)
Next Generation GST Reform, PM Modi Diwali Gift: 79வது சுதந்திர தினத்தை முன்னிட்டு இன்று காலை பிரதமர் நரேந்திர மோடி டெல்லி செங்கோட்டையில் தேசிய கொடியை ஏற்றிவைத்து நாட்டு மக்களுக்கு உரையாற்றினார்.
அதில் பல்வேறு அறிவிப்புகளை அளித்திருந்தாலும் நடுத்தர மக்களுக்கு தீபாவளி பரிசாக தற்போதுள்ள ஜிஎஸ்டி முறையில் சீர்த்திருத்தம் கொண்டுவரப்படும் என அறிவித்தார். இதன்மூலம், தீபாவளிக்கு பிறகு பல்வேறு பொருள்களின் விலை குறையலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதுகுறித்து பிரதமர் மோடி பேசுகையில், "இந்த தீபாவளிக்கு நான் ஒரு சிறந்த பரிசை வழங்க உள்ளேன். கடந்த எட்டு ஆண்டுகளாக பெரிய ஜிஎஸ்டி சீர்திருத்தத்தையும் எளிமைப்படுத்தப்பட்ட வரிகளையும் எங்கள் அரசு செயல்படுத்தியது இப்போது, அவற்றை மறுபரிசீலனை செய்ய வேண்டிய நேரம் வந்துவிட்டது. நாங்கள் அதை செய்துள்ளோம், மாநிலங்களுடன் கலந்து ஆலோசித்துள்ளோம், மேலும் 'அடுத்த தலைமுறை ஜிஎஸ்டி சீர்திருத்தம்' அறிமுகமாக உள்ளது.
இது (மக்களுக்கு) தீபாவளி பரிசாக இருக்கும், தனிநபர்களுக்கு அத்தியாவசிய சேவைகளுக்கான வரிகள் கணிசமாகக் குறையும். குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் இதனால் பயனடைவார்கள். அன்றாட வாழ்க்கைக்கு தேவையான பொருட்கள் மலிவாகும். இவை நாட்டின் பொருளாதாரத்திற்கும் ஊக்கத்தை அளிக்கும்" என்றார்.
வரும் அக்டோபர் 20ஆம் தேதி நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட இருக்கும் சூழலில், வரும் செப்டம்பர் மாதத்தில் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் இரண்டு நாள்களுக்கு நடைபெற இருப்பதாகவும், இந்த கூட்டத்தில் ஜிஎஸ்டியில் செய்யப்பட இருக்கும் சீர்திருத்தங்கள் தீர்மானிக்கப்படும் என்று அரசு தரப்பில் தகவல்கள் தெரிவிக்கின்றன. குறிப்பாக, ஜிஎஸ்டியில் தற்போது இருக்கும் வரி அடுக்குகளில் மாற்றம் செய்வது, அத்தியாவசிய பொருள்களுக்கான வரி விகிதத்தில் மாற்றம் செய்வது, சுகாதார காப்பீடு மற்றும் ஆயுள் காப்பீடு வரி விகிதங்களில் மாற்றம் செய்வது உள்ளிட்ட முக்கிய மாற்றங்கள் குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
0%, 5%, 12%, 18%, 28% என தற்போது ஜிஎஸ்டியில் மொத்தம் 5 அடுக்குள் இருக்கின்றன. இதில் பல சரக்கு மற்றும் சேவைகளுக்கு 12% மற்றும் 18 அடுக்குதான் நிலையான வரி விகிதமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 21 சதவீத சரக்குகள் 5% வரி அடுக்கில் வருகிறது. 19 சதவீத சரக்குகள் 12% வரி அடுக்கில் வருகிறது. மேலும் 44 சதவீத சரக்குகள் 18% வரி அடுக்கில் வருகிறது.
தற்போது வந்துள்ள புதிய தகவல்களின்படி மத்திய அரசு அதன் 5 அடுக்குகளில் 5% வரி அடுக்கு மற்றும் 18% வரி அடுக்கு ஆகிய இரண்டை மட்டும் தக்கவைத்துக்கொண்டு மற்ற அடுக்குகளை நீக்க உள்ளதாக கூறப்படுகிறது. இதன்மூலம், 28% வரி அடுக்கில் இருக்கும் 90 சதவீத பொருள்களும், 12% வரி அடுக்கில் இருக்கும் 99 சதவீத பொருள்கள் 18% வரி அடுக்குக்கு மாற்றப்பட இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
சொகுசு மற்றும் புகையிலை, குட்கா, சிகரெட் போன்ற மற்ற சரக்குகளுக்கு சிறப்பு வரி அடுக்கில் சேர்க்கப்படும். அவற்றுக்கு 40% வரி வசூலிக்கப்படும். இந்த 40% வரி அடுக்கில் வெறும் 5-7 பொருள்கள் மட்டுமே இடம்பெறும் என கூறப்படுகிறது. இதில் ஏசி, பிரிட்ஜ், வாஷிங் மெஷின் போன்றவை சேர்க்கப்படாது என கூறப்படுகிறது. பெட்ரோல், டீசல் போன்ற பெட்ரோலிய பொருள்கள் ஜிஎஸ்டியில் சேர்க்கப்படாது.
ஜிஎஸ்டியில் செய்யப்படும் இந்த சீர்த்திருத்தம் என்பது மக்களின் நுகர்வை அதிகப்படுத்தும் என்றும் அது பொருளாதாரத்தை வளர்ச்சிப் பாதைக்கு கொண்டுச்செல்லும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. ஆரம்பகட்டத்தில் இந்த வரி அடுக்கு நீக்கம் என்பது அரசின் வருமானத்தை குறைக்கும் என பொருளாதார வல்லுநர்கள் கூறுகின்றனர், இருப்பினும் இது விற்பனையை அதிகமாக்கும் என்றும் கூறுகின்றனர். மாநில அரசுகளும், தொழில் அமைப்புகளும் ஜிஎஸ்டி அடுக்கை எலிமைப்படுத்தவும், வரிச்சுமையை குறைக்கவும் நீண்ட காலமாக கோரிக்கை வைத்து வரும் நிலையில், இந்த சீர்த்திருத்தம் மேற்கொள்ளப்படுகிறது. இருப்பினும் இந்த சீர்த்திருத்தம் குறித்து செப்டம்பர் மாத ஜிஎஸ்டி குழு கூட்டத்தில்தான் இறுதியாகும், தீபாவளிக்கு முன் அது அமல்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ