பணப்புழக்கத்தை நிர்வகிக்கவும், அவசரச் செலவினங்களின் போது அடுத்தவர்களிடம் கையேந்தாமல் இருக்கவும் நகைக்கடன் உதவுகிறது. தனியார் நிறுவனங்களில் நகைகளை அடகு வைத்தால், அதிக வட்டி செலுத்த வேண்டி வரும். இதனால் பலரும் வங்கிகளில் நகை கடன் பெறுகின்றனர். ஆண்டிற்கு ஒரு முறை வட்டி கட்டி திருப்பி கொள்ளலாம் என்ற விதிகள் உள்ளதால் பலரும் வங்கிகளில் நகை கடன் பெற விருப்புகின்றனர். இருப்பினும், இந்திய ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) விதித்துள்ள புதிய கட்டுப்பாடுகளால் வங்கியில் நகை கடன் வாங்குபவர்களில் பலர் இப்போது ஆபத்தான சூழ்நிலையில் உள்ளனர். நகை கடன் பெற்றவர்கள் மறு அடகு வைப்பதில் கடுமையான வழிகாட்டுதல்களை அமல்படுத்தும் ரிசர்வ் வங்கியின் புதிய முடிவு பொதுமக்களிடையே விமர்சனத்தையும் கவலையையும் எழுப்பியுள்ளது.
மேலும் படிக்க | EPFO Update: தனியார் துறை ஊழியர்களுக்கான குறைந்தபட்ச ஓய்வூதியம் அதிகரிக்குமா?
ரிசர்வ் வங்கியின் புதிய விதிமுறை
ரிசர்வ் வங்கியின் புதிய விதிமுறையின்படி, வங்கியில் அடகு வைத்துள்ள நகைகளை முழுவதும் பணம் செலுத்தி திருப்பி, மறுநாள் தான் மீண்டும் அடகு வைக்க முடியும் என்று தெரிவித்துள்ளது. வட்டி மட்டும் கட்டி அதே தினத்தில் மறு அடகு வைக்க முடியாது என்றும் தெரிவித்துள்ளது. இதனால் கடன் வாங்கியவர்கள் முழு பணத்தையும் புரட்ட வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. மேலும், நகைகளை திருப்பிய மறுநாள் தான் மீண்டும் நகைகளை அடகு வைத்து பணம் பெற முடியும். ரிசர்வ் வங்கியின் இந்த விதிகள் ஏழை எளிய மக்களுக்கு அதிக பாதிப்புகளை ஏற்படுத்தி உள்ளது. பலருக்கு, வட்டி செலுத்துவதன் மூலம் நகைகளை மீண்டும் அடகு வைக்கும் வாய்ப்பு அதிக பயனுள்ளதாக இருந்தது.
இது கந்துவட்டி வாங்காமல், தேவையான நிதியை உடனடியாக கிடைப்பதை உறுதி செய்தது. தங்கத்தின் விலை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், கூடுதல் நிதியைப் பெறுவதற்கு முன், முழு கடன் தொகையையும் திருப்பிச் செலுத்த வேண்டிய சுமை அதிகமாக இருக்கும். தங்க நகைக்கான வட்டியை மட்டும் செலுத்துவதன் மூலம் முன்பு ரூ. 3 லட்சம் கடன் வாங்கிய ஒருவர் அதற்கான வட்டியை மட்டும் கட்டி திருப்பி வைத்து கொள்ள முடியும். ஆனால் இனி அந்த ரூ. 3 லட்சம் பணத்தையும் மொத்தமாக கட்டி, திருப்பி மறுநாள் தான் மீண்டும் நகை கடன் வாங்க முடியும். இந்த மாற்றம் நிதி ஆதாரங்களை கடுமையாக பாதிப்பது மட்டும் இல்லாமல், முறைசாரா கடன் அல்லது தனியாரிடம் அதிக வட்டிக்கு கடன் வாங்கும் நிலையை உருவாக்கும்.
வங்கியில் நடக்கும் மோசடி
அக்டோபரில் வெளியிடப்பட்ட ரிசர்வ் வங்கியின் இந்த ஆலோசனையானது, நகைக் கடன் வழங்கும் துறையில் அதிகரித்து வரும் புகார்களுக்கு எதிராக கொண்டு வரபட்டுள்ளது. பல ஆண்டுகளாக நீடித்து வந்த நீண்ட கால கடன்களின் அறிக்கைகள் மற்றும் கடன் வழங்குபவர்களின் சந்தேகத்திற்குரிய மதிப்பீடுகள் ரிசர்வ் வங்கி இந்த முடிவை எடுக்க வழிவகுத்தது. மிகவும் வெளிப்படையான மற்றும் நியாயமான கடன் வழங்கும் சூழலை வளர்ப்பதே இந்த புதிய வழிகாட்டுதல்களுக்குப் பின்னால் உள்ள நோக்கம் என்று கூறப்படுகிறது. இருப்பினும், இந்த விதிமுறைகளை நிறைவேற்றுவது மருத்துவ அவசரநிலைகள், கல்விச் செலவுகள் போன்ற அவசர தேவைகளுக்கு விரைவான பண ஆதாரமாக, நகைக் கடன்களை பெரிதும் நம்பியிருக்கும் குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களுக்கு நிதிச் சிக்கல்களை அதிகரிக்கலாம்.
இந்த முடிவு சரியானதா?
முடிவில், கடன் வழங்கும் துறையில் சில முறைகேடுகளை நிவர்த்தி செய்ய ரிசர்வ் வங்கியின் முயற்சிகள் பாராட்டுக்குரியவை என்றாலும், புதிய வழிகாட்டுதல்களின் தாக்கங்கள் கவனமாக மறுமதிப்பீடு செய்ய வேண்டும். கடன் வழங்கும் நடைமுறைகளை ஒழுங்குபடுத்துவதற்கும், இந்த நிதிச் சேவைகளைச் சார்ந்திருக்கும் பாதிக்கப்படக்கூடிய மக்களுக்குப் போதுமான ஆதரவை வழங்குவதற்கும் இடையே சமநிலையை ஏற்படுத்துவது அவசியம். இந்த மாற்றங்களால் அதிகம் பாதிக்கப்படக்கூடும் ஏழை குடும்பங்களின் நிலையையும் ரிசர்வ் வங்கி கருத்தில் கொள்ள வேண்டும் என்று பல தரப்பில் இருந்து கோரிக்கைகள் எழுந்துள்ளது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ









