)
How To Retrieve Lost Aadhaar ID: ஆதார் அட்டை முன்பை விட தற்போது அதிகம் விவாதிக்கப்பட்டு வருகிறது. பீகார் வாக்காளர் பட்டியலில் தேர்தல் ஆணையம் மேற்கொள்ளும் சிறப்பு தீவிர திருத்தம் காரணமாக ஆதார் அட்டை பேசுபொருளானது. அதாவது, இந்திய குடிமகன் என நிரூபிக்காவிட்டால், ஒருவரின் பெயர் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்படும் என்றும் உங்களை நாட்டின் குடிமகன் என நிரூபிக்க ஆதார் அட்டை உரிய ஆவணம் இல்லை என தேர்தல் ஆணையம் தெரிவித்ததும்தான் அதற்கு காரணம் எனலாம்.
இருப்பினும் ஆதார் அட்டையின் தேவை என்பது வேறு விதங்களில் முக்கியத்துவம் பெறுகிறது. ஆதார் அட்டை என்பது அடையாளச் சான்று மட்டுமே, நீங்கள் தேசத்தை சேர்ந்தவர்தான் என்பதை அது உறுதிப்படுத்தாது. அந்த வகையில், நீங்கள் சிம் வாங்குவது தொடங்கி அரசு சேவைகள், அரசு திட்டங்களை பெறுதலில் இருந்து, ஓய்வூதியம் வாங்குவது, வங்கிகளில் கணக்கு தொடங்குவது என அனைத்து இடங்களிலும் ஆதார் கட்டாயம் எனலாம். எனவே, குறைந்தபட்சம் ஆதார் அட்டையின் நகலையாவது நீங்கள் உங்களுடன் எப்போதும் வைத்திருக்க வேண்டும்
அந்த சூழலில் நீங்கள் ஆதார் அட்டையையும் தொலைத்துவிட்டீர்கள் எனில், அதில் உள்ள 12 இலக்க எண்ணும் உங்களுக்கு தெரியாது என்றால் நீங்கள் என்ன செய்ய வேண்டும் என்பதை நீங்கள் காணலாம். ஒருவேளை, உங்களுக்கு ஆதார் எண் தெரிந்திருந்தால் இணையத்தளத்தில் அந்த எண்ணை வைத்தே புதிதாக ஆதார் அட்டையை பெற்றுக்கொள்ளலாம். ஆனால், ஆதார் தொலைந்து அதன் எண்ணும் தெரியாவிட்டால் உங்களின் மொபைல் நம்பர் மூலம் அதை மீட்டெடுக்கலாம்.
இதற்கு முதலில் நீங்கள் ஆதாரின் அதிகாரப்பூர்வ தளத்திற்கு https://uidai.gov.in செல்லவும். அதில் உங்களுக்கு ஏற்ற மொழியை தேர்வு செய்துகொள்ளவும். ஆங்கிலத்தை தேர்வு செய்தீர்கள் என்றால் My Aadhaar பிரிவில், Aadhaar Service தலைப்பின் கீழ் இருக்கும் Retrieve Lost or Forgotten EID/UID என்ற ஆப்ஷனை கிளிக் செய்யவும். தமிழில் மொழியை தேர்வு செய்தீர்கள் என்றால் என் ஆதார் பிரிவில், ஆதார் சேவைகள் தலைப்பில் 'தவறவிட்ட ஆதார் அடையாள பதிவு எண் திரும்ப பெற' என்ற ஆப்ஷனை தேர்வு செய்யவும்.
அதில் Aadhaar Number ஆப்ஷனில், ஆதார் அட்டையில் உங்களது பெயர், உங்கள் மொபைல் நம்பர் அல்லது மின்னஞ்சல் முகவரி மற்றும் மற்ற விவரங்களை உள்ளீடு செய்து Send OTP என்ற பட்டனை அழுத்தவும். உடனே ஆதாருடன் இணைக்கப்பட்ட மொபைல் நம்பருக்கு OTP வரும். அதனை உள்ளீடு செய்து உங்களது ஆதார் அட்டையின் எண்ணை தெரிந்துகொள்ளலாம். அந்த நம்பரை வைத்தே, அதே இணையத்தளத்தின் வாயிலாக ஆதார் அட்டையையும் நீங்கள் பெற்றுக்கொள்ளலாம்.
இதனை நீங்கள் ஸ்மார்ட்போனிலும் செய்யலாம். அதற்கு முதலில் உங்களின் மொபைலில் mAadhaar செயலியை தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள். ஆண்ட்ராய்ட் மொபைல் என்றால் இந்த செயலி Google Play மற்றும் ஆப்பிள் சாதனை என்றால் App Store தளங்களிலும் கிடைக்கும். இந்த செயலில் மொபைல் எண் மூலம் லாக்-இன் செய்துகொண்டு Retrive UID or EID ஆப்ஷனை கிளிக் செய்து உங்களது பெயர், மொபைல் நம்பர், பிற விவரங்களை உள்ளீடு செய்து Send OTP பட்டனை அழுத்தினால் போதும். பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணுக்கு வரும் OPT-ஐ உள்ளீடு செய்து ஆதார் எண்ணை அறிந்துகொள்ளலாம்.
இந்த செயல்பாட்டில் முக்கியமான ஒன்று என்னவென்றால், நீங்கள் ஆதாருடன் உங்களின் மொபைல் எண்ணை இணைத்திருக்க வேண்டும் மற்றும் அந்த மொபைல் எண் உங்களிடம் பயன்பாட்டில் இருக்க வேண்டும். ஒருவேளை நீங்கள் உரிய மொபைல் எண்ணை ஆதாருடன் இணைக்கவில்லை என்றால் உங்களால் ஆன்லைனில் இதுபோன்று சேவைகளை பயன்படுத்த இயலாது.
எனவே உங்களுக்கு அருகே உள்ள இ-சேவை மையத்திற்கு சென்று உங்களின் பெயர், பிறந்த தேதி, முகவரி போன்ற விவரங்களை கொடுத்து, உங்களின் கைரேகை போன்றவை மூலம் அது நீங்கள் தானா என்பதை உறுதிசெய்வார்கள். அனைத்தும் சரியாக இருக்கும்பட்சத்தில் ஆதார் கார்டை அங்கேயே பெற்றுக்கொள்ளலாம். உங்களது மொபைல் எண்ணையும் அங்கு இணைத்துக்கொள்ளலாம். இதற்கு சேவைக் கட்டணம் வசூலிப்பார்கள்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ