)
History Of Diwali Bonus: பள்ளிகளுக்கு காலாண்டு விடுமுறை தொடங்கிவிட்டது; நவராத்திரி வழிபாடும் தொடங்கிவிட்டது; சரஸ்வதி பூஜை, ஆயுத பூஜை நெருங்கி வருகிறது என தொடர்ந்து விடுமுறை நாள்கள்தான். சிறு வயதில், பள்ளி, கல்லூரி பருவத்தில் இதுபோன்ற விடுமுறை தினங்கள் கொண்டாட்டத்தையும் மகிழ்ச்சியையும் அளிக்கும்.
ஆனால், நீங்கள் வளர்ந்து ஒரு நிறுவனத்தில் மாத சம்பளத்தில் பணியாற்றி வரும்பட்சத்தில் உங்களுக்கு மகிழ்ச்சியளிக்க கூடிய 2 விஷயங்கள் என்றால், ஒன்று ஊதிய உயர்வு; மற்றொன்று தீபாவளி போனஸ். ஆமாம் மக்களே, நமக்கும் நல்ல காலம் நெருங்கிவருகிறது. வரும் அக்டோபர் 20ஆம் தேதி நாடு முழுவதும் தீபாவளி கொண்டாடப்பட உள்ளது. இன்னும் 23 நாள்களே உள்ள நிலையில், பலரும் தீபாவளி போனஸை மனதில் வைத்து பல பிளான்களை போட்டியிருப்பீர்கள்.
எப்போதுதான் இந்த போனஸ் வருமா என நீங்களும் நினைத்துக்கொண்டிருப்பீர்கள், ஆனால் இந்த போனஸ் கொடுக்கும் பழக்கம் எப்போது, யாரால் இந்தியாவில் ஆரம்பிக்கப்பட்டிருக்கும் என நீங்கள் யோசித்தது உண்டா...? போனஸ் என்றால் ஏன் தீபாவளிக்கு மட்டும் கொடுக்கிறார்கள்? இந்த பழக்கம் எத்தனை ஆண்டுகளாக இருந்து வருகிறது? உள்ளிட்ட கேள்விகளுக்கான பதிலைதான் இங்கு பார்க்கப்போகிறோம்.
இந்தியாவில் தீபாவளிக்கே போனஸ் கொடுக்கப்படுகிறது. தீபாவளி பண்டிகையை முன்னிட்டு புதிய துணிகள், இனிப்புகள், பலகாரங்கள், பட்டாசு என கொண்டாட்டத்திற்கு தேவையான அத்தனை செலவுகளும் இருக்கும். அந்த வகையில், ஊழியர்கள் தீபாவளியை எவ்வித நிதி பிரச்னையும் இன்றி கொண்டாட வேண்டும் என்ற நோக்கத்துடன் அரசும், பல்வேறு தனியார் நிறுவனங்களும் போனஸை வழங்கி வருகிறது.
1965 ஆம் ஆண்டு போனஸ் செலுத்தும் சட்டத்தின் கீழ், உங்கள் வருமானத்தில் 8.33 சதவீதமோ அல்லது குறைந்தபட்சம் 100 ரூபாயோ போனஸாக வழங்கப்பட வேண்டும். இதற்கு உட்பட்டு பல தனியார் நிறுவனங்கள் போனஸை பல்வேறு வகையில் கொடுக்கும். அதாவது உங்கள் வருமானத்தில் ஒரு பகுதியையோ அல்லது ஒரு மாத சம்பளத்தையோ கூட போனஸாக வழங்கலாம். இருப்பினும், மத்திய அரசு ஊழியர்கள் உற்பத்தித்திறன் சாராத போனஸை பெறுகிறார்கள். இந்த போனஸ் 30 நாட்கள் சம்பளத்திற்கு சமம் எனலாம்.
இது ஒருபுறம் இருக்க, இந்தியாவில் தீபாவளி போனஸ் என்ற வழக்கம் ஆங்கிலேய ஆட்சிக்காலத்தின் இறுதிப்பகுதியில் வந்தது எனலாம். அதாவது முதல்முறையாக 1940ஆம் ஆண்டில் தீபாவளி போனஸ் இந்தியாவில் வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது. அப்போது, ஊழியர்களுக்கு வாரச் சம்பளம்தான். அதாவது, ஒரு வருடத்திற்கு மொத்தம் 52 முறை (52 வாரங்கள்) சம்பளம் கொடுக்கப்படும். ஆனால் இது ஒரு கட்டத்தில் 48 வாரங்களாக குறைக்கப்பட்டது. இதற்கு ஊழியர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. எனவே, இதுகுறித்து உடனடியாக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தொழிலாளர்கள் கோரிக்கை வைத்தனர்.
கடும் எதிர்ப்புகள் கிளம்பியதற்கு பின்னரே, தீபாவளி போனஸ் என்ற தீர்வை, 1940இல் அரசு அறிவித்தது. இது ஊழியர்களுக்கு நிதி சார்ந்த தேவையை பூர்த்தி செய்வது மட்டுமின்றி, பண்டிகை காலங்களில் ஊழியர்களுக்கு மன திருப்தி அளிக்கும் வகையிலும் அமைந்தது. தொடர்ந்து, நாடு சுதந்திரம் பெற்ற பின்னர், 1965ஆம் ஆண்டில்தான் தீபாவளி போனஸ் சட்ட ரீதியான உரிமையாக மாறியது. 1940இல் தொடங்கி இன்னும் பல நிறுவனங்களில் போனஸ் என்ற வழக்கம் இருந்து வருகிறது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ