)
Income Tax Bill 2025: கடந்த பிப்ரவரி 13ஆம் தேதி மக்களவையில் அறிமுகப்படுத்தப்பட்ட புதிய வருமான வரி மசோதா 2025-ஐ மத்திய அதிகாரப்பூர்வமாக திரும்பப் பெற்றுள்ளது. தற்போதுள்ள வருமான வரிச் சட்டத்திற்கு (1961) பதிலாக இந்த மசோதா தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
இந்நிலையில், பாஜக எம்.பி., பைஜயந்த் பாண்டா தலைமையிலான தேர்வுக்குழு அளித்த பரிந்துரைகளின் அடிப்படையில் மசோதாவின் புதிய பதிப்பு உருவாக்கப்பட்டுள்ளது. அந்த வகையில், வருமான வரி மசோதாவின் புதிய பதிப்பை வரும் ஆகஸ்ட் 11ஆம் தேதி (திங்கள்) தாக்கல் செய்யப்பட உள்ளது.
மசோதாவின் பல விஷயங்களால் ஏற்படும் குழப்பத்தைத் தவிர்க்கவே பிப்ரவரி மாதத்தில் தாக்கல் செய்யப்பட்ட மசோதா திரும்பப் பெறப்பட்டுள்ளது. அனைத்து மாற்றங்களுடனும் தெளிவான மற்றும் புதுப்பிக்கப்பட்ட பதிப்பை வழங்கும் பொருட்டு, வருமான வரி மசோதாவின் புதிய பதிப்பு மக்களவையின் பரிசீலனைக்காக அறிமுகப்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்படுகிறது.
சட்டத்தை மறுஆய்வு செய்த நாடாளுமன்றத் தேர்வுக் குழுவின் தலைவரான பைஜயந்த் பாண்டா, "புதிய சட்டம் நிறைவேற்றப்பட்டதும், இந்தியாவின் பல ஆண்டுகால வரி கட்டமைப்பு எளிதாக்கப்படும். சட்டக் குழப்பங்களைக் குறைக்கும், மேலும் தனிநபர் வரி செலுத்துவோர் மற்றும் குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் மத்தியில் எழும் தேவையற்ற பிரச்னையை தவிர்க்கவும் உதவும்" என்றார்.
மேலும் அவர் தற்போதைய வருமான வரி சட்டத்தின் சிக்கல் குறித்தும், புதிய சட்டம் எதற்கு என்பது குறித்து அவர் பேசுகையில், "தற்போதைய 1961 வருமான வரிச் சட்டம் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட திருத்தங்களுக்கு உட்பட்டுள்ளது. மேலும், இது 5 லட்சத்திற்கும் மேற்பட்ட சொற்களைக் கொண்டுள்ளது. இது மிகவும் சிக்கலானதாகிவிட்டது. புதிய மசோதா அதை கிட்டத்தட்ட 50 சதவீதம் அளவிற்கு எளிதாக்கும். சாதாரண வரி செலுத்துவோர் கூட படித்து புரிந்துகொள்ளும் அளவிற்கு அது எளிதாக்கப்படும்" என விளக்கம் அளித்தார்.
வருமான வரிச் சட்டம் எளிதாக்கப்படுவதன் மூலம் சிறு வணிக உரிமையாளர்கள் மற்றும் MSME-க்கள் பெரியளவில் பயனடைவார்கள் என்றும் அவர் தெரிவித்தார். ஏனெனில் அவர்களுக்கு சிக்கலான வரி கட்டமைப்புகளை வழிநடத்த சட்ட மற்றும் நிதி நிபுணத்துவம் பெரும்பாலும் இல்லை எனலாம்.
அனைத்து வரி செலுத்துவோருக்கும் பயனளிக்கும் வகையில் அனைத்து பிரிவுகளிலும் அடுக்குகள் மற்றும் விகிதங்கள் மாற்றப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார். புதிய கட்டமைப்பு நடுத்தர வர்க்கத்தினரின் வரிகளை கணிசமாகக் குறைத்து, அவர்கள் அதிகளவில் சேமிப்புகளை மேற்கொள்ள வழிவகை செய்யும். வீட்டு நுகர்வு, சேமிப்பு மற்றும் முதலீட்டை அதிகரிக்கச் செய்யும் என்று அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதிய வருமான வரி மசோதா சாதாரண குடிமக்கள் மற்றும் சிறு வணிகங்களுக்கு வரி தாக்கல் செய்வதை எளிதாக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2025 நிதிச் சட்டம், வருமான வரிச் சட்டத்தின் (1961) பிரிவு 87-இன் கீழ் வரிச் சலுகை கோருவதற்கான வருமான வரம்பை உயர்த்தி உள்ளது. இதன் மூலம் வரி செலுத்த வேண்டிய தனிநபர்களுக்கான வருமான வரம்பு 7 லட்சம் ரூபாயில் இருந்து 12 லட்ச ரூபாய்க்கு அதிகரிக்கப்பட்டுள்ளது. இது புதிய வரிவிதிப்பு முறை (பிரிவு 115 BAC) கீழ் அதிகரிக்கபபட்டுள்ளது.
அதுமட்டுமின்றி, இந்தச் சலுகையின் கீழ் பெறக்கூடிய அதிகபட்ச தள்ளுபடி தொகையும் உயர்த்தப்பட்டுள்ளது. முன்னர் 25 ஆயிரம் ரூபாயாக இருந்தது, தற்போது 60 ஆயிரம் ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. புதிய வரி விதிப்பு முறையின் கீழ் ஏற்கனவே வழங்கப்பட்டு வந்த ஓரளவு நிவாரணம், 12 லட்ச ரூபாயை விட சற்று அதிகமாக வருமானம் ஈட்டுபவர்களுக்கும் தொடர்ந்து பொருந்தும் என்றும் நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ