)
வங்கி கணக்குகள் மற்றும் லாக்கர் வசதிகளை பயன்படுத்தும் கோடிக்கணக்கான வாடிக்கையாளர்களுக்கு ஒரு முக்கிய நற்செய்தியாக, நிதி அமைச்சகம் புதிய வாரிசுதாரர் நியமன விதிகளை அறிவித்துள்ளது. வரும் நவம்பர் 1ம் தேதி முதல் அமலுக்கு வரும் இந்த அதிரடி மாற்றத்தின்படி, இனி ஒரு வங்கி கணக்கு அல்லது லாக்கருக்கு, ஒருவர் நான்கு வாரிசுதாரர்கள் வரை நியமிக்கலாம். இந்திய வங்கிகளில், பல்லாயிரம் கோடி ரூபாய், யாரும் உரிமை கோரப்படாமல் முடங்கி கிடக்கிறது. ரிசர்வ் வங்கியின் தகவல்படி, கடந்த ஜூன் மாதம் வரை, பொதுத்துறை வங்கிகளில் மட்டும் சுமார் ரூ.58,330 கோடியும், தனியார் வங்கிகளில் ரூ.8,673 கோடியும் இவ்வாறு உரிமை கோரப்படாமல் உள்ளது.

இதற்கு முக்கிய காரணம், வங்கி கணக்கு வைத்திருப்பவர் மரணமடைந்த பிறகு, அவரால் நியமிக்கப்பட்ட ஒரே வாரிசுதாரரும் இறந்துவிட்டால் அல்லது அந்த பணத்திற்கு உரிமை கோராமல் விட்டுவிடுவது தான். இவ்வாறு 10 ஆண்டுகளுக்கு மேல் பரிவர்த்தனைகள் செய்யப்படாத கணக்குகளில் உள்ள பணம், ரிசர்வ் வங்கியின் ‘டெபாசிட்டர் கல்வி மற்றும் விழிப்புணர்வு நிதிக்கு’ (Depositor Education and Awareness Fund) மாற்றப்பட்டு விடுகிறது. இந்த சிக்கலை தீர்க்கவும், உரிமை கோரப்படாத பணத்தின் அளவை குறைக்கவும், வங்கி சட்டங்களில் திருத்தம் செய்யப்பட்டு, இந்த புதிய விதி கொண்டுவரப்பட்டுள்ளது.
இதுவரை, ஒரு வங்கி கணக்கு அல்லது லாக்கருக்கு, ஒருவர் ஒரே ஒரு வாரிசுதாரரை மட்டுமே நியமிக்க முடியும். ஆனால், புதிய விதியின்படி, இனி நீங்கள் விரும்பும் நான்கு நபர்களை வாரிசுதாரர்களாக நியமிக்கலாம். வாரிசுதாரர்களை நியமிப்பதுடன், அவர்களுக்கு சேர வேண்டிய தொகையின் பங்கையும் (உதாரணமாக, ஒருவருக்கு 40%, மற்றொருவருக்கு 30% என) நீங்களே வெளிப்படையாக குறிப்பிடலாம். இது, பிற்காலத்தில் குடும்பத்தில் ஏற்படும் சொத்து பிரச்சினைகளை தவிர்க்க உதவும். இதே போல, வங்கி லாக்கர் பயன்படுத்துபவர்களும், நான்கு வாரிசுதாரர்களை நியமிக்கலாம். லாக்கர் வைத்திருப்பவர் ஒருவேளை மரணமடைந்தால், அவருக்கு பிறகு யார் அந்த லாக்கரை இயக்க வேண்டும் என்பதையும் முன்கூட்டியே தெளிவாகக் குறிப்பிடலாம்.
இந்த புதிய விதி, வாடிக்கையாளர்களுக்கு தங்கள் நிதியின் மீது அதிக கட்டுப்பாட்டையும், நெகிழ்வுத்தன்மையையும் வழங்குகிறது. ஒரு வாரிசுதாரருக்கு ஏதேனும் விரும்பத்தகாத நிகழ்வுகள் நடந்தாலும், மற்ற வாரிசுதாரர்கள் மூலம், உரிமை கோரல் செயல்முறையை எளிதாகவும், விரைவாகவும் முடிக்க முடியும். இது, வங்கிகளில் உரிமை கோரப்படாமல் முடங்கி கிடக்கும் பணம் மற்றும் உடைமைகளின் அளவை கணிசமாகக் குறைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த புதிய விதிகளை அமல்படுத்துவதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்குமாறு, அனைத்து வங்கிகளுக்கும் நிதி அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ