அமெரிக்கா - ஈரான் போர்: இந்திய ரூபாய் மதிப்பை பாதிக்குமா?
இந்தியா தனது எண்ணெய் தேவையில் 80%-க்கும் மேல் இறக்குமதி செய்கிறது. போர் காரணமாகக் கச்சா எண்ணெய் விலை உயரும்போது, இந்தியா அதிக டாலர்களைச் செலவிட வேண்டியிருக்கும். இது ரூபாயின் மதிப்பைக் குறைக்கும்.
இறக்குமதி செலவு அதிகரிப்பதாலும், ஏற்றுமதி பாதிக்கப்படுவதாலும் இந்தியாவின் வர்த்தகப் பற்றாக்குறை அதிகரிக்கும். இது அந்நியச் செலாவணி சந்தையில் ரூபாய்க்கு அழுத்தத்தைத் தரும்.
உலகளாவிய பதற்ற காலங்களில் முதலீட்டாளர்கள் பாதுகாப்பான முதலீடாகக் கருதி அமெரிக்க டாலரில் முதலீடு செய்வார்கள். டாலருக்கான தேவை அதிகரிக்கும்போது அதன் மதிப்பு உயர்ந்து, இந்திய ரூபாய் உள்ளிட்ட வளரும் நாடுகளின் கரன்சி மதிப்பு வீழ்ச்சியடையும்.
போர்ச் சூழலால் அந்நிய முதலீட்டாளர்கள் இந்தியப் பங்குச்சந்தையில் இருந்து தங்கள் முதலீடுகளைத் திரும்பப் பெற வாய்ப்புள்ளது. இதனால் டாலர்கள் வெளியேறி ரூபாயின் மதிப்பு சரியும்.
உலக எண்ணெய் போக்குவரத்தில் முக்கியப் பங்கு வகிக்கும் ஹார்முஸ் ஜலசந்தி பாதையில் பாதிப்பு ஏற்பட்டால், விநியோகச் சங்கிலி உடைந்து எண்ணெய் விலை கட்டுக்கடங்காமல் உயரும். இது இந்தியப் பொருளாதாரத்தைப் பலவீனப்படுத்தும்.
எரிபொருள் விலை உயர்ந்தால் போக்குவரத்துச் செலவு கூடும். இதனால் அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்ந்து பணவீக்கம் ஏற்படும். பணவீக்கம் அதிகரிக்கும்போது ரூபாயின் வாங்கும் திறன் குறையும்.
போர் காலங்களில் முதலீட்டாளர்கள் தங்கத்தை நோக்கி நகர்வார்கள். இந்தியா அதிகளவில் தங்கத்தை இறக்குமதி செய்வதால், இதற்காகக் கூடுதல் டாலர்களைச் செலவிட நேரிடும், இது ரூபாயைப் பாதிக்கும்.
ஈரானைச் சுற்றியுள்ள வளைகுடா நாடுகளில் லட்சக்கணக்கான இந்தியர்கள் பணிபுரிகின்றனர். போர் தீவிரமடைந்தால் அங்கிருந்து வரும் அந்நியச் செலாவணி குறைய வாய்ப்புள்ளது.
ரூபாயின் மதிப்பு மிக வேகமாகச் சரிந்தால், இந்திய ரிசர்வ் வங்கி (RBI) தனது கையிருப்பில் உள்ள டாலர்களை விற்று மதிப்பை நிலைநிறுத்த முயற்சிக்கும். இது தற்காலிகமான தீர்வாகவே இருக்கும்.
அமெரிக்க ஃபெடரல் வங்கி வட்டி விகிதங்களை உயர்த்தினால், முதலீடுகள் இந்தியாவை விட்டு வெளியேறும். இது ரூபாயின் மதிப்பை மேலும் 91-92 ரூபாய்க்குக் கீழ் தள்ளக்கூடும்.