)
RBI new rules : இனிமேல், வங்கிக் கணக்கு வைத்திருப்பவர் இறந்துவிட்டால், அவரது குடும்பத்தினர் வங்கியிலிருந்து பணத்தைப் பெறுவது மிக மிகச் சுலபமாகிவிட்டது. ஏனென்றால், இந்திய ரிசர்வ் வங்கி (RBI) அதற்காகப் புதிய, எளிமையான விதிகளை அறிவித்துள்ளது. இந்த புதிய விதிகள் மார்ச் 31, 2026-க்குள் எல்லா வங்கிகளிலும், அதாவது வணிக வங்கிகள், கூட்டுறவு வங்கிகள் உட்பட எல்லாவற்றிலும் கட்டாயம் அமலுக்கு வந்துவிடும். பல ஆண்டுகளாக வங்கிகள் மக்களை அலைக்கழித்த நடைமுறைகளுக்கு இதன் மூலம் முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.
நாமினி இருந்தால் போதும், வேறு பத்திரம் தேவையில்லை
வங்கிகளில் பணம், லாக்கர் அல்லது வேறு பொருட்கள் வைத்திருப்பவர் இறந்தால், அவரது நாமினி (Nominee) அல்லது கூட்டுக் கணக்கு வைத்திருப்பவர் (Joint Account Holder) இனி கவலைப்பட வேண்டியதில்லை. நடைமுறைக்கு வரப்போகும் புதிய விதிகளை இங்கே தெரிந்து கொள்ளுங்கள்...
தேவையற்ற ஆவணங்கள் நீக்கம்: இதுவரை, நாமினி இருந்தாலும்கூட, வங்கிகள் சட்ட வாரிசுச் சான்றிதழ் அல்லது உயில் பத்திரம் போன்றவற்றை கேட்டு குடும்பத்தை அலைக்கழித்தன.
புதிய விதி: இப்போது, சரியான நாமினி இருந்தால், வங்கிகள் அந்தச் சட்ட ஆவணங்களைக் கேட்கக் கூடாது என்று RBI உறுதியாகக் கூறியுள்ளது.
நாமினி செய்ய வேண்டியது: ஒரு விண்ணப்பப் படிவம், இறப்புச் சான்றிதழ் மற்றும் அடையாள அட்டை (ID Proof) ஆகியவற்றைக் கொடுத்தாலே போதும்.
நாமினியின் கடமை: நாமினிக்குக் கிடைக்கும் அந்தப் பணம், உண்மையில் மற்ற எல்லாச் சட்ட வாரிசுகளுக்கும் சொந்தமானது. நாமினி அதை மற்றவர்களுக்காகப் பாதுகாக்கும் பொறுப்பாளராக மட்டுமே இருப்பார்.
நாமினி இல்லாத கணக்குகளுக்கு எளிய வழி
வங்கிக் கணக்கில் நாமினி இல்லை என்றால், கோரப்படும் பணத்தைப் பொறுத்துச் சில எளிய வழிகளை RBI கூறியுள்ளது:
சிறு தொகைக்கு எளிமை: வணிக வங்கிகளில் 15 லட்சம் ரூபாய் வரை மற்றும் கூட்டுறவு வங்கிகளில் 5 லட்சம் ரூபாய் வரை உள்ள தொகைக்கு, மிகவும் சுலபமான நடைமுறை போதும்.
பிணையாளர் (Surety) தொல்லை இல்லை: இந்தப் பணத்தைப் பெற உத்தரவாதம் கொடுக்கும் ஆள் (பிணையாளர்) ஒருவரைக் கொண்டு வரச் சொல்லி வங்கி இனிமேல் கட்டாயப்படுத்த முடியாது.
தேவைப்படும் ஆவணங்கள்: ஈட்டுறுதிப் பத்திரம் (Indemnity Bond), அதாவது இது நான் பணம் வாங்கிக் கொள்கிறேன், வேறு யாரும் உரிமை கேட்டால் நான் பொறுப்பு என்று எழுதிக்கொடுப்பது மற்றும் சட்ட வாரிசுச் சான்றிதழ் தேவைப்படலாம்.
பெரிய தொகைக்கு: அதிக தொகை என்றால், சட்ட ஆவணங்கள் வாரிசுச் சான்றிதழ் போன்றவை கேட்கப்படலாம். ஆனால், இங்கேயும் வங்கிகள் தெரிந்தவர்களின் உறுதிமொழிப் பத்திரத்தை (Affidavit) ஏற்றுக்கொள்ளலாம்.
பணத்தை வாங்கிக்கொள்ள காலக்கெடு
வாரிசுகளை அலைய விடாமல், வங்கிகள் குறித்த நேரத்திற்குள் பணத்தை வழங்க வேண்டும் என்று RBI கண்டிப்பான காலக்கெடுவை விதித்துள்ளது. இந்திய ரிசர்வ் வங்கி (RBI) வகுத்துள்ள புதிய விதிகளின்படி, வாரிசுகளின் உரிமைக் கோரல்களைத் தீர்ப்பதில் வங்கிகள் தாமதித்தால், கீழ்க்கண்டவாறு அபராதம் செலுத்த வேண்டும். உரிமைக் கோரலுக்குத் தேவையான அனைத்து ஆவணங்களும் சமர்ப்பிக்கப்பட்ட நாளிலிருந்து இந்தக் காலக்கெடு கணக்கிடப்படும்.
பணம், வைப்புநிதி (Fixed Deposit) உரிமை கோரல்
காலக்கெடு: உரிமைக் கோரலை 15 நாட்களுக்குள் முடித்து, பணத்தை வழங்க வேண்டும்.
தாமதமானால் அபராதம்: தாமதமாகும் ஒவ்வொரு நாளுக்கும், நிலுவையில் உள்ள தொகைக்கு, வங்கியின் வட்டி விகிதத்துடன் கூடுதலாக 4% வட்டி (அபராத வட்டி) சேர்த்து வாரிசுகளுக்கு வழங்க வேண்டும்.
லாக்கர் உரிமை கோரல் காலக்கெடு
காலக்கெடு: லாக்கர் அல்லது பாதுகாப்புக் காப்பகம் தொடர்பான கோரிக்கைகளை 15 நாட்களுக்குள் முடித்துக்கொடுக்க வேண்டும்.
தாமதமானால் அபராதம்: 15 நாட்களுக்கு மேல் தாமதமானால், தாமதமாகும் ஒவ்வொரு நாளுக்கும் வாரிசுகளுக்கு 5,000 ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும்.
லாக்கர் மற்றும் டெபாசிட் விதிகளில் முக்கிய மாற்றங்கள்
பணத்தை முன்கூட்டியே எடுத்தல்: காலக்கெடு முடிவதற்குள் பணம் எடுக்கும் டெபாசிட் (Fixed Deposit) வைத்திருப்பவர் இறந்தால், அந்தப் பணத்தை எந்த அபராதமும் இல்லாமல் (Penalty) முன்கூட்டியே எடுக்க வங்கி அனுமதிக்க வேண்டும்.
லாக்கரைத் திறப்பது: நாமினி அல்லது கூட்டுக் கணக்குதாரர், வேறு எந்தச் சட்ட ஆவணமும் இல்லாமல் லாக்கரை அணுகலாம். லாக்கர் திறக்கும்போது, உள்ளே இருக்கும் பொருட்களின் பட்டியலை சாட்சிகள் முன்னிலையில் தயாரித்து வழங்க வேண்டும்.
ஆன்லைன் வசதி: வாரிசுகள் ஆன்லைனிலேயே தங்கள் உரிமைக் கோரலைத் தாக்கல் செய்ய வசதி செய்யப்பட வேண்டும். அத்துடன், எந்தக் கிளையில் ஆவணம் கொடுத்தாலும், அதற்கான ஒப்புகைச்சீட்டு வழங்கப்பட வேண்டும், கோரிக்கை எந்த நிலையில் உள்ளது என்பதை ஆன்லைனில் கண்காணிக்கும் வசதியும் கட்டாயம் அறிமுகப்படுத்தப்படும்.
இந்த மாற்றங்கள் மூலம், கணக்கு வைத்திருப்பவர் இறந்த பிறகு குடும்பத்தினர் எதிர்கொள்ளும் நிதிச் சிக்கல்களும், மன உளைச்சலும் பெரிய அளவில் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ