நாடாளுமன்றத்தில் மத்திய இணை அமைச்சர் தெரிவித்துள்ளார். மேலும், தமிழ்நாடு அரசு ரேஷன் கடைகளில் கொண்டு வந்திருக்கும் முக்கிய மாறங்களையும் இங்கே தெரிந்து கொள்ளுங்கள்..
மத்திய அரசின் முக அடையாள அங்கீகார முறை
மத்திய அரசு, நியாய விலைக் கடைகளில் ரேஷன் பொருட்களைப் பெறுவதற்குப் பயனாளிகளின் முக அடையாள அங்கீகார முறையை (Face Authentication) ஜூலை 1, 2025 முதல் அமல்படுத்தியுள்ளது. இதன் முதன்மை நோக்கம், உண்மையான பயனாளிகளுக்கு மட்டுமே பொருட்கள் கிடைப்பதை உறுதி செய்வதுதான். கடந்த 2024 ஆகஸ்டில் சோதனை முறையில் தொடங்கப்பட்ட இந்தத் திட்டம், டிசம்பர் 2024 முதல் நாடு முழுவதும் விரிவுபடுத்தப்பட்டுள்ளது. ரேஷன் கடைப் பணியாளர்களுக்கு இந்த புதிய தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதற்கான பயிற்சி வழங்கப்பட்டுள்ளது.
மக்களவையில் கேட்கப்பட்ட ஒரு கேள்விக்கு, மத்திய மகளிர் மற்றும் குழந்தைகள் நலத்துறை இணையமைச்சர் திருமதி சாவித்ரி தாக்கூர் அளித்த பதிலில், ஆகஸ்ட் 5, 2025 நிலவரப்படி, 4.91 கோடி தகுதியுள்ள பயனாளிகளில் 3.69 கோடி பயனாளிகள் தங்கள் முக அடையாளங்களை மின்னணு முறையில் பதிவு செய்துள்ளதாகத் தெரிவித்தார். இது, நாடு முழுவதும் இந்தத் திட்டத்தின் வெற்றிக்கு ஒரு சான்றாக அமைகிறது. ஆதார் அட்டையின் அடிப்படையில் பயனாளிகளின் விவரங்கள் சரிபார்க்கப்பட்டு, அவர்களின் முகப் பதிவு அங்கீகாரம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
தமிழ்நாடு ரேஷன் கடைகளில் வந்திருக்கும் மாற்றங்கள்
மத்திய அரசின் இந்த முயற்சிக்கு இணையாக, தமிழக அரசும் பொது விநியோகத் திட்டத்தை நவீனமயமாக்குவதில் முன்னோடி மாநிலமாகத் திகழ்கிறது. தமிழ்நாடு அரசின் உணவுப்பொருள் வழங்கல் துறை பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளது.
நகல் குடும்ப அட்டை: அசல் குடும்ப அட்டை தொலைந்துவிட்டால், நகல் அட்டைக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்கும் வசதி உள்ளது. விண்ணப்பித்தவர்களுக்கு, நகல் அட்டை அவர்களின் வீட்டிற்கே அஞ்சல் வழியாக அனுப்பி வைக்கப்படுகிறது.
பிரதிநிதிகள் நியமனம்: முதியோர், மாற்றுத்திறனாளிகள் போன்றவர்கள் ரேஷன் கடைகளுக்கு நேரடியாகச் சென்று பொருட்களை வாங்க முடியாத பட்சத்தில், அவர்களுக்காக ஒரு பிரதிநிதியை நியமனம் செய்யும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதற்கான அங்கீகாரச் சான்று பெற்றவர்கள், அவர்களுக்குப் பதிலாகப் பொருட்களைப் பெற்றுக்கொள்ளலாம்.
எடைத் துல்லியத்தை உறுதி செய்தல்: பொருட்களை எடைபோடும் இயந்திரம், விற்பனை முனைய இயந்திரத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. இதனால், பயனாளிகளுக்கு வழங்கப்படும் பொருட்களின் அளவு மற்றும் எடை துல்லியமாக உறுதி செய்யப்படுகிறது. தமிழகம் முழுவதும் சுமார் 1980 நியாய விலைக் கடைகளில் இம்முறை செயல்பாட்டில் உள்ளது.
பயோமெட்ரிக் அங்கீகாரம்: கைவிரல் ரேகை சரிவரப் பதிய முடியாதவர்களுக்கு கண் கருவிழி சரிபார்ப்பு முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதன்மூலம் பயனாளிகள் எளிதாகப் பொருட்களைப் பெறலாம்.
க்யூ ஆர் கோடு: புதிய ரேஷன் அட்டைகளில் க்யூ ஆர் கோடு அச்சிடப்பட்டுள்ளது. இதன் மூலம், விற்பனை முனைய இயந்திரத்தில் ஸ்கேன் செய்து பொருட்களைப் பெறும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.
சிறு தானியங்கள் விநியோகம்: ஊட்டச்சத்து குறைபாட்டை நீக்க, நீலகிரி மற்றும் தருமபுரி போன்ற சில மாவட்டங்களில் அரிசிக்கு மாற்றாக 2 கிலோ கேழ்வரகு விநியோகம் செய்யப்படுகிறது.
விரைவான சேவை: புதிய ரேஷன் கார்டு விண்ணப்பித்தல், பெயர் சேர்த்தல் அல்லது நீக்குதல் போன்ற சேவைகளும் தற்போது விரைவாகச் செய்யப்படுகின்றன.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ