Ahmedabad plane crash : இந்தியாவை நிலைகுலைய செய்திருக்கிறது அகமதாபாத் விமான விபத்து. ஆசை ஆசையாய் எத்தனை எத்தனை கனவுகளுடன், நேற்று மதியம் அகமதாபாத்தில் இருந்து லண்டன் புறப்பட்ட 241 விமான பயணிகளின் கனவும் வெறும் ஒரு நிமிடத்தில் காற்றில் கரையும் என அவர்கள் கனவிலும் நினைத்து பார்த்திருக்கமாட்டார்கள். அடுத்து என்ன நடக்கப்போகிறது என்பதை அத்தனை விமான பயணிகளும் யூகிப்பதற்குள்ளாகவே ஒட்டுமொத்த விமானமும் தரையில் விழுந்து நொறுங்கியது. இதில் பலரின் உடல்கள் அடையாளமே காணப்படாத முடியாத அளவுக்கு சிதையுண்டுவிட்டது. குடும்பத்தினரின் டிஎன்ஏக்கள் மூலம் விமான பயணிகளை அடையாளம் காண நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த கோர விபத்து கேட்போரின் இதயத்தை எல்லாம் நொறுக்கிக் கொண்டிருக்கும் அதேநேரத்தில் விமான பயணிகளின் பயண பின்னணி உணர்ச்சிகளை இன்னும் கசக்கி பிழிகிறது.
பிரதிக் ஜோஷி கடந்த 6 ஆண்டுகளாக லண்டனில் வசித்து வந்தார். பொறியாளரான இவர் இந்தியாவில் இருக்கும் குடும்பத்தை நிரந்தரமாக லண்டனுக்கு குடிபெயர அனைத்து வேலைகளையும் அண்மையில் தான் முடித்துவிட்டு இந்தியா திரும்பினார். நேற்று மூன்று குழந்தைகள் மற்றும் மருத்துவராக பணியாற்றிய மனைவி ஆகியோரை அழைத்துக் கொண்டு இந்தியாவுக்கு நிரந்தரமாக குட்பை சொல்லிவிட்டு மகிழ்ச்சியோடு ஏர் இந்தியா விமானத்தில் கிளம்பினார். அப்போது குடும்பத்தோடு இருக்கும் புகைப்படத்தையும் சமூக வலைதளத்தில் பகிர்ந்தார். ஆனால், அந்த புகைப்படம் பகிரப்பட்டு அடுத்த சில விநாடிகளில் விமானம் கீழே விழுந்து நொறுங்கியது. யாரும் உயிர்ப்பிழைக்கவில்லை.
குஷ்பூ ராஜ்புரோஹித். திருமணம் ஆகி 5 மாதங்களே ஆன பெண். கணவரை பார்க்க நேற்று மதியம் லண்டன் புறப்பட்டார். வழியனுப்ப வந்த தந்தையுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டு, அவருக்கு கண்ணீர் மல்க பிரியாவிடை கொடுத்து கணவரை சந்திக்கப்போகிறோம் என்ற ஆவலில் விமானத்தில் ஏறினார். ஆனால் இப்படியொரு பேராபத்து நிகழப்போகிறது என்பதை அவர் துளியும் அறிந்திருக்கவில்லை. அகமதாபாத் விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த பூனம் படேல், "என் மைத்துனி லண்டனுக்குச் சென்று கொண்டிருந்தார். ஒரு மணி நேரத்திற்குள், விமானம் விபத்துக்குள்ளானதாக எனக்கு செய்தி கிடைத்தது. அதனால் நான் இங்கு வந்துள்ளேன்," என்று குஜராத்தின் அகமதாபாத்தில் உள்ள சிவில் மருத்துவமனைக்கு வந்தபோது கண்ணீர்மல்க கூறினார்.
AI-171 விமான பயணியின் உறவினர் ஒருவர் கூறுகையில், "என் சகோதரி சிகிச்சைக்காக குஜராத் மாநிலம், நாடியாத்துக்கு வந்திருந்தார். அவருக்கு இன்று விமானப் பயணம் இருந்தது, லண்டனுக்குத் திரும்பினார். என் சகோதரி 15 வருடங்களாக லண்டனில் வசித்து வருகிறார், அவர் தனது கணவர் மற்றும் குழந்தைகளுடன் அங்கேயே தங்கியுள்ளார். நான் அவளை இறக்கிவிட விமான நிலையத்திற்குச் சென்றேன். ஆனால் இப்படி நடந்துவிட்டது" என கண்ணீரை அடக்க முடியாமல் குமுறினார்.
மணிப்பூரைச் சேர்ந்த இரண்டு பணிப்பெண்கள் இந்த விமான விபத்தில் உயிரிழந்தனர். ஆனால் அவர்கள் குடும்பத்தினர் எப்படியாவது எங்கள் மகள்கள் உயிர்பிழைத்து வருவார்கள் என நம்பிக்கையுடன் இருப்பதாக கூறுகின்றனர். மணிப்பூரில் பேசிய விமான பணிப்பென் பேசியபோது, நந்தோய் சர்மா கோங்கிரைலட்பமின் மீண்டு வருவாள் என காத்திருக்கிறோம். இரண்டு நாட்களுக்குள் வருவதாக கூறியிருந்தாள். அதற்குள் இப்படியாகிவிட்டது. ஏர் இந்தியா அதிகாரப்பூர்வ அறிவிப்புக்காக காத்திருக்கிறோம் என பதபதைப்புடன் பேசினார்.
இவர் பேசிய சில நிமிடங்களிலேயே ஒருவரை தவிர விமானத்தில் இருந்த 241 பேரும் உயிரிழந்துவிட்டதாக ஏர் இந்தியா அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. இதனைக் கேட்டு அந்த குடும்பத்தினர் கதறினர். மற்றொரு விமான பயணி நீண்ட நாட்களுக்குப் பிறகு குடும்பத்தினரை வந்து சந்தித்துவிட்டு லண்டன் புறப்பட்டிருக்கிறார். அவரும் இந்த விமான விபத்தில் உயிரிழந்திருக்கிறார். இப்படி ஒவ்வொரு விமான பயணிகளின் கதைகளும் நெஞ்சை உலுக்குகின்றன.
மேலும் படிங்க: MAYDAY என்றால் என்ன? விமானிகள் இந்த வார்த்தையை பயன்படுத்தவது ஏன்? முழு அர்த்தம்..
மேலும் படிங்க: குஜராத் விமான விபத்து: பலியானவர்களுக்கு தலா ரூ. 1 கோடி! டாடா குழுமம்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ









