)
GST Reforms Latest News: ஜிஎஸ்டி கவுன்சிலின் 56வது கூட்டம் செப்டம்பர் 3 மற்றும் 4 ஆகிய தேதிகளில் டெல்லியில் நடைபெற உள்ளது. இந்தக் கூட்டத்தில், ஜிஎஸ்டியின் கட்டமைப்பை எளிமைப்படுத்துவது குறித்து அரசாங்கம் பரிசீலிக்கும். ஜிஎஸ்டியின் அடுக்குகளைக் குறைக்க அரசாங்கம் விரும்புகிறது. இதன் மூலம் மக்கள் பல பொருட்களை முன்பை விட மலிவான விலையில் வாங்க வழிவகை செய்யப்படும்.
தற்போது பல வகையான ஜிஎஸ்டி அடுக்குகள் உள்ளன. அவற்றை இரண்டு அடுக்குகளாக மட்டுமே பிரிக்க வேண்டும் என்று அரசாங்கம் முன்மொழிந்துள்ளது. முதல் அடுக்கு 5% ஆகவும், இரண்டாவது 18% ஆகவும் இருக்கும். இது தவிர, ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும் பொருட்களுக்கு (மது, சிகரெட் போன்றவை) 40% சிறப்பு வரி விதிக்கப்படும். இவை 'சின் பொருட்கள்' அதாவது ‘பாவப் பொருட்கள்’ என்று அழைக்கப்படுகின்றன. ஜிஎஸ்டி கவுன்சில் ஜிஎஸ்டியிலிருந்து ஆயுள் காப்பீட்டை விலக்குவது குறித்தும் பரிசீலிக்கும் என அரசாங்க குறிப்பாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விலக்கு தனிநபர்களுக்கானதாக இருக்கும்.
- ஜிஎஸ்டி-யில் பல பெரிய மாற்றங்களைச் செய்ய அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.
- இது 'அடுத்த தலைமுறை ஜிஎஸ்டி சீர்திருத்தங்கள்' என்று அழைக்கப்படுகிறது.
- இதன் கீழ், 12% மற்றும் 28% அடுக்குகள் ரத்து செய்யப்படும்.
- மேலும், இழப்பீட்டு செஸ் வரியும் நிறுத்தப்படும்.
- இழப்பீட்டு செஸ் என்பது ஜிஎஸ்டியை அமல்படுத்துவதால் ஏற்படும் இழப்பை ஈடுசெய்ய மாநிலங்களுக்கு வழங்கப்படும் ஒரு வகை வரியாகும்.
சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) குறைப்பு செய்தியால் வாடிக்கையாளர்களும் நிறுவனங்களும் மகிழ்ச்சியில் உள்ளனர். எனினும், இது வணிகர்களுக்கு ஒரு விசித்திரமான சிக்கலை உருவாக்கியுள்ளது. ஆஃப்லைன் (கடைகள்) மற்றும் ஆன்லைன் விற்பனையாளர்கள் இருவரும் இந்தப் பிரச்சினையை எதிர்கொள்கின்றனர்.
வழக்கமாக ஒவ்வொரு ஆண்டும் பண்டிகை காலம் தொடங்கும் வேளையில் அதிகரிக்கும் விற்பனை இந்த முறை மெதுவாக இருப்பதாக நிறுவனங்கள் கூறுகின்றன. தமிழ்நாட்டில் ஆடி மாதம், மகாராஷ்டிராவில் கணேஷ் உற்சவம், கேரளாவில் ஓணத்துடனும் பொதுவாக இந்தியாவில் பண்டிகை காலம் தொடங்குகிறது.
ஆனால் இந்த முறை ஜிஎஸ்டி விகிதங்கள் குறைக்கப்படும் என்று வாடிக்கையாளர்கள் காத்திருக்கிறார்கள். ஜிஎஸ்டி குறைப்பால் பொருட்கள் மலிவாகும் என அவர்கள் நம்புகிறார்கள். ஆகையால், வழக்கமாக இந்த நேரத்தில் செய்யப்படும் ஷாப்பின்ங்கின் அளவு கணிசமாக குறைந்துள்ளது.
கார் மற்றும் பிற பொருட்களை உற்பத்தி செய்யும் நிறுவனங்கள் மற்றும் விற்பனையாளர்கள், 'பண்டிகை கால தொடக்கத்தில் பொதுவாக மிகச் சிறந்த விற்பனை இருக்கும். இப்போது அது இல்லாததால் எங்களுக்கு சிறிது பதற்றம் உள்ளது. இந்த விற்பனை நவராத்திரி மற்றும் தீபாவளி வரை நீடிக்கும். ஆனால் ஜிஎஸ்டி விகிதங்கள் குறைப்பு பற்றிய செய்திகளால், வாடிக்கையாளர்கள் பொருட்களை வாங்குவதிலிருந்து விலகி இருக்கிறார்கள். ஜிஎஸ்டி குறைக்கப்பட்டு விலைகள் குறையும் என்று அவர்கள் காத்திருக்கிறார்கள்.' என்று கூறியுள்ளனர்.
ஃப்ரிட்ஜ், டிவி மற்றும் ஏர் கண்டிஷனர் (ஏசி) போன்ற பொருட்களை விற்கும் கடைக்காரர்களின் நிலைமையும் இதுதான். விலை எப்போது குறையும் என்று வாடிக்கையாளர்கள் தொடர்ந்து விற்பனையாளர்களிடமே கேட்டு வருவதாக கூறப்படுகிறது. விலைகள் குறைந்த பின்னரே பொருட்களை வாங்க பல வாடிக்கையாளர்கள் உறுதியாக உள்ளனர். ஜிஎஸ்டியில் சாத்தியமான குறைப்பு காரணமாக, எல்ஜி, சாம்சங் மற்றும் சோனி போன்ற பிராண்டுகளின் டிவிகளின் விற்பனையும் குறைந்து வருகிறது.
- ஜிஎஸ்டி விகிதங்களை சரிசெய்வது தொடர்பாக அரசாங்கம் செயல்பட்டு வருகிறது.
- சில பொருட்களுக்கான வரி குறைக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
- சிறிய கார்கள் மற்றும் இரு சக்கர வாகனங்கள் (மோட்டார் சைக்கிள்கள்) மீதான ஜிஎஸ்டி வரி 28% -இலிருந்து 18% ஆக குறையலாம்.
- ஏசி, 32 இன்ச் மற்றும் அதைவிட பெரிய டிவிக்கள் மற்றும் டிஷ் வாஷர் இயந்திரங்கள் மீதான ஜிஎஸ்டியும் குறைக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
நிறுவனங்கள் இப்போது சிக்கலில் உள்ளன. ஜிஎஸ்டி கவுன்சில் விகிதங்களைக் குறைப்பதற்கு ஒப்புதல் அளித்து புதிய வரி விகிதங்களை அறிவிக்கும்போதுதான் விலைகள் குறையும். ஆனால் அது வரை வாடிக்கையாளர்கள் காத்திருக்க முடிவு செய்துள்ளனர். பலர் கார் முன்பதிவுகளை கூட ரத்து செய்துவிட்டதாக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இது தொடர்பாக வர்த்தக அமைச்சர் பியூஷ் கோயல் மற்றும் கனரக தொழில்துறை அமைச்சர் எச்.டி. குமாரசாமி ஆகியோரிடம் பேசியதாக ஆட்டோமொடிவ் டீலர்ஸ் அசோசியேஷன் (எஃப்ஏடிஏ) தலைமை நிர்வாக அதிகாரி சஹர்ஷ் தமானி தெரிவித்தார். கேரளா மற்றும் மகாராஷ்டிராவில் விற்பனை குறைந்து வருவதாக அவர் கூறினார். பண்டிகைகளின் போது விற்பனை அதிகரிக்கும் என்று எதிர்பார்த்ததால் டீலர்கள் அதிக பொருட்களை வாங்கி வைத்துள்ளனர்.
இந்த பொருட்கள் 60 நாட்களில் விற்கப்படாவிட்டால், வங்கிகளுக்கு அதிக வட்டி செலுத்த வேண்டியிருக்கும், மேலும் அபராதமும் விதிக்கப்படும். வங்கிகள், கார் மற்றும் இரு சக்கர வாகன நிறுவனங்கள் மற்றும் அரசாங்கத்திடம் உதவி கோருவதாக தமானி கூறினார். அமைச்சர்கள் இந்த பிரச்சனைக்கு சாதகமான முறையில் உதவ உறுதியளித்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
வரும் வாரங்களில் ஜிஎஸ்டி விகிதம் குறைக்கப்படும் என்ற மிகப்பெரிய நல்ல செய்தி கிடைத்துள்ள இந்த நேரத்திலும், இப்படிப்பட்ட ஒரு வினோதமான சூழ்நிலையால் ரீடெயில் விற்பனையாளர்கள் தவித்து வருகின்றனர்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ