)
Low Hemoglobin Level Future Impact : குறைந்த ஹீமோகுளோபின் அளவுகள், இரத்த சோகை எனப்படும் ஒரு நிலையாகும். இது, பல குறுகிய கால மற்றும் நீண்ட கால உடல்நலப் பிரச்சினைகளை ஏற்படுத்த வாய்ப்புள்ளது. ஹீமோகுளோபின் என்பது இரத்த சிவப்பணுக்களில் உள்ள ஒரு புரதமாகும், இது உங்கள் உடல் முழுவதும் ஆக்ஸிஜனைக் கொண்டு செல்ல உதவுகிறது. எனவே இதன் அளவுகள் குறைவாக இருக்கும்போது, உங்கள் உடலுக்கு போதுமான ஆக்ஸிஜன் கிடைக்காது.
குறுகிய கால சிக்கல்கள்:
உடல் பலவீனமாகவோ சோர்வாகவோ உணர்தல் – குறைந்த ஹீமோகுளோபின் இருந்தால், நீங்கள் வழக்கத்திற்கு மாறாக சோர்வாக உணரலாம் அல்லது அன்றாட வேலைகளைச் செய்வது கூட பல சமயங்களில் கடினமாக இருக்கலாம்.
மூச்சுத் திணறல் – தினசரி நீங்கள் செய்யும் லேசான செயல்பாடு கூட உங்களை மூச்சுத் திணறச் செய்யலாம்.
வெளிர் நிறம் அல்லது மஞ்சள் நிற தோல் – இரத்த ஓட்டம் குறைதல் மற்றும் சிவப்பு அணுக்களின் எண்ணிக்கை குறைதல் தோல் நிறத்தை பாதிக்கிறது. இதனால் உங்கள் தோல் வெளிர் அல்லது மஞ்சள் நிறத்தில் காட்சியளிக்கலாம்.
தலைவலி மற்றும் தலைச்சுற்றல் – ஹீமோகுளோபின் அளவு குறைவாக இருப்பதால் மூளைக்கு ஆக்ஸிஜன் குறைவாக செல்லலாம். இதனால் தலைவலி மற்றும் தலைசுற்றல் ஏற்படலாம்.
குளிர்ந்த கைகள் மற்றும் கால்கள் – ரத்த சுழற்சி என்பது, உடலில் குறைவாக இருந்தால் கை-கால்கள் குளிர்ச்சியாக உணர வைக்கும். இதனால், அவற்றை தொடும் போதே ஜில்லென்று இருக்கும்.
நெஞ்சுவலி அல்லது ஒழுங்கற்ற இதயத் துடிப்பு (படபடப்புடன் உணர்தல்) – குறிப்பாக இரத்த சோகை கடுமையாக இருந்தால், இது போன்ற பிரச்சனைகள் ஏற்படலாம்.
நீண்ட கால அபாயங்கள்:
இதய நோய் அபாயங்கள்:
ஆக்ஸிஜன் நிறைந்த இரத்தத்தை பம்ப் செய்ய இதயம் உழைக்கிறது, இது காலப்போக்கில் இதயம் பெரிதாகுதல் அல்லது இதய செயலிழப்புக்கு வழிவகுக்கலாம்.
கர்ப்பகால சிக்கல்கள்:
பெண்களுக்கு ஹீமோகுளோபின் அளவு குறைவாக இருந்தால் அது கர்ப்பகாலத்தின் போது குறைப்பிரசவம், குழந்தை எடை குறைந்து பிறத்தல் ஆகியவற்றுக்கு வழிவகுக்கும். பிரசவத்திற்குப் பிறகான மனச்சோர்வு ஆகியவற்றின் அபாயத்திற்கும் இது வழிவகுக்கலாம்.
நோய் எதிர்ப்பு சக்தி குறைவு:
குறைந்த ஹீமோகுளோபின், நோயெதிர்ப்பு மண்டலத்தை பலவீனப்படுத்தி, அடிக்கடி சளி, காய்ச்சல் போன்ற தொற்றுகளுக்கு நம்மை ஆளாக்க நேரிடும்.
குழந்தைகள் வளர்ச்சியில் தாமதம் ஏற்படுதல்:
குழந்தைகளுக்கு ஹீமோகுளோபின் அளவு குறைவாக இருந்தால், அது உடல் வளர்ச்சி, மூளை வளர்ச்சி மற்றும் கற்றல் திறனை பாதிக்கலாம்.
அறிவாற்றல் பிரச்சனை:
நீண்ட கால ஆக்ஸிஜன் பற்றாக்குறை நினைவாற்றல் பிரச்சனைகளை ஏற்படுத்தலாம். நினைவுத்திறன் பாதித்தல், கவனச்சிதறல் ஆகியவை இதனால் ஏற்படலாம்.
அறுவை சிகிச்சையின் போது ஏற்படும் சிக்கல்கள்:
ஆக்ஸிஜன் சப்ளை குறைவாக இருப்பதால் இரத்த சோகை நோயாளிகள் மருத்துவ நடைமுறைகளின் போது அதிக ஆபத்தை எதிர்கொள்கின்றனர். குறிப்பாக அறுவை சிகிச்சை செய்வதில் சிரமம் ஏற்படலாம்.
ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்க என்ன செய்ய வேண்டும்?
கீரை, பேரிச்சம்பழம், கருப்பு உலர் திராட்சை, வெல்லம், கடலை உள்ளிட்ட இரும்புச்சத்தை அதிகரிக்கும் உணவுகளை சாப்பிட வேண்டும். டீ-காஃபி குடிப்பதை நிறுத்திவிட்டு பழச்சாறுகளை குடிக்கலாம். ஆரஞ்சு, நெல்லிக்காய், கொய்யா ஆகிய பழங்களை எடுத்துக்கொள்ளலாம்.
(பொறுப்பு துறப்பு: இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)