)
DA Hike, 7th Pay Commission: அக்டோபர் 1ஆம் தேதி அன்று மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு அகவிலைப்படியை (DA) 3% உயர்த்தி மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. இதனால், மத்திய அரசு ஊழியர்களும், ஓய்வூதியதாரர்களும் பெருமகிழ்ச்சி அடைந்தனர்.
மத்திய அரசின் அறிவிப்பை தொடர்ந்து, பீகார், ராஜஸ்தான், அருணாச்சலப் பிரதேசம், உத்தரகாண்ட் உள்ளிட்ட மாநிலங்கள் அதன் அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு அகவிலைப்படி, அகவிலைப்படி நிவாரணம் ஆகியவற்றை உயர்த்தின. தொடர்ச்சியாக பல்வேறு மாநில அரசுகளும் அதன் ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு அகவிலைப்படி உயர்வை அறிவித்து வருகின்றன.
அந்த வகையில், நேற்று கர்நாடகா மற்றும் ஹிமாச்சல் பிரதேச அரசு அதன் ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு அகவிலைப்படி உயர்வை அறிவித்துள்ளன. கர்நாடகாவை பொருத்தவரை, மாநில அரசு அதன் ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கான அகவிலைப்படியை அவர்களின் அடிப்படை சம்பளத்தில் முந்தைய 12.25% மட்டத்துடன் ஒப்பிடும்போது தற்போது 14.25% ஆக உயர்த்தியுள்ளது.
மேலும், இது ஜூலை மாதத்தில் இருந்து கணக்கிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 2025-26 நிதியாண்டில் கர்நாடகாவில் அறிவிக்கப்படும் இரண்டாவது அகவிலைப்படி உயர்வு இதுவாகும். முன்னதாக கடந்த மே மாதத்தில், 10.75% ஆக இருந்த அகவிலைப்படி 12.25% ஆக உயர்த்தியது.
ஹிமாச்சல் பிரதேசத்தை பொருத்தவரை, அரசு ஊழியர்களுக்கும், ஓய்வூதியதாரர்களுக்கும் 3% அகவிலைப்படி (DA) தொகை, அவர்களின் அக்டோபர் மாத சம்பளம் மற்றும் ஓய்வூதியத்தில் வரவு வைக்கப்படும் என அம்மாநில முதலமைச்சர் சுக்விந்தர் சிங் சுகு நேற்று (அக். 15) அறிவித்தார். மேலும், இது நவம்பர் மாதத்தில் வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
அதேநேரத்தில், 2025ஆம் ஆண்டு ஏப்ரல் முதல் செப்டம்பர் மாதம் வரையிலான நிலுவைத் தொகையும் அக்டோபரில் ஊழியர்களின் வங்கிக் கணக்குகளில் டெபாசிட் செய்யப்படும் என்றார். மேலும் அதற்கு முந்தைய, அதாவது 2023ஆம் ஆண்டு ஜூலை முதல் 2025ஆம் ஆண்டு மார்ச் மாதம் வரையிலான நிலுவைத் தொகையை செலுத்துவதற்கு தனி உத்தரவுகள் வெளியிடப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
ஹிமாச்சல் பிரதேச மின்சார வாரிய ஊழியர்கள் சங்கத்தின் பொது மாநாட்டின் தொடக்க விழாவில் பேசிய முதலமைச்சர் சுக்விந்தர் சிங் சுகு, மின்வார வாரியத்தில் பெரும் சீர்திருத்தம் வேண்டும் என்றும், கடந்தகால ஆட்சிகளில் இருந்த நிர்வாக சீர்கேட்டால் வாரியம் மோசமான நிலையில் இருப்பதாக தெரிவித்தார். மேலும், அதிகளவில் அதிகாரிகள் நியமிக்கப்பட்டார்களே ஒழிய, தொழிலாளர்களின் அடிப்படை உரிமை கடந்தகால அதிகாரிகளால் மறுக்கப்பட்டது, இதுவே நிர்வாக சீர்கேட்டுக்கான காரணம் என்றும் அவர் தெரிவித்தார்.
தீபாவளிக்கு பின்னர் அகவிலைப்படி வழங்கப்படும் என அறிவித்தது ஊழியர்களுக்கு சற்றே அதிருப்தி என்றாலும் நிலுவைத் தொகையும் வழங்கப்படுகிறது என்பதால் நிம்மதி பெருமூச்சு விடுவதாக கூறப்படுகிறது. அதேநேரத்தில், பழைய ஓய்வூதிய திட்டம் குறித்தும் முதலமைச்சர் பேசினார்.
ஹிமாச்சல் பிரதேசத்தில் பழைய ஓய்வூதிய திட்டம் கொண்டுவரப்படும் என 2022 சட்டப்பேரவை தேர்தலின்போது காங்கிரஸ் கட்சி வாக்குறுதி அளித்திருந்தது. சில துறைகளில் மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டம் கொண்டுவரப்பட்டாலும், மின்சார வாரியம் உள்பட இன்னும் சில துறைகளுக்கு அது நீட்டிக்கப்படவில்லை. அதுகுறித்து அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்த்த ஊழியர்களுக்கு மேலும் ஏமாற்றமே கிடைத்தது. பழைய ஓய்வூதிய திட்டம் தற்போதைக்கு மின்சார வாரியத்திற்கு நீட்டிக்கப்படவில்லை என்றும் 5-6 மாதங்களில் அதுகுறித்து முடிவு எடுக்கப்படும் என்றும் முதலமைச்சர் தெரிவித்தார். மாநிலத்தின் நிதி நிலைமையை காரணம் காட்டி அவர் இதை கூறினார்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ