)
National Savings Certificate : நாட்டு மக்களிடையே முதலீடு மற்றும் சேமிப்புப் பழக்கத்தை ஊக்குவிக்கும் வகையில் ஒன்றிய அரசால் தொடங்கப்பட்ட திட்டம் தான், தேசிய சேமிப்புச் சான்றிதழ் (National Savings Certificate - NSC). நம்பகமான முதலீடு, உறுதியான வட்டி வருமானம் மற்றும் வரி விலக்கு உள்ளிட்ட அம்சங்களுடன், ஒன்றிய அரசின் உத்தரவாதத்துடன் கூடிய இத்திட்டத்தைப் பற்றிய கூடுதல் தகவல்களை இங்கே தெரிந்து கொள்ளுங்கள்
திட்டத்தில் இணைவது எப்படி?
இந்தியக் குடிமக்கள் எவராயினும் இத்திட்டத்தில் முதலீடு செய்யலாம். வயது வரம்பு கிடையாது. எந்தவொரு தபால் அலுவலகத்திலும் எளிதாகக் கணக்கு
திறக்க முடியும். இணைய தபால் வங்கி மூலமாகவும் பயன்பெறலாம். தனிநபராகவோ அல்லது இருவர், மூவர் இணைந்து கூட்டுக் கணக்கு தொடங்கி முதலீடு செய்து வரலாம். 10 வயதுக்கு மேற்பட்டவர்கள், தங்கள் கணக்கை தாங்களே நிர்வகிக்க முடியும். வெளிநாடு வாழ் இந்தியர்கள் (NRI) இத்திட்டத்தில் பயன் பெற முடியாது.
தேவையான ஆவணங்கள்:
• ஆதார் அட்டை நகல்
• பான் (PAN) அட்டை நகல்
• பாஸ்போர்ட் அளவு புகைப்படம்
இத்துடன் விண்ணப்பப் படிவத்தைப் பூர்த்தி செய்து, ரொக்கம், காசோலை, DD, இவற்றில் ஏதேனும் ஒன்றின் மூலமாக முதலீடு செய்யலாம். மேலும், நம்
முதலீட்டுக் கணக்கிற்கு ஒன்றுக்கும் மேற்பட்ட நியமனதாரர்களை (Nominees) பதிவு செய்து கொள்ளலாம்.
முதலீடும், வட்டி வருமானமும்
இத்திட்டத்தின் குறைந்தபட்ச முதலீடு ஆயிரம் ரூபாய் ஆகும். ரூ.100-இன் மடங்குகளில் எவ்வளவுவேண்டுமானாலும் முதலீடு செய்யலாம். அதிகபட்ச வரம்பு ஏதும் கிடையாது. இத்திட்டத்தின் கீழ் ஒரு தனிநபர் எத்தனை கணக்கு வேண்டுமானாலும் திறந்து கொள்ள முடியும்.
நம் முதலீட்டுக்கான முதிர்வுக் காலம் ஐந்து ஆண்டுகள். ஒருமுறை செய்யும் முதலீடானது, அடுத்த ஐந்தாண்டுகளுக்கு திரும்பப் பெற முடியாத வகையில், 'லாக் இன் பீரியட்' (Lock) செய்யப்பட்டு விடும். ஒன்றிய நிதி அமைச்சத்தின் நிபந்தனைகளின்படி, ஒரு நிதியாண்டிவ் ஒவ்வொரு மூன்று மாதத்திற்கு ஒருமுறையும் வட்டி விகிதம் மாற்றத்திற்கு உட்படும். இதன் தற்போதைய வட்டி விகிதம் ஆண்டுக்கு 7.7% ஆகும். நம் முதலீடு, கூட்டு வட்டி அடிப்படையில் கணக்கீடு செய்யப்படுவதால், ஒவ்வோர் ஆண்டும் வழங்கப்படும் வட்டியானது மறுமுதலீடு செய்யப்பட்டு, ஐந்தாண்டுகள் கழித்து அசலுடன் சேர்த்து வழங்கப்படும். முதலீட்டைத் தொடங்கிய போது, என்ன வட்டி விகிதம் நிர்ணயம் செய்யப்பட்டதோ, அதுவே முதிர்வுக் காலம் முழுக்க வரவு வைக்கப்படும்.
முதலீட்டாளருக்கு இறப்பு நேர்ந்தால் என்ன நடக்கும்?
* இந்தத் திட்டத்தில் பாதி வழியிலேயே தனிநபர் கணக்காளர் அல்லது கூட்டுக் கணக்காளர் என யாராக இருந்தாலும், மரணம் ஏற்பட்டால், அவர்களின் சட்டப்பூர்வ வாரிசுகள் அல்லது பதிவு செய்யப்பட்ட நியமனதாரர்கள் (Nominees) சம்பந்தப்பட்ட ஆவணங்களுடன் தொடர்புடைய தபால் அலுவலகத்தை அணுக வேண்டும்.
* கணக்கை மாற்ற அல்லது பணத்தை பெறத் தேவையான ஆவணங்களைச் சமர்ப்பிப்பது அவசியம்.
* ஒரு கணக்காளர் நியமித்த நியமனதாரர் மரணம் அடைந்தால், அத்தகைய தொகையைப் பெற கணக்காளரால் நியமிக்கப்பட்ட அடுத்த நபர் தொகையைப் பெறுவார். அப்படி எந்த நபரும் நியமிக்கப்படவில்லையென்றால், அத்தொகை கணக்காளரின் பாதுகாவலருக்கு வழங்கப்படும்.
* மரணம் அடைந்த கணக்காளர் ஒரு பங்கை மட்டும் குறிப்பிட்டிருந்தால், அந்தப் பங்கிற்கு உரிய தொகை மட்டுமே அந்த நபருக்கு வழங்கப்படும்.
* ஒருவேளை கணக்காளர் பங்கைத் தெளிவாகக் குறிப்பிடவில்லை என்றால், தொகை நியமனதாரர்கள் அனைவருக்கும் சமமாகப் பிரித்து அளிக்கப்படும்.
வரிச்சலுகை உண்டு
வருமான வரிச் சட்டம் 80சி பிரிவின்கீழ், ஒரு நிதியாண்டில் நிபந்தனைக்கு உட்பட்டு ரூ.1.5 லட்சம் வரையிலான முதலீட்டுக்கு வரிச் சலுகை பெற முடியும். வட்டி வருமானம் அடுத்தடுத்த ஆண்டுகளில் மறுமுதலீடு செய்யப்படுவதால், அந்தக் குறிப்பிட்ட ஆண்டில் அந்தத் தொகைக்கு வரிச் சலுகை பெற முடியும். வரிச் சலுகை கோரவில்லை எனில், வட்டி வருமானம் வரிக்கு உட்பட்டது.
அடமானம் வைக்க உரிமை உண்டு
நம் முதலீட்டு ஆவணத்தின் மீது, அதாவது தேசிய சேமிப்புச் சான்றிதழ் கணக்கை அடமானம் வைத்து கடன் பெற்றுக் கொள்ள முடியும். அதற்கு, சம்பந்தப்பட்ட தபால் அலுவலகத்தை அணுகி, தேவையான ஆவணங்களைச் சமர்ப்பித்து அனுமதி பெறுவது அவசியம். பின்னர், அனைத்து முக்கிய வங்கிகள் மற்றும் வங்கி அல்லாத நிதி நிறுவனங்கள் (NBFC) ஆகியவற்றிடம் தேசிய சேமிப்புச் சான்றிதழ் கணக்கைச் சமர்ப்பித்து, பாதுகாப்பான வகையில் கடன்களைப் பெற முடியும். கடனுக்கான வட்டி விகிதம் அந்தந்த வங்கியைப் பொறுத்து மாறுபடும்.
கணக்கை முன்கூட்டியே மூடலாமா?
இத்திட்டத்தைப் பொறுத்தவரை, முதிர்வுக் காலத்திற்கு முன்னர் நம் முதலீட்டுப் பணத்தைத் திரும்பப் பெற முடியாது. கெடுவாய்ப்பாக, தனிநபர் கணக்குதாரர் அல்லது கூட்டுக் கணக்கின் ஒரு முதலீட்டுதாரர் அல்லது அனைவரும் மரணிக்கும் பட்சத்தில் அல்லது நீதிமன்றம் உத்தரவிடும் போது, முன்கூட்டியே கணக்கை முடிக்க அனுமதிக்கப்படுகிறது. முதலீடு செய்யப்பட்ட தேதியிலிருந்து ஒரு ஆண்டு நிறைவடைவதற்கு முன்பாகவே கணக்கு மூடப்பட்டால், அசல் தொகை மட்டுமே வழங்கப்படும்.
திட்டத்தின் நன்மைகள் என்னென்ன?
நம் முதலீட்டுக்கு முதிர்வுக் காலம் நிர்னாயிக் கப்பட்டிருப்பதால், ஐந்தாண்டுகளுக்குப் பிறகான இலக்குகளை அடைய விரும்புவோருக்கு இத்திட்டம் உதவிகரமாக இருக்கும். வருமான வரிச் சலுகை மற்றும் அடமான வசதி அளிக்கப்படுவதால், இது வழக்கமான நிலையான வைப்பு நிதித் திட்டங்களை (FD) விட நிச்சயம் இலாபகரமான முதலீடாக இருக்கும். அரசின் உத்தரவாதத்துடன் கூடிய திட்டம் என்பதால், அபாயங்கள் என்பது மிகக் குறைவு. நம் முதலீட்டுக்கு வழங்கப்படும் வட்டி விகிதமானது, பணவீக்க விகிதத்தை விட சற்று அதிகமாக இருப்பதால், எதிர்காலத்திற்கும் பயனளிக்கும். அனைத்து தரப்பினரும் பயன்பெறும் வகையில் அமையப்பெற்ற, தேசிய சேமிப்புச் சான்றிதழ் திட்டத்தில் இணைய விரும்புவோர் அருகிலுள்ள தபால் அலுவலகத்தை அணுகவும்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ