)
EPFO Wage Ceiling Hike: இபிஎஃப் உறுப்பினரா நீங்கள்? அப்படியென்றால் உங்களுக்கு இன்னும் சில நாட்களில் முக்கிய செய்தி ஒன்று கிடைக்கவுள்ளது. லட்சக்கணக்கான தனியார் துறை ஊழியர்களின் சமூகப் பாதுகாப்பு வலையை விரிவுபடுத்தும் ஒரு நடவடிக்கையாக, ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (EPFO), வருங்கால வைப்பு நிதி (PF) மற்றும் ஓய்வூதியத் திட்டம் (EPS) ஆகியவற்றின் கட்டாய காப்பீட்டுக்கான ஊதிய உச்சவரம்பை தற்போதுள்ள ரூ.15,000 இலிருந்து ரூ.25,000 ஆக உயர்த்த வாய்ப்புள்ளதாக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
தனியார் துறை ஊழியர்கள், தொழிலாளர் சங்கங்கள் ஆகியோரால் நீண்டகாலமாக கோரப்படும் இந்த திட்டத்திற்கான முன்மொழிவு, டிசம்பர் அல்லது ஜனவரியில் நடைபெற உள்ள அடுத்த மத்திய அறங்காவலர் குழு (CBT) கூட்டத்தில் தாக்கல் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, இது குறித்த இறுதி முடிவும் இந்த கூட்டத்திலேயே எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
தற்போது, அடிப்படை மாத சம்பளத்தில் ரூ.15,000 வரை சம்பாதிக்கும் ஊழியர்கள் மட்டுமே கட்டாயமாக EPF மற்றும் EPS இன் கீழ் உள்ளனர். இந்த வரம்பிற்கு மேல் சம்பாதிப்பவர்கள் இவற்றில் உறுப்பினராவதை தானாக முன்வந்து தேர்வு செய்யலாம். ஆனால், நிறுவனங்கள் அவர்களை பதிவு செய்யவேண்டும் என சட்டப்பூர்வமான கட்டுப்பாடில்லை.
இந்த திருத்தம் அங்கீகரிக்கப்பட்டால், பணவீக்கம் மற்றும் அதிகரித்து வரும் வாழ்க்கைச் செலவுகளுக்கு மத்தியில், குறிப்பாக, ரூ.15,000 -க்கு மேல் சம்பளம் உள்ள, குறைந்த மற்றும் நடுத்தர திறன் கொண்ட நகர்ப்புறத் துறைகளில் உள்ள சுமார் 1 கோடி கூடுதல் தொழிலாளர்களுக்கு சமூகப் பாதுகாப்பு வழங்கப்படும்.
EPF கட்டமைப்பின் கீழ்:
- ஊழியர்கள் ஒவ்வொரு மாதமும் தங்கள் அடிப்படை சம்பளத்தில் 12% பங்களிக்கின்றனர்.
- நிறுவனங்களும் 12% பங்களிக்கின்றனர். நிறுவனங்களின் பங்களிப்பு பின்வருமாறு பிரிக்கப்படுகிறது:
EPF-க்கு: 3.67%
EPS-க்கு: 8.33%
இந்த ஒருங்கிணைந்த பங்களிப்பு ஊழியர்களுக்கு நீண்டகால சேமிப்பு நிதியை உறுதி செய்வதோடு, அவர்களின் ஓய்வுக்குப் பிந்தைய வருமானத்தையும் பாதுகாக்கிறது.
தொழிலாளர் நிபுணர்களும் தொழிற்சங்கங்களும் அரசாங்கத்தை ஊதிய உச்சவரம்பை புதுப்பிக்க வலியுறுத்தி வருகின்றனர். கடைசியாக 2014 இல் இந்த உச்சவரம்பு ரூ.6,500 இலிருந்து ரூ.15,000 ஆக உயர்த்தப்பட்டது. கடந்த பத்தாண்டுகளில், இந்தியாவின் நகர்ப்புற ஊதியங்கள் மற்றும் வாழ்க்கைச் செலவுகள் அதிகரித்துள்ளன. இதனால் ரூ.15,000 க்கு சற்று அதிகமாக சம்பாதிக்கும் பல தொழிலாளர்கள் EPFO இன் ஓய்வூதியம் மற்றும் காப்பீட்டுத் திட்டத்தின் பலன்களைப் பெற முடியாமல் தவிக்கின்றனர்.
ரூ.25,000 உச்சவரம்பு இன்றைய பொருளாதார யதார்த்தத்தை பிரதிபலிக்கிறது. இந்தியாவின் பணியாளர்களில் ஒரு பரந்த பகுதியினர் முறையான சமூகப் பாதுகாப்பு வலையின் கீழ் பாதுகாக்கப்படுவதை இது உறுதி செய்யும்.
தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம் தற்போது இந்த திட்டத்தின் நிதி தாக்கத்தை மதிப்பாய்வு செய்து வருகிறது. EPFO-வின் மத்திய அறங்காவலர் குழு டிசம்பர் அல்லது ஜனவரியில் நடைபெறவுள்ளது. இதில் ஊதிய உச்சவரம்பை அதிகரிக்கும் முடிவு எடுக்கப்படும் என நம்பப்படுகின்றது. CBT அதை அங்கீகரித்தவுடன், இந்த மாற்றத்தை செயல்படுத்துவதற்கு முன் மத்திய அரசிடமிருந்து அறிவிப்பு தேவைப்படும்.
இது ஏற்றுக்கொள்ளப்பட்டால், இது ஒரு தசாப்தத்தில் மிகப்பெரிய சமூகப் பாதுகாப்பு விரிவாக்கங்களில் ஒன்றாக இருக்கும். இது இந்தியாவின் வளர்ந்து வரும் பணியாளர்களில் லட்சக்கணக்கானவர்களுக்கு நிதிப் பாதுகாப்பை உறுதி செய்யும்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ