)
போஸ்ட் ஆபீஸ் மூலம் கணவன் மனைவி இருவரும் சேர்ந்து முதலீடு செய்து, 10 ஆண்டுகளில் 41 லட்சம் ரூபாய் வரை சம்பாதிக்க முடியும். போஸ்ட் ஆபீஸ் தொடர் வைப்பு நிதி மூலம் இது சாத்தியம் ஆகும். ஏனென்றால், அரசு வழங்கும் வட்டி விகிதத்தில் சீரான வருமானம் பெற விரும்புவோருக்குப் போஸ்ட் ஆபீஸ் தொடர் வைப்பு நிதி மிகச்சிறந்த தேர்வாகும். குறிப்பாக, கணவன், மனைவி இருவரும் வேலைக்குச் செல்பவர்களாக இருந்தால், தலா ஒரு குறிப்பிட்ட தொகையை ஒதுக்கி எப்படிப் பெரிய தொகையைச் சேமிக்கலாம் என்பதைப் பார்ப்போம்.
குறைந்த முதலீடு... அதிக பாதுகாப்பு
தபால் நிலைய ஆர்டி திட்டத்தில் குறைந்தபட்சமாக மாதம் ரூ. 100 முதல் முதலீட்டைத் தொடங்கலாம். அதிகபட்ச முதலீட்டுக்கு வரம்பு ஏதும் கிடையாது. இது மத்திய அரசால் ஆதரிக்கப்படும் திட்டம் என்பதால், உங்கள் முதலீட்டிற்கு 100% பாதுகாப்பு உண்டு. தற்போதைய வட்டி விகிதம் ஆண்டுக்கு 6.7% வட்டி வழங்கப்படுகிறது. ஒவ்வொரு மூன்று மாதங்களுக்கும் ஒருமுறை மத்திய அரசு இந்த வட்டி விகிதத்தை மறுபரிசீலனை செய்கிறது.
தம்பதியருக்கான கூட்டு கணக்கு வசதி
இந்தத் திட்டத்தில் தனிநபராக மட்டுமின்றி, 'ஜாயிண்ட் அக்கவுண்ட்' மூலமாகவும் முதலீடு செய்யலாம். இதில் மூன்று நபர்கள் வரை இணைந்து ஒரு கணக்கைத் தொடங்க அனுமதி உண்டு. தம்பதியர் இருவரும் இணைந்து ஒரு கணக்கைத் தொடங்கி, தங்களின் மாதாந்திர ஊதியத்தில் இருந்து ஒரு பகுதியைச் சேமிப்பதன் மூலம் முதிர்வு காலத்தில் ஒரு பெரிய நிதியை உருவாக்க முடியும்.
முதிர்வு காலம் மற்றும் நீட்டிப்பு விதிகள்
தபால் நிலைய ஆர்.டி திட்டத்தின் அடிப்படை முதிர்வு காலம் 5 ஆண்டுகள் ஆகும். ஆனால், உங்களின் நீண்ட கால இலக்கிற்காக இதனை மேலும் 5 ஆண்டுகளுக்கு நீட்டித்துக் கொள்ளலாம். இதன் மூலம் கூட்டு வட்டியின் பலன் அதிகரித்து, உங்கள் பணம் வேகமாக வளரும்.
அவசரத் தேவைக்கு கடன் வசதி
சேமிப்புத் திட்டமாக இருந்தாலும், இடையில் பணத்தேவை ஏற்பட்டால் கவலைப்படத் தேவையில்லை. கணக்கு தொடங்கி ஓராண்டு அல்லது 12 மாதத் தவணைகள் செலுத்திய பிறகு, உங்கள் கணக்கில் உள்ள தொகையில் 50% வரை கடனாகப் பெற்றுக் கொள்ளலாம்.
கணவன், மனைவி இருவரும் முதலீடு செய்யும்போது கிடைக்கும் பலன்கள்:
| விவரங்கள் | தொகை |
| வட்டி விகிதம் ஆண்டுக்கு | 6.7% |
| கணவரன் மாதாந்திர முதலீடு | ரூ. 12,000 |
| மனைவியின் மாதாந்திர முதலீடு | ரூ. 12,000 |
| மொத்த மாதாந்திர முதலீடு | ரூ.24,000 |
| முதலீட்டு காலம் | 10 ஆண்டுகள் (5+5 ஆண்டுகள்) |
| மொத்த முதலீட்டு தொகை | ரூ.28,80,000 |
| கிடைக்கும் வட்டி லாபம் | ரூ. 12,20,509 |
| முதிர்வு காலத்தில் கிடைக்கும் மொத்த தொகை | ரூ. 41,00,509 |
மாதம் ரூ. 24,000 என்பது தம்பதியராகச் சேமிக்கும்போது ஒரு பெரிய சுமையாகத் தெரியாது. ஆனால், அந்தச் சிறு துளிப் பெருவெள்ளமாக மாறி, 10 ஆண்டுகளின் முடிவில் ரூ. 41 லட்சமாக உங்கள் கையில் இருக்கும்போது, அது உங்கள் குடும்பத்தின் கனவு இல்லம் அல்லது பிள்ளைகளின் எதிர்காலத் தேவைகளுக்குப் பெரும் உதவியாக இருக்கும். பாதுகாப்பான மற்றும் உறுதியான வருமானத்திற்குத் தபால் நிலைய ஆர்.டி திட்டத்தைத் தேர்ந்தெடுப்பதே புத்திசாலித்தனம்.