)
Chennai Egmore Multi Level Car-Bike Parking: தென்னிந்தியாவின் பரபரப்பான ரயில் நிலையங்களில் ஒன்றான சென்னை எழும்பூர் ரயில் நிலையம் ஒரு நாளைக்கு லட்சக்கணக்கான பயணிகளை கையாளுகின்றது. ரயில் நிலையங்களுக்கு வரும் பயணிகள் தங்களுடைய வாகனங்களை நிறுத்துவதற்கு ஏதுவாக பெரிய அளவிலான பார்க்கிங் வசதி செய்யப்பட வேண்டும் என ரயில் பயணிகளிடையே கோரிக்கை எழுந்தது.
ரயில் நிலையங்களுக்கு பயணிகள் அதிகம் வந்து செல்வதால் அவர்களின் வாகனங்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டு போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதாக பொதுமக்கள் புலம்பி வந்தனர். இந்த பிரச்சனையை முடிவுக்கு கொண்டு வரும் நோக்கில் தென்னக ரயில்வே சார்பில் புதிய மல்டி லெவல் பார்க்கிங் அமைக்கப்பட்டது.
எழும்பூர் காந்தி-இர்வின் சாலையில் அமைக்கப்பட்டுள்ள இந்த வாகன நிறுத்துமிடத்தில், இரு சக்கர வாகனம், நான்கு சக்கர வாகனம் நிறுத்த ஏதுவாக அமைக்கப்பட்டுள்ளது.
எழும்பூர் ரயில் நிலையத்தை 842 கோடி ரூபாய் மதிப்பீட்டில் உலகத்தரம் வாய்ந்த முனையமாக மாற்றும் மறுசீரமைப்பு பணிகளின் முக்கியப் பகுதியாக அதிநவீன பன்னடுக்கு வாகன நிறுத்துமிடத்தை தெற்கு ரயில்வே பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வந்துள்ளது. இந்த பன்னடுக்கு வாகன நிறுத்துமிடத்தால் வாகன போக்குவரத்து கணிசமாக குறைக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மல்டி லெவர் பார்க்கிங் வளாகத்தின் இரண்டாவது மற்றும் மூன்றாவது தளங்கள் சுமார் 3,442.13 சதுர மீட்டர் பரப்பளவைக் கொண்டுள்ளது. இந்த இரண்டு தளங்களிலும் சேர்த்து 122 நான்கு சக்கர வாகனங்கள் மற்றும் 68 இரு சக்கர வாகனங்கள் நிறுத்தும் வசதி கொண்டுள்ளது.
மேலும் 2842.13 சதுர மீட்டர் பரப்பளவில் அமைந்துள்ள நான்காவது தளம் 62 நான்கு சக்கர வாகனங்கள் மற்றும் 34 இரு சக்கர வாகனங்கள் நிறுத்தும் அளவிற்கு இடம் அமைந்துள்ளது. இந்த பார்கிங் வளாகத்தில் சுமார் 280-க்கும் மேற்பட்ட வாகனங்கள் நிறுத்தும் அளவிற்கு வடிவமைக்கப்பட்டுள்ளது.
ரயில் பயணிகளின் வாகனங்களை பாதுகாக்கும் நோக்கில் 24X7 சிசிடிவி கண்காணிப்பு வசதிகள் செய்யப்பட்டுள்ளன.
மேலும் 24 மணி நேர காவலர்களும், அந்த பார்க்கிங் லெவலுக்கு எளிதில் சென்றடையும் வகையில் ஏற்பாடும் செய்யப்பட்டுள்ளது. இதனை கையாள்வதற்கு தனியாக ஆட்களும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இந்த நவீன வாகன நிறுத்துமிடத்தில் 22 மின்சார வாகனம்(EV) சார்ஜிங் நிலையங்கள், தானியங்கி வாகன மேலாண்மை அமைப்புகள், பொது அறிவிப்பு வசதி மற்றும் மேம்பட்ட தீயணைப்பு பாதுகாப்பு வழிமுறைகள் போன்ற பல்வேறு சிறப்பம்சங்கள் இடம்பெற்றுள்ளன.
மேலும் பயணிகள் வசதிக்காக கட்டணக் கழிப்பிடங்கள், ஓட்டுநர்களுக்கான ஓய்வறைகள், ஸ்மார்ட் லாக்கர், சிற்றுண்டி நிலையங்கள் போன்ற பல்வேறு வசதிகள் இடம்பெற்றுள்ளன. இது மட்டுமல்லாமல், மாற்றுத்திறனாளிகள் எளிதாகப் பயன்படுத்தும் வகையில் 20 பயணிகள் பயணிக்கும் திறன் கொண்ட நவீன மின்தூக்கி வசதி, பிரத்யேக அவசரகால வெளியேற்றப் படிக்கட்டுகள், பாதுகாப்பு கைப்பிடிகள் போன்ற பல்வேறு வசதிகள் செய்யப்பட்டுள்ளது.
இதேபோல ஒரு அடுக்குமாடி வாகன நிறுத்துமிடம் பூந்தமல்லி நெடுஞ்சாலைப் பக்கத்திலும் மிக வேகமாகத் தயாராகி வருகிறது. இந்த வேலை முழுமையடையும் போது சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தின் வாகன நிறுத்துமிட திறன் பலமடங்கு அதிகரிக்கும் என சென்னை ரயில்வே கோட்டம் தெரிவித்துள்ளது.