Free LPG Connection : நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நடைபெற்று வரும் நிலையில், பிரதமரின் உஜ்வாலா திட்டம் எனப்படும் இலவச சமையல் எரிவாயு இணைப்பு திட்டம் முதல் பிரதமரின் கிசான் சம்பதா யோஜனா திட்டம் வரை 6 முக்கிய திட்டங்களின் லேட்டஸ்ட் அப்டேட் வெளியாகியுள்ளது. மேலும், பான் மசாலா பொட்டலங்களில் கட்டாயம் விற்பனை விலையை இடம்பெறச் செய்ய வேண்டும் என்ற உத்தரவும் போடப்பட்டுள்ளது. இது குறித்து இங்கே விரிவாக பார்க்கலாம்...
இலவச சமையல் எரிவாயு இணைப்பு திட்டம்
நாடு முழுவதும் ஏழைக் குடும்பங்களைச் சேர்ந்த பெண்களுக்கு வைப்புத்தொகை இல்லாத சமையல் எரிவாயு (எல்பிஜி) இணைப்பை வழங்குவதற்காக பிரதமரின் உஜ்வாலா திட்டம் எனப்படும் இலவச சமையல் எரிவாயு இணைப்பு திட்டம், மே 2016-ல் தொடங்கப்பட்டது. 01.11.2025 நிலவரப்படி, நாடு முழுவதும் இத்திட்டத்தில் சுமார் 10.33 கோடி இணைப்புகள் உள்ளன. நிலுவையில் உள்ள விண்ணப்பங்களை முடித்து, நாட்டில் எல்பிஜி சேவையை விரிவுபடுத்தும் வகையில், 2025-26-ம் நிதியாண்டில் உஜ்வாலா திட்டத்தின் கீழ் 25 லட்சம் கூடுதல் எல்பிஜி இணைப்புகளை வழங்க அரசு அண்மையில் ஒப்புதல் அளித்துள்ளதாகவும், இதற்கான தகுதி அளவுகோல்கள் எளிமைப்படுத்தப்பட்டுள்ளன என்று மத்திய பெட்ரோலியத் துறை இணையமைச்சர் சுரேஷ் கோபி மக்களவையில் எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் தெரிவித்துள்ளார்.
பிரதமரின் கிசான் சம்பதா யோஜனா
பிரதமரின் கிசான் சம்பதா யோஜனா எனப்படும் பிரதமரின் விவசாயிகள் மேம்பாட்டுத் திட்டம் (PMKSY - பிஎம்கேஎஸ்ஒய்) மத்திய அரசு செயல்படுத்தும் தேவை அடிப்படையிலான திட்டமாகும். நாடு முழுவதிலுமிருந்து விவசாயிகள் உற்பத்தியாளர் அமைப்புகள் உட்பட தகுதியுள்ள விண்ணப்பதாரர்களிடமிருந்து இத்திட்டத்திற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. உழவர் உற்பத்தியாளர் அமைப்புகளுக்கு இத்திட்டத்தில் வழங்கப்படும் நிதி உதவியில் சிறப்பு சலுகைகள் வழங்கப்படுகின்றன. திட்டச் செலவில் 50% மானியமாக வழங்கப்படுகிறது. உணவுப் பாதுகாப்பு, தர உறுதி திட்டத்தில், 70% உதவி வழங்கப்படுகிறது என உணவு பதப்படுத்தும் தொழில்கள் துறை இணையமைச்சர் ரவ்னீத் சிங் மக்களவையில் எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் தெரிவித்தார்.
பிரதமரின் விஸ்வகர்மா திட்டம்
18 வகையான பாரம்பரிய கலைஞர்கள் மற்றும் கைவினைஞர்களுக்கு உதவிடும் வகையில், பிரதமரின் விஸ்வகர்மா திட்டம் 17.09.2023 அன்று தொடங்கப்பட்டது. 01.12.2025 நிலவரப்படி 30 லட்சம் பயனாளிகள் இதில் பதிவு செய்து அவர்களில் 23.09 லட்சம் பயனாளிகள் பயனடைந்துள்ளனர். பிரதமரின் விஸ்வகர்மா திட்டத்தின் கீழ், இந்தியா போஸ்ட் பேமெண்ட் வங்கி, பேடிஎம், பேநியர்பை, பாரத்பே, போன்பே ஆகிய நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது.
இத்திட்டத்தின் பயனாளிகள் மின்னணு பரிவர்த்தனை முறையில் ஊக்கத்தொகைகளை பெறுவதற்காக க்யூஆர் கோடை உருவாக்க இந்த ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. இதுவரை 6.8 லட்சத்துக்கும் மேற்பட்ட கலைஞர்கள் மற்றும் கைவினைஞர்களுக்கு 22 கோடி ரூபாய் அளவிற்கு மின்னணு பணப்பரிவர்த்தனை ஊக்கத்தொகைகள் அளிக்கப்பட்டுள்ளது. ஓஎன்டிசி, ஃபேப் இந்தியா, மீஷோ போன்ற மின்னணு வர்த்தக தளங்கள் மூலம் பிரதமரின் விஸ்கர்மா பயனாளிகளுக்கு ஆன்லைன் சந்தை வாய்ப்பு ஆதரவும் அளிக்கப்படுகிறது என மக்களவையில் இன்று குறு, சிறு மற்றும் நடுத்த தொழில்துறை இணையமைச்சர் செல்வி ஷோபா கரந்த்லஜே எழுத்துப் பூர்வமாக அளித்த பதிலில் தெரிவித்தார்.
பான் மசாலா பொட்டலங்களில் விற்பனை விலை
அனைத்து பான் மசாலா பொட்டலங்களிலும் சில்லறை விற்பனை விலையை கட்டாயம் இடம்பெறச் செய்ய வேண்டும் என்று நுகர்வோர் விவகாரத் துறை உத்தரவிட்டுள்ளது. இதற்கான சட்ட விதிகள் திருத்தம் செய்யப்பட்டுள்ளது. இந்தத் திருத்தப்பட்ட விதிகள் 2026 பிப்ரவரி 1 முதல் நடைமுறைக்கு வருகின்றன. 10 கிராம் அல்லது அதற்குக் குறைவான சிறிய பொட்டலங்களுக்கு முன்பு விலைக் குறிப்பிடுவதிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டது. ஆனால், புதிய விதியின்படி அனைத்துச் சிறிய பான் மசாலா பொட்டலங்கள் உட்பட அனைத்துக் கட்டாய அறிவிப்புகளையும் அச்சிட வேண்டும்.
இந்த நடவடிக்கை மூலம், அனைத்துப் அளவுள்ள பொட்டலங்களிலும் வெளிப்படையான விலைத் தகவலை உறுதி செய்வதன் மூலம் நுகர்வோர் பாதுகாப்பு வலுப்படுத்தப்படுகிறது. மேலும், பான் மசாலாவுக்கு சில்லறை விற்பனை விலையை அடிப்படையாகக் கொண்ட ஜிஎஸ்டி வரியைச் சீராக அமல்படுத்தி, வரி வருவாயை முறையாக வசூலிக்கவும் இந்த உத்தரவு உதவும் என்று மத்திய அரசு கூறியுள்ளது.
சஞ்சார் சாத்தி செயலி நீக்கம்
அனைத்துக் குடிமக்களுக்கும் இணையப் பாதுகாப்பை வழங்கும் நோக்கில், ஸ்மார்ட்போன்களில் சஞ்சார் சாத்தி செயலியை முன்கூட்டியே நிறுவுவது கட்டாயம் என்று மத்திய அரசு உத்தரவிட்டிருந்தது. இருப்பினும், தற்போது இந்த உத்தரவு நீக்கப்பட்டுள்ளது. இந்தச் செயலி பாதுகாப்பானது; இணைய மோசடிகளில் இருந்து குடிமக்களைப் பாதுகாப்பதற்கும், மோசடிச் செயல்களைப் பற்றிப் பொதுமக்களே தகவல் அளித்து மக்கள் பங்கேற்பை உறுதி செய்வதற்கும் மட்டுமே பயன்படும். பயனர்கள் விரும்பும்போது இந்தச் செயலியை நீக்கிக்கொள்ளலாம் என்றும் அரசு தெளிவுபடுத்தியுள்ளது.
சஞ்சார் சாத்தி செயலியின் நோக்கம் மற்றும் பாதுகாப்பு குறித்து மக்கள் நம்பிக்கை வைத்துள்ளதன் காரணமாக, அதன் பயன்பாடு அண்மையில் பல மடங்கு அதிகரித்துள்ளது. இதுவரை 1.4 கோடி பயனர்கள் இந்தச் செயலியைப் பதிவிறக்கம் செய்துள்ளனர். ஒரு நாளைக்குச் சராசரியாக 2,000 மோசடிச் சம்பவங்கள் குறித்து இதன் மூலம் தகவல் கிடைக்கிறது. மக்கள் மத்தியில் இதற்கு வரவேற்பு அதிகரித்து வருவதால், மொபைல் உற்பத்தியாளர்கள் இனி இந்தச் செயலியை முன்கூட்டியே நிறுவுவது கட்டாயமில்லை என்று அரசு முடிவு செய்துள்ளது.
இ-கிராம ஸ்வராஜ் செயலி
கிராம பஞ்சாயத்துகளால் மேற்கொள்ளப்படும் செயல்பாடுகளைத் திட்டமிடுதல், பட்ஜெட் மதிப்பீடு, கணக்கியல், பணி மேலாண்மை மற்றும் கண்காணித்தல் ஆகியவற்றுக்கான ஒருங்கிணைந்த டிஜிட்டல் தளத்தை வழங்குவதன் மூலம் பஞ்சாயத்து ராஜ் நிறுவனங்களின் செயல்பாட்டில் வெளிப்படைத்தன்மை, பொறுப்புக்கூறல் மற்றும் செயல்திறனைக் கொண்டுவருவதே இ-கிராம ஸ்வராஜ் செயலியின் நோக்கமாகும்.
பஞ்சாயத்துகளால் செயல்படுத்தப்படும் பணிகளைக் கண்காணிப்பதில் இந்த செயலி பயனுள்ளதாக இருக்கும். பணிகளை அடையாளம் காணுதல், புவி-குறியிடுதல், முன்னேற்ற அறிக்கையிடல், நிதி கண்காணிப்பு மற்றும் செயல்பாட்டு வாரியான அறிக்கைகளை உருவாக்குதல் போன்ற அம்சங்கள் மூலம் பஞ்சாயத்து பணிகளின் நிகழ்நேரக் கண்காணிப்பிற்கு செயலி வழிவகை செய்கிறது. இந்தத் தகவலை மத்திய பஞ்சாயத்து ராஜ் அமைச்சர் ராஜீவ் ரஞ்சன் சிங் என்கிற லாலன் சிங், மக்களவையில் எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் தெரிவித்தார்.
மேலும் படிக்க | பிஎம் கிசான் திட்டம் - தமிழ்நாட்டு விவசாயிகளுக்கு குட் நியூஸ் சொன்ன மத்திய அரசு
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ









