பிரதான் மந்திரி முத்ரா யோஜனா (PMMY) என்பது லட்சிய நோக்கத்துடன் இந்திய அரசாங்கத்தால் தொடங்கப்பட்ட ஒரு சிறப்பு திட்டம் ஆகும். இந்த திட்டமானது, சிறு குறு நிறுவனங்களுக்கு முறையான கடன் கிடைக்க உதவுகிறது. அதன் மூலம் தொழில் முனைவோர் அடுத்த கட்டத்திற்கு செல்ல முடியும். இந்த பிரதான் மந்திரி முத்ரா யோஜனா திட்டம், நிதி ஆதாரங்கள் மூலம் தனிநபர்களை மேம்படுத்தி, பொருளாதார வளர்ச்சியைத் தூண்டுவதையும், வேலை வாய்ப்புகளை உருவாக்குவதையும், மில்லியன் கணக்கான மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது. இந்த திட்டத்தின் கீழ், தகுதியுடைய தனிநபர்கள் ரூ.10 லட்சம் வரையிலான கடனைப் பெறலாம்.
இதன் மூலம் நிறுவனங்களுக்கு தேவையான உபகரணங்களை வாங்குதல், நிறுவனத்தை பெரிதாக்குதல் அல்லது விரிவுபடுத்துதல் போன்ற பல்வேறு தேவைகளுக்கு பயன்படுத்தி கொள்ளலாம். முத்ரா யோஜனாவின் குறிப்பிடத்தக்க அம்சம் என்னவென்றால், இந்த திட்டத்தில் கடன் பெற எந்த விதமான பிணையமும் தேவையில்லை. முதலீடு செய்ய பணம் இல்லாத, ஆனால் வலுவான வணிக யோசனைகள் மற்றும் உறுதியைக் கொண்டிருப்பவர்களுக்கு இது ஒரு கவர்ச்சிகரமான விருப்பமாக அமைகிறது. இந்த திட்டம், ஆர்வமுள்ள தொழில்முனைவோர் தங்கள் வணிகத்தைத் தொடங்க அல்லது வளரத் தேவையான மூலதனத்தை பெற வடிவமைக்கப்பட்டுள்ளது.
பாரத ஸ்டேட் வங்கி மற்றும் கனரா வங்கி போன்ற முக்கிய வங்கிகள் உட்பட 27 பொதுத்துறை வங்கிகள் மூலம் கடன்களை பெறலாம். முத்ரா கடன்கள் பரவலாக கிடைப்பதை உறுதி செய்வதில் இந்த வங்கிகள் முக்கியப் பங்காற்றுகின்றன, இவை உற்பத்தியில் இருந்து சேவைகள் வரை பல்வேறு தகுதி வாய்ந்த தொழில்களை உருவாக்க உதவுகின்றன. இந்த திட்டத்தில் பயன்பெற தகுதிக்கான அளவுகோல்கள் மற்றும் பிற விவரக்குறிப்புகள் பற்றிய விரிவான தகவல்கள் முத்ரா இணையதளத்தில் காணலாம்.
தகுதிகள் என்ன?
முத்ரா கடனுக்கு தகுதி பெற, விண்ணப்பதாரர்கள் சில குறிப்பிட்ட அளவுகோல்களை பூர்த்தி செய்ய வேண்டும். முக்கியமாக 18 முதல் 65 வயதுக்குட்பட்ட இந்தியக் குடிமக்களாக இருக்க வேண்டும் மற்றும் நிதி நம்பகத்தன்மையை நிரூபிக்க முந்தைய இரண்டு ஆண்டுகளுக்கு வருமான வரிக் கணக்கை வழங்க வேண்டும். மேலும் விண்ணப்பதாரர் புகைப்படம் உள்ள ஆதார் அட்டை அல்லது ஓட்டுநர் உரிமம், முகவரிச் சான்றுடன், மின்சாரம் அல்லது தொலைபேசி கட்டண பில்களை சமர்ப்பிக்க வேண்டும். கூடுதலாக, விண்ணப்பதாரர்கள் பூர்த்தி செய்யப்பட்ட கடன் விண்ணப்பப் படிவம் மற்றும் பிற தொடர்புடைய தொழில்முறை ஆவணங்களைச் சமர்ப்பிக்க வேண்டும்.
முத்ரா கடனில் மொத்தம் மூன்று வகைகள் உள்ளன. சிஷூ மூலம் ரூபாய் 50,000 வரை கடன் பெறலாம். கிஷோர் மூலம் ரூபாய் 50,000 முதல் 5 லட்சம் வரை கடன் பெறலாம். தருண் மூலம் ரூபாய் 5 லட்சம் முதல் 10 லட்சம் வரை கடன் பெறலாம். முத்ரா இணையதளத்தில் உங்கள் விண்ணப்பம் பதிவேற்றப்பட்டவுடன் உங்களுக்கு தனி எண் ஒதுக்கப்படும். அதன் மூலம் உங்களது விண்ணப்ப நிலையை தெரிந்து கொள்ளலாம். உங்கள் விண்ணப்பம் ஏற்றுக்கொள்ளப்பட்டால் வங்கி கணக்கில் நேரடியாக பணம் செலுத்தப்படும், நிராகரிக்கப்பட்டால் அல்லது வேறு ஏதேனும் சிக்கல்கள் இருந்தால் அதற்கான விரிவான காரணங்கள் உங்களுக்கு தெரிவிக்கப்படும்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ









