)
Layoff Stories: உலகம் முழுவதும் தற்போது பிரபலமாக இருக்கும் வார்த்தைகளில் மிக முக்கியமான ஒன்று 'லே ஆஃப்'. உலகளவில் பெரிய நிறுவனங்கள் முதல் சிறிய நிறுவனங்கள் வரை ஊழியர்களை பணி நீக்கம் செய்து வருகின்றன. இதில் மிக அதிகமான பாதிப்பை சந்தித்து வருவது ஐடி துறை. இதற்கு AI எனப்படும் செயற்கை நுண்ணறிவு மிக முக்கியமான காரணமாக பார்க்கப்படுகின்றது.
வேலை இழந்தவர்கள் பலர் தங்களுக்கு கிடைத்த அதிர்ச்சி, அதிலிருந்து மீண்டுவந்த முறை, வேலை பறிக்கப்பட்டதால் எதிர்கொண்ட சோதனைகள் என பலவகையான அனுபவங்களை சமூக ஊடக தளங்களில் பகிர்ந்து வருகின்றனர். இவை பிற பயனர்களுக்கு விழிப்புணர்வையும், ஆறுதலையும், பல வித படிப்பினைகளையும் அளிக்கும் வண்ணம் உள்ளன. இவற்றில் பல பயனர்களின் பதிவுகள் வைரல் ஆகின்றன.
இணையவாசிகளின் கவனத்தை ஈர்த்த Reddit பதிவு
சமீபத்தில் பணி நீக்கம் பற்றி அப்படி பகிரப்பட ரெடிட் பதிவு ஒன்று தற்போது சமூக ஊடக பயனர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. இது மற்ற பதிவுகளை விட வித்தியாசமானது, அசாதாரணமானது. தொழில்நுட்பத் துறையில் பணிபுரியும் தங்கள் குடும்பத்தில் உள்ள அனைவரும் சில மாதங்களுக்குள் பணிநீக்கம் செய்யப்பட்டதாக ஒரு ரெடிட் பயனர் கூறியுள்ளார். மார்ச் மாதத்தில் முதலில் அந்த பயனர் வேலையை இழந்துள்ளார். அதைத் தொடர்ந்து அவரது பெற்றோரும் அடுத்தடுத்த மாதங்களில் பணிநீக்கம் செய்யப்பட்டதாக அவர் கூறியுள்ளார்.
பணி நீக்க புயலில் சிக்கிய குடும்பம்
“எனது முழு குடும்பமும் பணிநீக்கம் செய்யப்பட்டது. எனக்கு என்ன செய்வது என்று கூடத் தெரியவில்லை; நான் மார்ச் மாதத்தில் பணிநீக்கம் செய்யப்பட்டேன். மே மாதம் என் அப்பாவின் பணி பறிபோனது. என் அம்மா இன்று தனது வேலையை இழந்தார். நாங்கள் அனைவரும் தொழில்நுட்ப நிறுவனங்களில் வேலை செய்தோம். அதிக வருமானம் கொண்ட FAANG இல் நாங்கள் பணிபுரியவில்லை. நடுத்தர வர்க்க சம்பள நிறுவனங்களில்தான் நாங்கள் பணியாற்றினோம்,” என்று அந்த பயனர் தனது பதிவில் கூறியுள்ளார்.
FAANG என்றால் என்ன?
FAANG என்பது ஆதிக சம்பளம் அளிக்கும் அமெரிக்க தொழில்நுட்ப நிறுவனங்களை விவரிக்கப் பயன்படுத்தப்படும் ஒரு சுருக்கமாகும்: மெட்டா (Meta (முன்னர் பேஸ்புக்)), அமேசான் (Amazon), ஆப்பிள் (Apple), நெட்ஃபிக்ஸ் (Netflix)மற்றும் கூகிள்(Google) ஆகியவை இதில் உள்ளன.
முன்னர் தனியாக வசித்து வந்த பயனர், செலவுகளைக் குறைக்க சமீபத்தில் தனது பெற்றோரிடம் திரும்பிச் சென்றதாக கூறப்படுகின்றது. இப்போது அவர்களும் வேலைகளை இழந்துவிட்டதால், அடுத்து என்ன செய்வது என்ற குழப்பத்திலும், நிச்சயமற்ற மனநிலையிலும் உள்ளதாக பயனர் தெரிவித்துள்ளார்.
இந்தப் பதிவு Reddit இல் உள்ள r/layoffs கம்யூனிடியில் பகிரப்பட்டது. இதே போன்ற அனுபவங்களைக் கொண்ட பிற பயனர்களிடமிருந்து இந்த பதிவு அதிக கவனத்தைப் பெற்றுள்ளது. செயற்கை நுண்ணறிவு (AI) சார்ந்த மாற்றத்தால் தொழில்நுட்பத் துறையில் ஏற்பட்ட மந்தநிலைக்கு மத்தியில், லட்சக்கணக்கான தொழிலாளர்கள் பணிநீக்கங்களால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அனுபவத்தை பகிர்ந்த மற்றொரு பயனர்
இதேபோன்ற அனுபவத்தைப் பகிர்ந்து கொண்ட மற்றொரு பயனர், "நானும் என் கணவரும் எங்கள் ஐடி துறை வேலைகளை இழந்தோம். ஆனால் அவர் அதை பெரிதாக எடுத்துக்கொள்வதாகத் தெரியவில்லை" என்று கமெண்ட் செய்துள்ளார்.
குரல் பொறியாளராக இருந்து பணிநீக்கம் செய்யப்பட்ட ஒரு பயனர் தனது வேலை அவுட்சோர்ஸ் செய்யப்பட்டிருக்கலாம் என கூறியுள்ளார். "கடந்த ஆண்டு முதல் இந்த சந்தை நடத்தையை நான் கவனித்துக்கொண்டு இருக்கிறேன். ஆனால் இப்போது அதிகமான பணிநீக்கங்கள் உள்ளன." என்று அந்த பயனர் தெரிவித்துள்ளார்.
அவுட்சோர்சிங்கைத் தவிர்ப்பதற்கான ஒரே வழி தேசிய பாதுகாப்பு போன்ற துறைகளில் பணிபுரிவதுதான் என்று மற்றொரு பயனர் கருத்து தெரிவித்தார். "வெளிநாட்டில் அவுட்சோர்ஸ் செய்ய முடியாத ஒரு தொழில்நுட்ப வேலை தேவை... அரசாங்கம் மிக முக்கியமானதாகக் கருதும், நாட்டில் உள்ளவர்கள்தான் செய்ய வேண்டும் என கருதும் ஒரு வேலை தேவை. விண்வெளித் துறையில் நான் செய்யும் வேலை காப்பாற்றப்பட்டதற்கு இதுவே காரணம்" என்று அவர் கூறியுள்ளார்.
இந்தப் பதிவிற்கு பதிலளித்த மற்றவர்கள், வேலையின்மை சலுகைகளுக்கு விண்ணப்பிப்பது அல்லது தேவையற்ற செலவுகளைக் குறைப்பது போன்ற ஆலோசனைகளையும் பகிர்ந்து கொண்டனர். தொழில்நுட்ப வேலைகள் எதிர்காலத்தில் "மோசமான" காலங்களைக் காண வாய்ப்புள்ளது என்ற யதார்த்தத்தையும் பலர் ஏற்றுக்கொள்வதை இந்த பதிவுகளின் மூலம் புரிந்துகொள்ள முடிகிறது.
"2020 முதல் தொழில்நுட்பத் துறை சரிந்து வருகிறது. துரதிர்ஷ்டவசமாக, முடிவில்லாமல் வேலைகளுக்கு விண்ணப்பிப்பதும், நேரில் சென்று விண்ணப்பத்தை அளிப்பதும், தொழில் கண்காட்சிகளில் கலந்துகொள்வதும்தான் நாம் இப்போது செய்யக்கூடியவை. நாம் உண்மையில் மோசமான காலத்தை எதிர்கொண்டுள்ளோம்" என்று மற்றொருவர் கமெண்ட் செய்துள்ளார்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ