)
Operation Mahadev, Amit Shah In Parliament: நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் கடந்த ஜூலை 21ஆம் தேதி தொடங்கிய நிலையில், அப்போது முதல் ஆபரேஷன் சிந்தூர் குறித்தும், இந்தியா - பாகிஸ்தான் போர் நிறுத்தம் குறித்தும் விவாதம் நடத்த வேண்டும் என எதிர்க்கட்சிகள் கோரிக்கை வைத்து வந்தன.
இந்நிலையில், நாடாளுமன்றத்தில் கடந்த இரண்டு நாள்களாக ஆபரேஷன் சிந்தூர் (Operation Mahadev) குறித்து விரிவான விவாதம் நடைபெற்று வருகிறது. மக்களவையில் இன்று மாலை 7 மணியளவில் பிரதமர் மோடி ஆபரேஷன் சிந்தூர் குறித்து விரிவாக உரையாற்ற இருக்கிறார்.
அந்த வகையில், இன்று காலை உள்துறை அமைச்சர் அமித்ஷா (Union Home Minister Amit Shah) 'ஆபரேஷன் மகாதேவ்' குறித்து விரிவாக மக்களவையில் பேசினார். பாதுகாப்பு படையினரால் நேற்று ஜம்மு காஷ்மீர் ஸ்ரீநகரில் நடத்திய ஆபரேஷன் மகாதேவ் நடவடிக்கையில் கொல்லப்பட்ட மூன்று பயங்கரவாதிகளும் பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்தவர்கள் என்றும் அவர்கள்தான் பகல்காம் தாக்குதலை நடத்தியவர்கள் என்றும் உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்தார்.
முன்னதாக, காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் (P Chidambaram) பேசியபோது, பகல்காம் தாக்குதல் நடத்தியவர்கள் இந்திய நாட்டிலேயே இருந்தவர்களாக கூட இருக்கலாம் என்றும் பாகிஸ்தான் தொடர்புடையவர்கள் என்பதற்கு ஆதாரம் என்ன என்றும் தனது சந்தேகத்தை கேள்வியாக எழுப்பியிருந்தார். அதற்கு பதில் அளித்தே அமித்ஷா பேசினார். அவர்களின் அடையாளம் மற்றும் அவர்கள் எந்த நாட்டினர் என்பதற்கான மறுக்க முடியாத ஆதாரம் இந்தியாவிடம் இருப்பதாக அமித்ஷா கூறினார். இதுபோன்ற பேச்சுக்கள் மூலம் ப. சிதம்பரம் பாகிஸ்தானை நிரபராதி என கூறுவதாக அவர் குற்றஞ்சாட்டினார்.
#WATCH | Delhi | On Congress leader P Chidambaram's statement, Union Home Minister Amit Shah says, "Yesterday, former Home Minister Chidambaram raised a question about the proof of the terrorists coming from Pakistan... Whom does he want to save? What will he gain by defending… pic.twitter.com/govXFoKFXC
— ANI (@ANI) July 29, 2025
குறிப்பாக, கொல்லப்பட்ட பயங்கரவாதிகளின் அடையாளம் மற்றும் பூர்வீகம் குறித்து பேசுகையில், மூவரில் இருவரிடம் இருந்து பாகிஸ்தானிய வாக்காளர் அடையாள அட்டை எண் இருந்ததாக தெரிவித்தார். மேலும் அவர்கள் வைத்திருந்த சாக்லேட்டுகள் அனைத்தும் பாகிஸ்தானில் தயாரிக்கப்பட்டது என்றும் அவர் கூறினார்.
ப. சிதம்பரம்: (அரசு) அவர்களை பயங்கரவாதிகள் என அடையாளம் கண்டதா? அவர்கள் எங்கிருந்து வந்தார்கள்? அதாவது, நமக்குத் தெரிந்தவரை, அவர்கள் உள்நாட்டில் வளர்க்கப்பட்ட பயங்கரவாதிகளாக இருக்கலாம். அவர்கள் பாகிஸ்தானில் இருந்து வந்தவர்கள் என்று நீங்கள் ஏன் நினைக்கிறீர்கள்? அதற்கு எந்த ஆதாரமும் இல்லை.
உடனே அமித்ஷா: இவர்கள்தான் பகல்காம் தாக்குதலில் ஈடுபட்ட பயங்கரவாதிகள். எங்களிடம் (அரசிடம்) மறுக்க முடியாத ஆதாரம் இருக்கிறது. அவர்களின் பாகிஸ்தான் வாக்காளர் எண்கள் கண்டுபிடிக்கப்பட்டன. இதைவிட வேறு என்ன ஆதாரம் தேவை?. நேற்று அவர்கள் (காங்கிரஸ்) பயங்கரவாதிகள் எங்கிருந்து வந்தார்கள், அதற்கு யார் பொறுப்பு என்று கேட்டார்கள். நிச்சயமாக, நாங்கள் ஆட்சியில் இருப்பதால் அதை சொல்ல வேண்டியது எங்களின் பொறுப்பு.
நேற்று, முன்னாள் உள்துறை அமைச்சர் சிதம்பரம் கேள்வி எழுப்பினார் - பயங்கரவாதிகள் பாகிஸ்தானில் இருந்து வந்தார்கள் என்பதற்கான ஆதாரம் என்ன? பாகிஸ்தானைக் காப்பாற்றுவதன் மூலம் அவருக்கு என்ன கிடைக்கும் என்று நான் அவரிடம் கேட்க விரும்புகிறேன். அவர் இதைச் சொல்லும்போது, அவர்கள் பாகிஸ்தான் குற்றம் செய்யவில்லை என கூறுவது தானே அர்த்தம்...
ஆபரேஷன் மகாதேவ் நடவடிக்கையில் கொல்லப்பட்ட பயங்கரவாதிகள் யார், அவர்களை எப்படி பாதுகாப்பு படையினர் கண்டறிந்து சுட்டு வீழ்த்தினர் என்றும் உள்துறை அமைச்சர் அமித்ஷா விளக்கம் அளித்தார்.
ஏப்ரல் 22ஆம் தேதி நடந்த பகல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு பிறகு, பயங்கரவாதிகளுக்கு அடைக்கலம் கொடுத்தவர்களால் தற்போது கொல்லப்பட்ட மூன்று பேரும் அடையாளம் காணப்பட்டனர் என தெரிவித்தார். அவர்கள் லஷ்கர் அமைப்பின் உயர்மட்ட தளபதி சுலைமான் ஷா, ஆப்கான் மற்றும் ஜிப்ரான் ஆகிய மூன்று பயங்கரவாதிகள் என்றும் பகல்காம் தாக்குதல் நடத்தியவர்கள் என்றும் அடையாளம் காணப்பட்டதாக அமித்ஷா கூறினார்.
கடந்த மாதம், தாக்குதல் நடத்தியவர்களுக்கு அடைக்கலம் கொடுத்ததாகக் கூறி, உள்ளூர்வாசிகளான பர்வைஸ் அகமது ஜோதர், பஷீர் அகமது ஆகிய இருவரை தேசிய புலனாய்வு முகமை (NIA) கைது செய்தது. அவர்கள் தான் தற்போது இந்த மூவரையும் அடையாளம் கண்டுள்ளனர். "அவர்களுக்கு (பயங்கரவாதிகளுக்கு) உணவு வழங்கியவர்கள் முன்பே கைது செய்யப்பட்டனர். இந்த பயங்கரவாதிகளின் உடல்கள் ஸ்ரீநகருக்கு கொண்டு வரப்பட்டவுடன், கைது செய்யப்பட்டவர்களால் அவர்கள் அடையாளம் காணப்பட்டனர்" என அமித்ஷா தெரிவித்தார்.
பகல்காம் தாக்குதல் நடத்தப்பட்டு சில மணி நேரங்களுக்குப் பிறகு பயங்கரவாதிகளைப் பிடிக்க திட்டங்கள் வகுக்கப்பட்டன என்றும், அவர்களை நாட்டை விட்டு வெளியேற அனுமதிக்க வேண்டாம் என்றும் பாதுகாப்புப் படையினருக்கு உத்தரவிட்டதாகவும் அமித்ஷா தெரிவித்தார். கடந்த மே 22ஆம் தேதி அன்று, டச்சிகாம் காடுகளில் பயங்கரவாதிகள் இருப்பது குறித்து உளவுத்துறை தகவல் கிடைத்ததாக அவர் கூறினார். "வீரர்கள் சிக்னல்களைப் பெறுவதற்காக அதிக உயரத்தில் குளிரில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். ஜூலை 22ஆம் தேதி அன்று வெற்றி கிடைத்தது. சென்சார்கள் மூலம் அந்தப் பகுதியில் பயங்கரவாதிகள் இருப்பதை உறுதி செய்தோம்" என்று அவர் கூறினார்.
கொல்லப்பட்ட பயங்கரவாதிகளும், பகல்காம் தாக்குதலில் ஈடுபட்டவர்களும் ஒரே நபர்கள் என அடையாளம் காண பாதுகாப்பு படையினர் அதிக முயற்சி எடுத்ததாக அமித்ஷா கூறினார். உண்மைச் சரிபார்ப்பிற்கு பிறகுதான் விவரங்கள் படிப்படியாக ஊடகங்களுக்குத் தெரியவந்தன என்றார்.
"பயங்கரவாதத் தாக்குதலில் இருந்து தோட்டாக்களின் தடய அறிவியல் ஆய்வகத்தின் (FSL) அறிக்கை ஏற்கனவே தயாராக இருந்தது. நேற்று, மூன்று பயங்கரவாதிகளின் துப்பாக்கிகள் கைப்பற்றப்பட்டு தடய அறிவியல் ஆய்வகத்தின் அறிக்கைகளுடன் அவை பொருந்தின. அதன் பிறகு, இந்த மூவரும் பயங்கரவாதத் தாக்குதலை நடத்தியவர்கள் என்பது உறுதி செய்யப்பட்டது," என்று அமித்ஷா கூறினார். மறைவிடத்தில் இருந்து சுமார் 17 கையெறி குண்டுகள், ஒரு அமெரிக்காவில் தயாரிக்கப்பட்ட M4 கார்பைன் வகை குண்டுகள் மற்றும் இரண்டு AK-47 துப்பாக்கிகள் மீட்கப்பட்டன என்றார்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ