)
Tamil Nadu government : உங்களுடன் ஸ்டாலின் முகாமில் பெண்கள் தொழில் தொடங்க 25 லட்சம் ரூபாய் கடன் பெற விண்ணப்பிக்கலாம் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. அதேபோல் தனிநபர் கடன் மற்றும் கறவை மாடு கடன் ஆகியவற்றுக்கும் விண்ணப்பிக்கலாம். குறிப்பாக திருப்பத்தூர் மாவட்டத்தினர் விண்ணப்பிக்கலாம் என அறிவிப்பு வெளியாகியுள்ளது. மற்ற மாவட்டத்தினர் அந்தந்த மாவட்டங்களில் நடக்கும் உங்களுடன் ஸ்டாலின் முகாமில் கலந்து கொண்டு இந்த கடனுக்கு விண்ணப்பிக்கலாம். யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம், அதற்கான தகுதிகள் என்ன? என்ற விவரத்தை இங்கே தெரிந்து கொள்ளுங்கள்.
டாப்செட்கோ லோன் விவரங்கள்
தமிழ்நாடு அரசு பெண்களின் முன்னேற்றத்துக்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருவதை நீங்கள் அறிந்திருப்பீர்கள். குறிப்பாக, விடியல் பயணம், கலைஞர் மகளிர் உரிமைத் தொகை, புதுமைப் பெண் திட்டங்களில் தமிழ்நாட்டில் அதிகமான பெண்கள் நேரடியாக பயன்பெற்று வருகின்றனர். இதுதவிர இன்னும் சில திட்டங்களும் இருக்கின்றன. அதில் ஒன்று தான், பெண்கள் தொழில் தொடங்குவதற்காக தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டு கழகம் மூலம் வழங்கப்படும் கடன் திட்டம் (TABCEDCO LOAN) ஆகும். இந்த திட்டம் குறித்து இங்கே விரிவாக தெரிந்து கொள்ளுங்கள். குறிப்பாக திருப்பத்தூர் பெண்கள் அவசியம் தெரிந்துகொள்ள வேண்டும்.
தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டு கழகம்
பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் வகுப்பினைச் சார்ந்த தனிநபர்கள் மற்றும் குழுக்கள் தங்களது பொருளாதார முன்னேற்றத்திற்காக சாத்தியக் கூறுள்ள சிறு தொழில்கள் மற்றும் வியாபாரம் செய்ய தனிநபர் கடன் மற்றும் குழுக்கடன் திட்டங்களுக்கு தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டுக் கழகம் மூலம் கடன் உதவி வழங்கி வருகிறது.
தமிழ்நாடு அரசின் டாப்செட்கோ லோன் பெற தகுதிகள் ;
1. விண்ணப்பதாரர் பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் இனத்தவராக இருத்தல் வேண்டும்.
2. குடும்ப ஆண்டு வருமானம் ரூ.3,00,000/க்கு மிகாமல் இருக்க வேண்டும்.
3. விண்ணப்பதாரர் 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 60 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.
4. ஒரு குடும்பத்தில் ஒரு நபருக்கு மட்டுமே கடனுதவி வழங்கப்படும்.
தனிநபர் கடன்
தனிநபர்கடன் திட்டத்தின் கீழ் சிறு வர்த்தகம் / வணிகம், விவசாயம் மற்றும் அதனை சார்ந்த தொழில்கள், கைவினைப் பொருட்கள் மற்றும் மரபு வழி சார்ந்த தொழில்கள் செய்வதற்கு அதிகபட்சமாக ரூ.25.00 இலட்சம் வரை கடனுதவி வழங்கப்படுகிறது. ஆண்டு வட்டி விகிதம் ரூ.1.25இலட்சம் வரை 7%. ரூ.1.25 லட்சம் முதல் ரூ. 15.00 லட்சம் வரை8%. கடனைத் திரும்பசெலுத்தும் காலம் 3 முதல் 5 ஆண்டுகள் வரை.
மகளிர் சுய உதவிக் குழு பெண்களுக்கு கடன்
குழுக் கடன் திட்டத்தின் கீழ் சுய உதவிக்குழு உறுப்பினர்கள் சிறு தொழில் / வணிகம் செய்வதற்கு ஒருவருக்கு அதிகபட்சமாக ரூ.1.25 இலட்சம் வரையும், குழு ஒன்றுக்கு அதிகபட்சமாக ரூ.25.00 இலட்சம் வரையும் ஆண்டிற்கு 7% வட்டிவிகிதத்தில் கடனுதவி வழங்கப்படுகிறது. கடனைத் திரும்ப செலுத்தும் காலம் 3 ஆண்டுகள். சுய உதவிக் குழு துவங்கி ஆறு மாதங்கள் பூர்த்தியாகியிருக்க வேண்டும். திட்ட அலுவலர் (மகளிர் திட்டம்) அவர்களால் தரம் (Grading) செய்யப்பட்டிருக்க வேண்டும். ஒரு குழுவில் அதிகபட்சம் 20 உறுப்பினர்கள் அனுமதிக்கப்படுவார்கள். இரு பாலருக்கான சுய உதவிக் குழு உறுப்பினர்களுக்கும் இக்கடனுதவி வழங்கப்படுகிறது.
கறவை மாடு வாங்க கடன்
பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கங்களில் உறுப்பினராக உள்ளவர்களுக்கு ஒரு கறவை மாட்டிற்கு ரூ.60,000/- வீதம் 2 கறவை மாடுகள் வாங்க அதிகபட்சம் ரூ.1,20,000/- வரை கடனுதவி வழங்கப்படுகிறது. ஆண்டு வட்டி விகிதம் 7%. திரும்ப செலுத்தும் காலம் 3 ஆண்டுகள்.
எப்படி விண்ணப்பிப்பது?
மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகம் மற்றும் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி கிளைகளிலும் கடன் விண்ணப்பம் பெற்றுக் கொள்ளலாம். மேலும், இக்கழக இணையதள முகவரியில் (www.tabcedco.tngov.in) பதிவிறக்கம் செய்துவிண்ணப்பிக்கலாம்.
டாப்செட்கோ கடன் பெற தேவையான ஆவணங்கள்
விண்ணப்பதாரர்கள் கடன் விண்ணப்பப் படிவங்களை பூர்த்தி செய்து சாதி, வருமானம் மற்றும் பிறப்பிடச் சான்றிதழ், குடும்ப அட்டை, ஓட்டுநர் உரிமம், ஆதார் அட்டை மற்றும் வங்கி கோரும் ஆவண நகல்களுடன் சம்மந்தப்பட்ட மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகம், கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் அலுவலகம் மற்றும் கூட்டுறவு வங்கிகளில் சமர்ப்பிக்க வேண்டும்.
எந்த மாவட்டத்தினர் விண்ணப்பிக்கலாம்?
எனவே, திருப்பத்தூர் மாவட்டத்தில் வசிக்கும் பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் வகுப்பினைச் சார்ந்த தனி நபர்கள் மற்றும் குழுக்கள் கடன் விண்ணப்பங்களைப் பெற்று உரிய ஆவணங்களுடன் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்திலும் மற்றும் திருப்பத்தூர் மாவட்டத்தில் நடைபெற இருக்கும் உங்களுடன் ஸ்டாலின் முகாம்களிலும் சமர்ப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். மற்ற மாவட்டத்தினர் அந்தந்த பகுதிகளில் நடக்கும் உங்களுடன் ஸ்டாலின் முகாம்களில் விண்ணப்பிக்கலாம்.
கடன் விண்ணப்பங்களுடன் இணைத்து சமர்ப்பிக்கப்ப வேண்டிய போதிய ஆவணங்கள்
1. சாதி சான்றிதழ்.
2. வருமான சான்றிதழ்.
3. பிறப்பிட சான்றிதழ்
4. உணவு பங்கீடு அட்டை அல்லது இருப்பிட சான்றிதழ்
5. ஆதார் அட்டை
6. திட்ட அறிக்கை.
7. வங்கிகள் கோரும் தேவையான ஆவணங்கள்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ