கருவினை காத்தருளும் திருக்கருகாவூர் கர்ப்பரட்சாம்பிகை!

பூவுலகத்தில் முதல் ‘கருமாற்றம்’ செய்தவர் திருக்கருகாவூரில் வீற்றிருக்கும் கர்ப்பரட்சாம்பிகை என்னும் கருக்காத்த நாயகி அம்மன்.

Updated: Jan 12, 2020, 03:45 PM IST
கருவினை காத்தருளும் திருக்கருகாவூர் கர்ப்பரட்சாம்பிகை!

பூவுலகத்தில் முதல் ‘கருமாற்றம்’ செய்தவர் திருக்கருகாவூரில் வீற்றிருக்கும் கர்ப்பரட்சாம்பிகை என்னும் கருக்காத்த நாயகி அம்மன்.

முன்பொரு காலத்தில் சோழ நாட்டில் உள்ள வெட்டாற்றின் தென் கரையில் நிருத்துவர் என்ற முனிவர், தனது மனைவி வேதிகை என்பவருடன் இல்லறம் நடத்தி வந்தார். இந்த நிலையில் வேதிகை கருவுற்றாள். ஒரு நாள் மனைவியை ஆசிரமத்திலேயே விட்டு விட்டு, நிருத்துவ முனிவர் மட்டும் வெளியே சென்றிருந்தார். அந்த நேரம் பார்த்து ஊர்த்துவ பாதர் என்னும் முனிவர், அந்த ஆசிரமத்திற்கு வந்து உணவு கேட்டார்.

கருவுற்றிருந்த வேதிகை உடல் சோர்வு காரணமாக எழுந்து வருவதில் கொஞ்சம் தாமதம் ஏற்பட்டது. இதை அறியாத ஊர்த்துவ பாதர், வீட்டில் இருந்த பெண் தன்னை அலட்சியப்படுத்தியதாக எண்ணி, சாபமிட்டு விட்டுச் சென்று விட்டார். முனிவரின் சாபம் காரணமாக வேதிகையின் கரு கலைந்தது. இதனால் வேதிகை செய்வதறியாது திகைத்தாள். பின்னர் தான் நித்தம் வணங்கும் அம்பிகையிடம் தனது நிலை குறித்து வேண்டி முறையிட்டாள்.

அன்னையும் காக்கும் கடவுளாக எழுந்தருளி, வேதிகையின் உடலில் இருந்த அகன்ற கருவை, ஒரு குடத்துக்குள் வைத்து ஆவாகனம் செய்து, முழுக் குழந்தையாக உருவாகும் நாள்வரை காத்தாள். முழுக் குழந்தையாக ஜனித்ததும், அந்தக் குழந்தைக்கு ‘நைதுருவன்’ எனப் பெயரிட்டு, பெற்றோரிடம் சேர்த்தாள் அம்பிகை.

இந்த ஆலயத்தில் கிழக்கு பார்த்தபடி ராஜகோபுரமும், தெற்கில் நுழைவு வாசலும் உள்ளன. உள்ளே நுழைந்ததும் தென்புறமும், பின்புறமும் நந்தவனங்களும், வடக்கே வசந்த மண்டபமும் காணப்படுகின்றன. சுவாமி கோவிலுக்கு முன்புறம் கொடிமரம், பலிபீடம், நந்தி இருக்கின்றன.

ஏழையாக இருந்தாலும், பணக்காரராக இருந்தாலும் அந்தக் குடும்பத்துக்கு குழந்தைப் பேறுதான் முதன்மையானதாக கருதப்படுகிறது. இந்தத் திருக்கோவில் அமைந்திருக்கும் ஊரில் வசிக்கும் பெண்களுக்கு, கருச்சிதைவு ஏற்பட்டதில்லை என்று உறுதியுடன் சொல்கிறார்கள். குழந்தைப் பேறு வேண்டியும், சுகப்பிரசவம் நடைபெற வேண்டியும் தமிழகம் மட்டுமின்றி, பிற மாநிலங்களில் இருந்து பக்தர்கள் வந்து போகிறார்கள்.

குழந்தைப் பேறு இல்லாதவர்கள் இங்கு வந்து, அம்பிகையில் திருப்பாதத்தில் வைத்து மந்திரித்துக் கொடுக்கப்படும் நெய்யை, 48 நாட்கள் தொடர்ந்து இரவில் சாப்பிட்டு வந்தால் நல்ல பலன் உண்டு. அதே போல கருவுற்ற பெண்கள் சுகப் பிரசவம் அடைய, அம்பிகையின் அருள்பெற்ற விளக்கெண்ணெயை, அடிவயிற்றில் தடவிக்கொள்வது உரிய பலனைத் தரும் என்பது நம்பிக்கை.

உங்களுக்கு சுவாரஸ்யமான சிறப்பு செய்தி, முக்கிய செய்திகள், அரசியல் குறித்து விவரங்களை தெரிந்துக்கொள்ள நமது ZEE HINDUSTAN TV ஐ பாருங்கள். தற்போது ஹிந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் ஒளிப்பரப்பாகிறது.