)
இந்தியாவில் ரயில் போக்குவரத்து மிகப்பெரிய ஒன்று. தினமும் லட்சக்கணக்கான பயணிகள் ரயிலில் பயணம் செய்கின்றனர். இந்நிலையில் இந்தியா முழுவதும் உள்ள கோடிக்கணக்கான ரயில் பயணிகளுக்கு மகிழ்ச்சியளிக்கும் விதமாக செய்தி ஒன்று வெளியாகி உள்ளது. சமீபத்திய ஜி.எஸ்.டி. வரி விகித திருத்தத்தின் பலனை பயணிகளுக்கு நேரடியாக வழங்கும் நோக்கில், இந்திய ரயில்வே தனது ரயில் நீர் குடிநீர் பாட்டில்களின் விலையை குறைத்துள்ளது. இந்த புதிய விலை மாற்றம் செப்டம்பர் 22 முதல் அமலுக்கு வந்துள்ளது. இந்தியாவின் முதன்மை போக்குவரத்துத் துறையாக விளங்கும் ரயில்வே, தினமும் சுமார் 13,000 ரயில்களை இயக்குகிறது. இந்த ரயில்களிலும், ரயில் நிலையங்களிலும் விற்கப்படும் அத்தியாவசிய பொருட்களின் விலையில் ஏற்படும் மாற்றம், லட்சக்கணக்கான பயணிகளை நேரடியாக பாதிக்கிறது.

சமீபத்தில் ஜி.எஸ்.டி. கவுன்சில், வரி விதிப்பு முறையை எளிமைப்படுத்தி பல பொருட்களுக்கான ஜி.எஸ்.டி. விகிதங்களை குறைத்தது. இதன் பலனை பயணிகளுக்கு வழங்கும் வகையில், இந்திய ரயில்வே இந்த விலை குறைப்பை அறிவித்துள்ளது. அதன்படி, ஒரு லிட்டர் ரயில் நீர் பாட்டில் விலை ரூ.15-லிருந்து ரூ.14 ஆக குறைக்கப்பட்டுள்ளது. மேலும் 500 மில்லி லிட்டர் ரயில் நீர் பாட்டில் விலை ரூ.10-லிருந்து ரூ.9 ஆக குறைக்கப்பட்டுள்ளது. இந்த விலை குறைப்பு, ரயில் நீர் பாட்டில்களுக்கு மட்டுமல்லாமல், ரயில்வேயால் அங்கீகரிக்கப்பட்ட மற்ற பிராண்டுகளின் குடிநீர் பாட்டில்களுக்கும் பொருந்தும் என்று ரயில்வே அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக, ரயில்வே வாரியம், IRCTC மற்றும் அனைத்து பொது மேலாளர்களுக்கும் அதிகாரப்பூர்வ சுற்றறிக்கையை அனுப்பியுள்ளது.
ஜி.எஸ்.டி. குறைப்பின் பலனை, உடனடியாக பயணிகளுக்கு வழங்க இந்திய ரயில்வே எடுத்துள்ள இந்த நடவடிக்கை, பொதுமக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. பண்டிகை காலத்தை முன்னிட்டு, பயணிகளின் செலவை குறைக்கும் இந்த அறிவிப்பு, அவர்களுக்கு ஒருவித நிம்மதியை அளித்துள்ளது. சமீபத்தில், ரயில்வே சில வகுப்புகளுக்கான பயண கட்டணங்களை உயர்த்தியிருந்த நிலையில், குடிநீர் போன்ற அத்தியாவசிய பொருட்களின் விலையை குறைத்திருப்பது ஒரு சமனப்படுத்தும் நடவடிக்கையாக பார்க்கப்படுகிறது. இந்த நடவடிக்கை, பயணிகளின் நலனில் அரசு அக்கறை கொண்டுள்ளது என்பதைபிரதிபலிப்பதாகப் பலரும் கருதுகின்றனர்.
நாட்டின் சரக்கு போக்குவரத்து மற்றும் தளவாட திறனை மேம்படுத்தும் ஒரு மாபெரும் முயற்சியாக, இந்திய ரயில்வே குறிப்பிட்ட பொருட்களுக்கான, நேர அட்டவணையுடன் கூடிய புதிய சரக்கு ரயில் சேவைகளை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த திட்டம் உற்பத்தி மையங்களையும், நுகர்வு மையங்களையும் குறித்த நேரத்தில் இணைத்து, வர்த்தகர்களுக்கு ஒரு நம்பகமான மற்றும் திறமையான போக்குவரத்து முறையை வழங்குவதை நோக்கமாக கொண்டுள்ளது. முதற்கட்டமாக, வட இந்தியாவில் பல முக்கிய வழித்தடங்களில் இந்த சேவைகள் தொடங்கப்பட்டுள்ளன. உணவு தானியங்கள், ஆட்டோமொபைல்கள், சிமெண்ட் மற்றும் கண்டெய்னர்கள் போன்ற குறிப்பிட்ட பொருட்களை கொண்டு செல்ல, பிரத்யேக ரயில்கள் இயக்கப்படுகின்றன.
இந்திய உணவு கழகம், ஆட்டோமொபைல் நிறுவனங்கள் மற்றும் கண்டெய்னர் ரயில் ஆபரேட்டர்கள் போன்ற பல்வேறு தரப்பினருடன் கலந்தாலோசித்து, இந்த திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. ஆரம்பத்தில் சோதனை அடிப்படையில் இயக்கப்பட்ட இந்த ரயில்கள், தற்போது வெற்றிகரமாக நிலைநிறுத்தப்பட்டு, திறமையாக இயங்கி வருகின்றன. ரயில்களின் புறப்பாடு மற்றும் வருகை குறித்த துல்லியமான நேர அட்டவணை மற்றும் முன்கூட்டியே வழங்கப்படும் தகவல்கள், சரக்குகளை அனுப்புபவர்கள் மற்றும் பெறுபவர்கள் தங்கள் தளவாடங்களை சிறப்பாகத் திட்டமிட உதவுகிறது. இது, சரக்கு போக்குவரத்தில் கணிக்க முடியாத தன்மையைக் குறைத்து, செயல்திறனை அதிகரிக்கிறது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ