)
Ahmedabad Plane Crash Viral Video : அகமதாபாத்தில் ஏர் இந்திய விமானம் விபத்துக்குள்ளாகி இந்தியா மற்றும் உலக மக்களிடையே பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. இந்த விமானத்தில் பயணித்த 242 பேரில் பிரிட்டன் குடியுரிமைப் பெற்ற விஸ்வாஸ்குமார் என்பவரை தவிர மற்ற அனைவரும் உயிரிழந்துள்ளனர். மகளை பார்க்க லண்டன் புறப்பட்ட குஜராத் மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சர் விஜய் ரூபானியும் இந்த விமான விபத்தில் மரணமடைந்துள்ளார். பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியிருக்கும் இந்த ஏர் இந்தியா விமான விபத்து குறித்து பிரதமர் நரேந்திர மோடி ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார். எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆகியோரும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளனர்.
இந்த சூழலில் இந்த விமானத்தில் பயணித்த பயணி ஒருவர், விமானத்தில் தொழில்நுட்ப கோளாறுகள் இருப்பதை சுட்டிக்காட்டி பதிவிட்ட வீடியோ இப்போது வைரலாகியுள்ளது. அகமதாபாத்தில் விபத்தில் சிக்கிய அந்த விமானத்தில், விபத்துக்கு 2 மணி நேரத்துக்கும் முன்னதாக பயணித்துள்ளார். ஆகாஷ் வாட்சா என்ற அவர் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டிருக்கும் அந்த வீடியோவில், விமானத்தில் பயணிகளுக்கான சீட்டில் இருக்கும் டச் ஸ்கிரீன், தொலைபேசி என எதுவும் வேலை செய்யவில்லை என தெரிவித்துள்ளார். மேலும் விமானத்தின் நிலையே அசௌகரியமாக இருந்ததாகவும் கூறியுள்ளார். நேரில் அழைத்தால் விமானம் குறித்த கூடுதல் தகவல்களை பகிர்ந்து கொள்ள தயாராக இருப்பதாகவும் தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் ஏர் இந்தியா விமான நிறுவனத்தை டேக் செய்து பதிவு போட்டுள்ளார்.
அதேநேரத்தில் விபத்தில் சிக்கியிருக்கும் ட்ரீம்லைனர் விமான தயாரிப்பில் ஈடுபட்ட பொறியாளர் ஒருவர் இந்த ஆண்டு தொடக்கத்திலேயே இந்த வகை விமானங்கள் மிகப்பெரிய விபத்தில் சிக்க வாய்ப்புள்ளதாக எச்சரித்துள்ளார். போயிங் பொறியாளர் சாம் சலேபூர் அமெரிக்க பெடரல் ஏவியேஷன் நிர்வாகத்திடம் (FAA) இதை புகாராகவும் பதிவு செய்திருக்கிறார். அதில், போயிங் நிறுவனம் 777 மற்றும் 787 விமானங்களின் உற்பத்தியின் போது குறுக்குவழிகளை எடுத்ததாக சாம் சலேபூர் குற்றம் சாட்டினார். இதில் தவறாக வடிவமைக்கப்பட்ட உடற்பகுதி பிரிவுகள் மற்றும் அசெம்பிளி செய்யும் போது சரியாக நிரப்பப்படாத நுண்ணிய இடைவெளிகளை அடிக்கோடிட்டு அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இப்படியான விமான கட்டமைப்பு, விமானத்தின் ஆயுட்காலத்தை வெகுவாக குறைக்கும், காலப்போக்கில் பேரழிவு தோல்வியை ஏற்படுத்தக்கூடும் என்றும் பொறியாளர் சாம் சலேபூர் எச்சரித்திருக்கிறார்.
அவர் கூறியிருக்கும் அந்த குற்றச்சாட்டில், ஊழியர்கள் விமானத்தின் துண்டுகளை சீரமைக்க அவற்றின் மீது குதிப்பதை நான்பார்த்தேன். ஒரு விமானத்தை இப்படி உருவாக்குவது என்பது மிகப்பெரிய தவறு என்று தெரிவித்தார். ஆனால் அவரின் குற்றச்சாட்டுகளை போயிங் நிறுவனம் கடுமையாக மறுத்து, இந்தக் கூற்றுக்கள் "தவறானவை" என்றும், 787 விமானத்தின் பாதுகாப்பு உறுதிப்படுத்தியதாகவும் அந்த நிறுவனம் தெரிவித்தது. இருப்பினும் சாம் சலேபூரின் அறிக்கையின் அடிப்படையில் FAA விசாரணை நடத்தி அவர் எழுப்பிய குற்றச்சாட்டுகள் குறித்த கவலைகளையும் போயிங் நிறுவனத்திடம் தெரிவித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
அகமதாபாத் விபத்துக்கு நீண்ட காலத்திற்கு முன்பே 787 ட்ரீம்லைனர் ஏற்கனவே கண்காணிப்பு வளையத்துக்குள் கொண்டு வரப்பட்டது. 2021 மற்றும் 2022-க்கு இடையில், சாம் சலேபூரால் சுட்டிக்காட்டப்பட்ட அதே ஃபியூஸ்லேஜ் இடைவெளிகள் உட்பட, தரக் கட்டுப்பாட்டு சிக்கல்கள் காரணமாக போயிங் மற்றும் FAA ஆகியவை விமானங்களின் விநியோகங்களை இடைநிறுத்தின. அப்போது போயிங் நிறுவனம் அதன் ஆய்வு மற்றும் உற்பத்தி செயல்முறைகளை மேம்படுத்தியதாகக் கூறியது. பின்னர் விநியோகங்கள் மீண்டும் தொடங்கின. இருப்பினும், சாம் சலேபூரின் விசில்ப்ளோவர் அறிக்கை, சிக்கல்கள் முழுமையாக தீர்க்கப்படவில்லை என்றும், தற்போது செயல்பாட்டில் உள்ள விமானங்களை இன்னும் பாதிக்கக்கூடும் என்றும் பரிந்துரைத்தது.
இதுகுறித்து சாம் சலேபூர் முன்பு கொடுத்த விளக்கத்தில், "நான் போயிங் தோல்வியடைய வேண்டும் என்பதற்காக இதைச் செய்யவில்லை, ஆனால் அது வெற்றிபெற வேண்டும் என்பதற்காகவும் - விபத்துக்கள் நிகழாமல் தடுக்கவும் விரும்புகிறேன். ஆனால் உண்மை என்னவென்றால், போயிங் அதன் வழியில் தொடர்ந்து செல்ல முடியாது." என தெரிவித்திருந்தார். இந்த சூழலில் தான் அகமதாபாத் விமான விபத்து நடந்திருக்கிறது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ