)
PM Vishwakarma Yojana 2025: சொந்தமாக தொழில் செய்ய விரும்புவர்களுக்காக மத்திய அரசு அறிமுகப்படுத்தியிருக்கும் திட்டம் தான் PM விஸ்வகர்மா யோஜனா. இத்திட்டத்தின் கீழ் ஏற்கனவே பாரம்பரிய தொழில் செய்பவர்கள், சொந்தமாக தொழில் தொடங்க விரும்புபவர்கள் பயனடையலாம். கடந்த 2023 ஆம் ஆண்டு, விஸ்வகர்மா தினத்தன்று (செப்டம்பர் 17) பிரதமர் அவர்களால் பிரதமரின் விஸ்வகர்மா திட்டம் (PM Vishwakarma Scheme) தொடங்கி வைக்கப்பட்டது. அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு, அதாவது 2023 - 28 வரை ரூ. 13,000 கோடி நிதி ஒதுக்கீட்டில் இத்திட்டம் செயல்படுத்தப்பட உள்ளதால் பாரம்பரிய தொழில் செய்பவர்கள் இத்திட்டத்தை பயன்படுத்திக் கொள்ளலாம்.
இந்தத் திட்டத்தின் சிறப்பு என்ன?
PM விஸ்வகர்மா யோஜனா, கிராமப்புறம் மற்றும் நகர்ப்புறங்களில் உள்ள சிறு கைவினைஞர்களை ஒரே குடையின் கீழ் கொண்டு வந்து, நிதி உதவி, திறன் மேம்பாடு மற்றும் சந்தை இணைப்பு ஆகியவற்றை வழங்குகிறது. குறிப்பாக, பெண்கள், SC/ST, OBC, மாற்றுத்திறனாளிகள் மற்றும் பின்தங்கிய பகுதிகளில் வசிப்பவர்கள் போன்ற விளிம்புநிலை மக்களுக்கு இது ஒரு வரப்பிரசாதமாகும். இத்திட்டத்தின் பலன்களைப் பெற, ஒரு நபர் கையால் அல்லது கருவிகளைக் கொண்டு வேலை செய்பவராகவும், பாரம்பரியமாகப் பயிற்றுவிக்கப்பட்ட 18 குறிப்பிட்ட தொழில்களில் ஒன்றில் ஈடுபட்டிருக்க வேண்டும். மேலும், குடும்பத்தில் ஒரு உறுப்பினர் மட்டுமே பயன் பெற முடியும்.
விஸ்வகர்மாக்களுக்குக் கிடைக்கும் 5 முக்கியப் பலன்கள்
பாரம்பரியக் கைவினைக் கலைஞர்களை வெற்றிகரமான தொழில்முனைவோராக மாற்றுவதே இத்திட்டத்தின் முக்கிய இலக்காகும். இதற்காக, அரசு வழங்கும் முக்கியச் சலுகைகள்:
1. அதிகாரப்பூர்வ அங்கீகாரம் - கைவினைஞர்களுக்கு PM விஸ்வகர்மா சான்றிதழ் மற்றும் அடையாள அட்டை வழங்கப்படுகிறது. இது, அவர்களின் பாரம்பரியத் தொழிலுக்குச் சட்டப்பூர்வ அங்கீகாரத்தை அளிக்கிறது.
2. திறன் மேம்பாடு (Skill Training) - விஸ்வகர்மாக்களின் திறன்களை மெருகூட்டவும், புதிய கருவிகள் மற்றும் நவீன நுட்பங்களைப் பற்றி அறியவும் பயிற்சி அளிக்கப்படுகிறது. பயிற்சிக் காலத்தில், ஒவ்வொருவருக்கும் ஒரு நாளைக்கு ரூ. 500 உதவித்தொகை வழங்கப்படுகிறது.
3. நவீன கருவிகள் வாங்க நிதி (Tool Kit Incentive) - உற்பத்தித் திறனை அதிகரிக்க, புதிய மற்றும் தரமான கருவிகளை வாங்க, மின்-வவுச்சர் (e-Voucher) வடிவில் ₹15,000 ஊக்கத்தொகை வழங்கப்படுகிறது.
4. பிணையமில்லாக் கடன் ஆதரவு (Collateral-Free Loan)
வணிகத்தை விரிவாக்கத் தடையற்ற, பிணையமில்லாக் கடன்கள் எளிதாகக் கிடைக்கின்றன. முதல் தவணை ரூ. 1 லட்சம் பெறலாம். 18 மாதங்களில் திரும்பச் செலுத்த வேண்டும். இரண்டாம் தவணை ரூ. 2 லட்சம் பெற்று அதனை 30 மாதங்களில் திரும்பச் செலுத்தலாம். விஸ்வகர்மாக்களிடம் இருந்து வெறும் 5% சலுகை வட்டி விகிதமே வசூலிக்கப்படுகிறது. மீதமுள்ள வட்டியை (8% வரை) அரசே மானியமாகச் செலுத்துகிறது.
5. டிஜிட்டல் பரிவர்த்தனை
டிஜிட்டல் ஊக்கத்தொகை: டிஜிட்டல் பணப் பரிமாற்றத்தை (UPI/QR குறியீடு) ஊக்குவிக்க, ஒரு பரிவர்த்தனைக்கு ரூ. 1 வீதம், மாதந்தோறும் அதிகபட்சம் 100 பரிவர்த்தனைகளுக்கு ஊக்கத்தொகை வழங்கப்படுகிறது.
சந்தை இணைப்பு: GeM போன்ற இ-காமர்ஸ் தளங்களில் இணைப்பது, தரச் சான்றிதழ் பெறுவது, கண்காட்சிகள் மற்றும் வர்த்தக நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்கான சந்தைப்படுத்தல் ஆதரவு ஆகியவற்றை அரசு வழங்குகிறது. இது அவர்களின் தயாரிப்புகளுக்கு உலகளாவிய வாடிக்கையாளர் தளத்தைப் பெற்றுத் தருகிறது.
மாபெரும் வளர்ச்சி
கடந்த இரண்டு ஆண்டுகளில், இத்திட்டம் அதன் இலக்கை நோக்கி மின்னல் வேகத்தில் பயணித்துள்ளது. ஆகஸ்ட் 2025 நிலவரப்படி, சுமார் 30 லட்சம் கைவினைஞர்கள் பதிவு செய்துள்ளனர். 26 லட்சத்திற்கும் அதிகமானோர் திறன் சரிபார்ப்பை முடித்துள்ளனர். 23 லட்சத்திற்கும் மேற்பட்ட மின்-வவுச்சர்கள் கருவித்தொகுப்பு ஊக்கத்தொகையாக வழங்கப்பட்டுள்ளது. வணிக வளர்ச்சிக்காக, இதுவரை 4.7 லட்சத்திற்கும் அதிகமான கடன்கள் (மொத்த மதிப்பு ₹41,188 கோடி) அங்கீகரிக்கப்பட்டுள்ளன. பாரம்பரியக் கலை மற்றும் கைவினைத்திறனைப் பாதுகாப்பதுடன், அவற்றை நவீன தொழில்நுட்பங்கள் மற்றும் உலகச் சந்தையுடன் இணைக்கும் இந்தத் திட்டம், கிராமப்புறப் பொருளாதாரத்தை வலுப்படுத்தி, இந்தியக் கைவினைஞர்களின் 'திறனை வெற்றியாக மாற்றும்' ஒரு மகத்தான திட்டமாக உருவெடுத்துள்ளது என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ